
ஆறு முகங்கள் கொண்டவர், முருகர். இதனால் தான், ஆறுமுகம் என்றும், ஆறுமுக நயினார் என்றும், இவருக்கு பெயர் இருக்கிறது. ஆனால், ஐந்து முகங்களுடனும் முருகன் இருந்ததாக, தல வரலாறு கூறுகிறது. கோயம்புத்துார் மாவட்டம், அன்னுார் அருகிலுள்ள, இரும்பறை ஓதிமலையாண்டவர் கோவிலில், இவரைத் தரிசிக்கலாம்.திங்கள், வெள்ளி மட்டுமே இந்தக் கோவில் திறக்கும் என்பது, இன்னொரு விசேஷம். இவருக்கு ஏன் ஐந்து முகங்கள் என்பதன் காரணம், இது தான்:ஒரு உயிர் பிறப்பதற்குரிய அடிப்படை மந்திரம், 'ஓம்!' இதை பிரணவம் என்பர். பிரணவம் என்றால் சுவாசம், ஆன்மா என்று, பல பொருள். நம் உடலில், அகாரம், மகாரம், உகாரம் என்ற சக்திகள் உள்ளன. இடுப்பில், அகாரம் என்ற சக்தி உள்ளது; இதை, குண்டலினி என்பர். தொப்புளில், மகாரம் என்ற சக்தி உள்ளது; அதை, உயிர் என்றும், காற்று என்றும் சொல்வர். தலையில், உகாரம் என்ற சக்தி இருக்கிறது; இதையே, ஆன்மா என்கிறோம். இந்த மூன்றும் ஒன்று சேர்ந்தால், முழு உயிர் பிறக்கிறது. இதையே பிரணவம் என்பர். விஞ்ஞானத்தில், 'நியூட்ரான்' - காற்று, 'எலக்ட்ரான்' - நெருப்பு, 'புரோட்டான்' - சப்தம் என்ற மூன்றும் சேர்ந்ததே அணு. அதுபோல் உயிர், காற்று, சப்தம் சேர்ந்தால் தான், ஒரு பிறப்பு உண்டாகிறது. இதை, 'ஓம்' என்கின்றனர்.ஓம் என்ற மந்திரத்துக்கு, 'என்றும் புதியது' என்றும் பொருள். ஆம்... ஒரு ஆன்மா, எப்போது வேண்டுமானாலும் பிறக்கும், எப்போது வேண்டுமானாலும் மடியும். எனவே, அது புதிதாகவே இருக்கிறது. உடல் மட்டுமே ஒரு வளர்ச்சிக்குப் பின் சாய்ந்து விடும். கடவுளும், பிறப்பு இறப்பற்ற புதியவராகவே இருக்கிறார். இந்த அடிப்படை பிரம்மாவுக்குத் தெரியாததால், முருகன், அவரை சிறையில் அடைத்து விட்டார். தானே படைப்புத் தொழிலை ஆரம்பித்தார். தன் தந்தைக்கும் அந்த பிரணவத்தின் பொருளை ஓதினார். எனவே, இவருக்கு, 'ஓதிமலையாண்டவர்' என்ற பெயர் ஏற்பட்டது.சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்து முகங்கள் இருக்கின்றன. இந்த முகங்களின் மூலமே படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய தொழில்களை செய்கிறார். அதனடிப்படையில், அவரது பிள்ளையான முருகனும், படைப்புத் தொழில் செய்த காலத்தில், ஐந்து முகங்களுடன் இருந்தார். இதை மனதில் வைத்து, இங்குள்ள சிலை வடிக்கப்பட்டுள்ளது.முருகனின் இத்தகைய அமைப்பைக் காண்பது அபூர்வம். இந்த முருகனை, 'கவுஞ்ச வேதமூர்த்தி' என்பர். இதற்கு, புதைந்து கிடக்கும் பொருளை வெளிக்கொண்டு வருபவர், என பொருள். 'ஓம்' என்ற மந்திரத்தின் பொருளை வெளிக் கொண்டு வந்தவர் என்பதால், இந்த பெயர் சூட்டப்பட்டது. ஓதிமலை அடிவாரத்தில், சுயம்பு விநாயகர் உள்ளார். காசி விஸ்வநாதர், விசாலாட்சி சன்னிதிகளுக்கு நடுவே முருகன் இருக்கும்படியாக, சோமாஸ்கந்த அமைப்பில் இக்கோவில் உள்ளது. இடும்பன், சப்தகன்னியர் சன்னிதிகள் உள்ளன.முருகன், இரும்பு அறையில் பிரம்மாவை சிறைப்படுத்தியதால் இவ்வூர், 'இரும்பறை' எனப் படுகிறது. திருமணத்தடை உள்ளோர், இங்குள்ள கல்யாண சுப்பிரமணியரை வழிபடுகின்றனர்.ஒரு செயலைத் துவங்கும் முன், வெள்ளைப் பூவையும், சிவப்பு பூவையும் தனித்தனி இலைகளில் கட்டி, முருகன் முன்னிலையில் வைக்கின்றனர். அர்ச்சகர் அல்லது குழந்தைகள், மனதில் நினைத்த பூ பொட்டலத்தை எடுத்து தந்தால், அந்த செயலை துவங்கலாம் என முடிவெடுக்கின்றனர். இந்த சடங்கிற்கு, 'வரம் கேட்டல்' என்று பெயர்.கோவை- சத்தியமங்கலம் சாலையில், 48 கி.மீ., துாரத்தில் புளியம்பட்டி வரும். இங்கிருந்து பிரியும் சாலையில், 10 கி.மீ., சென்றால் இரும்பறையை அடையலாம். திங்கள், வெள்ளி, வளர்பிறை சஷ்டி, கிருத்திகை, அமாவாசை நாட்களில் காலை, 10:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.
தி.செல்லப்பா

