
பா - கே
அன்று இரவு, கடற்கரையில், நண்பர்கள் கூட்டம் குழுமியிருந்தது. சற்று தொலைவில், நடுத்தர வயதுடைய, கணவன் - மனைவி அமர்ந்திருந்தனர். அவர்களுக்குள் ஏதோ வாக்குவாதம். கணவன் தலைகுனிந்தபடி இருக்க, மனைவி ஏதோ படபடவென்று பேசியபடி இருந்தார். 'லைட் ஹவுசில்' இருந்து வெளியான ஒளியிலிருந்து இதை காண முடிந்தது.
'இந்த மனைவிமார்கள் எல்லாம் எதற்கு தான் இப்படி கணவனை வறுத்தெடுக்கின்றனரோ...' என்றார், லென்ஸ் மாமா. அருகிலிருந்த குப்பண்ணா, 'ஓய்... சாதாரண மனைவிமார்கள் மட்டும் இல்லை... பிரபலமானவர்களின் மனைவியரும் இப்படி தான்...' என, ஆரம்பித்தார்...
உடனே நான், 'டால்ஸ்டாய், புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர்; மகா ஞானி என்பர். ஆனால், அவரே, மனைவியின் தொல்லை தாங்காமல், வீட்டை விட்டு வெளியேறி, எங்கோ ஒரு ரயில் நிலைய நடைமேடையில் இறந்து கிடந்தாராமே...' என்று கேட்டேன், குப்பண்ணாவிடம்.
'நடைமேடையில் அல்ல; ரயில் நிலைய காத்திருப்பாளர் அறையில் தங்கியிருந்தார், சில நாட்கள். அப்புறம், உடல்நிலை கெட்டு, அங்கேயே இறந்து விட்டார்...'
'அவரை, அவர் மனைவி ஏன் துன்பப்படுத்தினாள்?' என்றேன், நான்.
'தன் நில புலன்களை எல்லாம், ஏழை மக்களுக்கு பிரித்துக் கொடுத்து விட்டார், டால்ஸ்டாய். மிஞ்சி இருந்தது, அவரது புத்தகங்களின் விற்பனை உரிமை மட்டுமே. அந்த, 'ராயல்டி' வருமானத்தை வைத்து தான், அவரது குடும்பம் நடந்து வந்தது.
'டால்ஸ்டாய், என்ன செய்தார் தெரியுமா, திடுதிப்பென்று ஒருநாள், 'என் புத்தகங்களை, இனிமேல் யார் வேண்டுமானாலும் வெளியிட்டுக் கொள்ளலாம்...' என்று, நாட்டுடமை ஆக்கி விட்டார். சும்மா இருப்பாளா மனைவி, ஒரே சண்டை. வீட்டை விட்டு வெளியேறும்படி ஆகி விட்டது, டால்ஸ்டாய்க்கு.
'பொதுவாக, கவிஞர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள் எல்லாம், புற உலகத்தோடு ஒட்ட மாட்டார்கள். தங்களுக்குள் ஏதோ ஒரு தனி உலகை அமைத்து, அதிலேயே சஞ்சரிப்பர். அதனால் தான், அவர்களால் குடும்பத்துடன் ஒட்ட முடிவதில்லை. அவர்களும், இவர்களோடு ஒட்டுவதில்லை; புறக்கணிக்கவோ அல்லது பொருட்படுத்தாமலோ செய்து விடுகின்றனர்...' என்ற, குப்பண்ணாவே தொடர்ந்தார்...
'என்ன செய்வது... கலைஞர்கள், தங்கள் இயல்பை மாற்றிக் கொள்ள முடியாது. முடிந்தால், அதன்பின், அவனால், கலைஞனாகவும் இருக்க முடியாது. எவ்வளவு பெரிய உலகப் புகழ்பெற்ற கவிஞன், மில்டன். அவன் எழுதிய, 'இழந்த சொர்க்கம்' மற்றும் 'மீண்டும் சொர்க்கம்' ஆகிய இரண்டு கவிதை நுால்களும் உலகம் முழுவதும் போற்றப்படுகிறது.
'ஒரு நிகழ்ச்சியில், அவனிடம், 'உங்கள் குடும்ப வாழ்க்கை பற்றி சொல்லுங்கள்...' என்று கேட்ட போது, 'என் படைப்புகளே, அதை உங்களுக்கு தெரிவிக்குமே... எனக்கு திருமணமாகி, மனைவி, வீட்டுக்கு வந்தபோது, எழுதியது, 'இழந்த சொர்க்கம்!' என் மனைவி கர்ப்பமான பின், நான் தனி மனிதனாகி எழுதியது, 'மீண்டும் சொர்க்கம்' என்றான்...' என்றார், குப்பண்ணா.
உடன் இருந்த, 'திண்ணை' நடுத்தெரு நாராயணன், 'எனக்கு கல்யாணமான புதுசிலே, என் மனைவியை பாராட்ட நினைச்சேன். வழக்கமா, 'தாமரைப் பூ முகத்தழகி' என்று தானே புகழ்வர். சற்று புதுமையாக இருக்கட்டுமே என்று, நான், அவளை, 'முல்லை பூ முகத்தழகி' என்று சொன்னேன். அவள், என்னை கரண்டியால் அடித்து விட்டாள்...' என்றார், வருத்தத்துடன்.
'பின்னே, முல்லை பூ போல் முகம் இருப்பது, மூஞ்சூறுக்கு தானே...' என்றார், குப்பண்ணா.
இந்த தமாஷை எல்லாம் கேட்காமல், 'அங்கிள் ஜானி'யுடன் பேசப் போய் விட்டார், லென்ஸ் மாமா!
ப
தினமலர் - வாரமலர் வாசகியும், மன நல ஆலோசகருமான, ஜெ.ருக்மணி எழுதிய கடிதம்:
ஜன., 6, 2019 வாரமலர் இதழில், பா.கே.ப., பகுதியில், தெருவோர கடையில் விற்கும் அன்னாசி பழம் மூலம் ஒரு சிறுவனுக்கு, 'எய்ட்ஸ்' நோய் பரவியதாக, குப்பண்ணா கூறியதாக கட்டுரை வெளியாகி இருந்தது.
பழ வியாபாரிக்கு, 'எய்ட்ஸ்' நோய் இருந்தாலும், அவருக்கு ஏற்பட்ட வெட்டுக்காயம் மூலம், மற்றவர்களுக்கு அது பரவாது. ஏனெனில், எச்.ஐ.வி., வைரஸ், மனித உடலுக்குள் மட்டும் தான் வாழ இயலும்.உடலுக்கு வெளியே அவை வாழ்வதற்கு தகுந்த கூறுகள் மிகவும் குறைவு.
கடந்த, 2005ம் ஆண்டில் இருந்தே இதுபோன்ற தவறான தகவல்கள், முகநுால், அதாவது மூஞ்சி புத்தகம் மற்றும் 'வாட்ஸ் ஆப்' மூலமாக பரவி வருகிறது.
அதனால், சரியான மற்றும் முழுமையான தகவல் அறிய, சில விளக்கங்களை, கடமை உணர்ச்சியுடன் சமர்ப்பிக்கிறேன். இதை வெளியிட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால், என்றென்றும் நன்றி உள்ளவளாக இருப்பேன்.
எச்.ஐ.வி., - 'எய்ட்ஸ்' எப்படி பரவக்கூடும்
* பாதுகாப்பற்ற உடல் உறவின் மூலம்
* எச்.ஐ.வி., கிருமிகள் அடங்கிய ரத்தம் ஏற்றப்படுவதால்
* கொதிக்க வைக்காத, சுத்தப்படுத்தப் படாத ஊசி அல்லது 'எய்ட்ஸ்' நோயாளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட ஊசியை மீண்டும் உபயோகிப்பதன் மூலம்
* எச்.ஐ.வி., கிருமிகளால் பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து அவரது குழந்தைக்கும்.
எச்.ஐ.வி., கீழ்கண்ட முறைகளில் பரவ வாய்ப்பே இல்லை
* உணவு மற்றும் துணிகளை பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் ஒரே கழிப்பறையை பயன்படுத்துவதால்
* தொடுவதன் மூலம்
* கொசுக்கடி மூலம்
* சேர்ந்து பணியாற்றுவதால்
* மிருகங்கள், பூச்சிகள் மற்றும் மீன்கள் மூலமாக
* தக்காளி சாஸ், குளிர் பானங்கள் அதிகம் எடுத்து கொள்வதால்
* தண்ணீர், காற்று, கட்டிப்பிடிப்பது மற்றும் சிகரெட் மூலம் பரவாது.
எச்.ஐ.வி., - 'எய்ட்ஸ்'லிருந்து, நம்மை எப்படி தற்காத்துக் கொள்வது?
* திருமணத்திற்கு முன், உடலுறவை தவிர்க்கவும்
* நீங்கள் உறவு கொள்ள இருக்கும் நபர், இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பாரோ என சந்தேகிக்கும்பட்சத்தில், உடலுறவின்போது, ஆணுறையை பயன்படுத்தவும்
* சுத்திகரிக்கப்பட்ட, புதிய ஊசிகள் மற்றும் ஒரே முறை பயன்படுத்தத் தக்க ஊசிகளை மட்டுமே பயன்படுத்தவும்
* ரத்தம் மற்றும் ரத்தம் சார்ந்த உபரி பொருட்கள், எச்.ஐ.வி., வைரஸ்கள் அற்றதாக உள்ளதா என, பரிசோதித்து அறிந்த பின்னரே பயன்படுத்தவும்
* உறுப்பு தானத்தின்போதும், எச்.ஐ.வி., தொற்று இல்லாததா என்று பரிசோதித்து உறுதி செய்வது அவசியம்.
முக்கிய குறிப்பு: எச்.ஐ.வி., - 'எய்ட்ஸ்' தொற்று நோயில்லை. எச்.ஐ.வி., பாசிட்டிவ் ஆன நபரை, ஒதுக்கி வைக்காமல், அவருடன் சகஜமாக பழகலாம்.
— இப்படி எழுதியிருந்தார், வாசகி.
'எய்ட்ஸ்' நோய் பற்றிய இதே விளக்கத்தை அளித்துள்ளார், நரம்பியல் மருத்துவர், வி.நாகராஜன்.