
* ஜி.குணசேகரன், கோவை: பிரதமர் மோடி, நம் நாட்டிலேயே இல்லாமல், உலகை சுற்றி வந்து கொண்டிருக்கிறாரே... இதனால், மக்களின் வரிப்பணம் பல கோடி செலவாகியுள்ளது எனக் கூறுகின்றனரே... இது ஏன்?
நமக்காகத்தான்! நம் நாடு இன்னும் முன்னேற, மக்கள் மேன்மேலும் வளம் பெற, உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார்! உங்கள் வீட்டிலோ, அலுவலகத்திலோ உள்ள கடிகாரத்தின் முள், ஒரே இடத்தில் நிற்காமல் சுற்றிக் கொண்டே இருப்பதால் தானே, நமக்கு நேரம் தெரிகிறது... அதேபோல் தான் இது.
* எஸ்.சுப்புலட்சுமி, பசுவந்தனை: காதல் தோல்வி அடைந்த இளைஞர்கள், முன்பு, தாடி வளர்த்தனர்... இன்று, அரிவாளைத் துாக்க ஆரம்பித்து விட்டனரே...
'சினிமா' தான் காரணம்! திரைப் படங்களில், அரிவாள் காட்சிகள் அதிகம் இடம் பெறுவதால், இதுபோன்ற நிகழ்வுகள், அதிகரித்து விட்டன. பத்திரிகைகளிலும், 'டிவி'களிலும், இதற்கு, எத்தனை ஆண்டுகள் சிறை தண்டனை என்பதை பார்த்து, இன்னும், இளைஞர்கள் திருந்தவில்லையே என்பது தான், வருத்தத்தை அளிக்கிறது.
என்.பத்மஹரிப்ரியா, ஸ்ரீரங்கம், திருச்சி மாவட்டம்: அந்துமணியாரே... இந்த ஆண்டு, 'ஓசி'யில் காலண்டர் வாங்கியதுண்டா?
நம் அலுவலகத்திலேயே கேட்டுப் பார்த்தேன்... ஆனால், விற்பனைப் பிரிவு மேலாளர், அனிஷ், 15 ரூபாய் கொடுத்து வாங்கிக் கொள்ள சொல்லி விட்டார்! ஆனால், 30க்கும் மேற்பட்ட மிகப்பெரிய நிறுவனங்களில் இருந்து, 'காலண்டர் - டைரி'கள் வந்து விட்டன! ஒரு, 'செட்' மட்டும் எடுத்துக் கொண்டு, மற்றவற்றை, வினியோகித்து விட்டேன்!
* ஆர்.வாணுமாமலைப் பெருமாள், வசந்தபுரம், பரமக்குடி: பெண்களும், இன்று, மது குடிக்கின்றனரே... அதுபற்றி, உங்கள் கருத்து என்ன?
ஆண்களுக்கு மட்டும் தான் அந்த உரிமை உண்டு, பெண்களுக்கு கிடையாது என்று யார் தடுத்தது... யார் கூறியது? இன்று அல்ல... ராவணனின் அரசவையிலேயே, பெண்கள் மது அருந்தியதாக சரித்திரத்தில் கூறப்பட்டுள்ளதே...
'சோம லதா' என்ற கொடி, முற்காலத்தில் இருந்தது; அதை, ஹோமங்களில் போடும் பழக்கமும் இருந்தது. அந்த இலையை கசக்கிப் பிழிந்தால், கிடைக்கும் சாறு, இன்றைய, உ.பா., போல் இருக்குமாம். இதை, ரம்பை, ஊர்வசி, திலோத்தமை விரும்பி அருந்துவராம்... நீங்கள் படித்ததில்லையா?
ஏன்... உங்கள் ஊர் பெயரே, 'குடி'யில் தான் முடிகிறது என்பதை, மறந்து விட்டீர்களோ!
எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி, திருச்சி மாவட்டம்:சினிமா பாடலாசிரியர், வைரமுத்து, இப்போது எப்படி இருக்கிறார்?
சமீபத்தில், தொலைபேசியில் அழைத்தார்... நன்றாக, நகைப்புடன் பேசினார்! அவர் மீதான, 'மீ - டூ' என, வரும் புகார்கள் பற்றி எதுவும் கேட்கவில்லை; ஆனால், ஒரு கூட்டம் தொடர்பாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டியில் இருந்த வைரமுத்து படத்தில், அவரின் தலைமுடி குறைவாக இருந்ததை கவனித்து இருந்தேன். அதை ஒட்டி அவரிடம் கேட்டேன்... 'ஏன், தலைமுடி வெட்டியவுடன், புகைப்படம் எடுத்துக் கொண்டீர்கள்...' என்று!
'அட... வயதாகிறது அல்லவா... கொட்டுகிறது முடி...' என்று கூறி, தொலைபேசியை துண்டித்தார்!
ஆனால், அவர், உண்மை இல்லாததை பொருட்படுத்துவது இல்லை; பொய்யாக வரும் குற்றச்சாட்டுகளையும் புறம்தள்ளி விடுவார் என்பது, எனக்குத் தெரியும்!
எஸ்.சரவணன், மதுரை: என் வயது, 27; திருமணம் செய்து கொள்ளலாமா?
ஏற்ற வயது தான்; ஆனால், குடும்பம் நடத்துவதற்கு தேவையான பணம் சம்பாதிக்கிறீர்களா என்பதை சொல்லவில்லையே!