
ஐ.லலிதாமதி, மதுரை:சைக்கிளில் சென்று, அலுவலக ஊழியர்களுக்கு, 'பிளாஸ்கில்' தேனீர், காபி வாங்கி கொடுக்கிறீர்களே... இவற்றில் உங்களுக்கு பிடித்தது எது... ஒரு நாளில் எத்தனை சாப்பிடுவீர்கள்?
இரண்டுமே இல்லை! தொண்டை தாங்கும் அளவில் உள்ள சுடு நீரை பலமுறை பருகுவேன்! ஹி... ஹி...
எஸ்.பிரேமா, சென்னை: சரளமாக, ஆங்கிலப் பேச்சு வரவில்லை என்பது, முன்னேற்றத்திற்கு தடையாகுமா?
இல்லை! பல உதாரணங்கள் கூற முடியும்! ஒன்றே ஒன்றை மட்டும் கூறுகிறேன்... தெற்கு மாவட்டத்திலிருந்து, ரயில் டிக்கெட் பெற கூட வசதி இல்லாமல், 'வித் - அவுட்'டில் சென்னை வந்தார் ஒருவர்!
இங்கு வந்ததும், 'டீ கேனை' சைக்கிளில் வைத்து விற்றார்... அவருக்கு, 'ஏ, பி, சி, டி...' கூடத் தெரியாது... இன்று, அவர், மறைந்து விட்டார் என்றாலும், அவர் ஆரம்பித்த தொழிலை, அவரது மகன், பல முன்னணி நடிகையருடன் இணைந்து, தம் நிறுவனத்திற்கான விளம்பரங்களில் நடிக்க வைத்துள்ளதே!
'ஏ, பி, சி, டி... நோ பிராப்ளம்!'
ஏ.பி.ராமன், சென்னை: பழைய பாடல்களை அதிக அளவில், மக்கள் விரும்புவதற்கு என்ன காரணம்?
பணியிலிருந்து நீங்கள் ஓய்வுபெற்று, 10 ஆண்டுகள் முடிந்து விட்டது... இப்போது, உங்கள் வயது, 70துக்கு மேல் தாண்டி விட்டது என்று எடுத்துக் கொள்ளலாமா...
'வாராய் நீ வாராய்' என, திருச்சி லோகநாதன் பாடலையே நினைத்துக் கொண்டிருப்பீர்கள் எனத் தோன்றுகிறது... உங்களது, கொள்ளுப் பேரனுக்கே இப்போது, 10 வயது ஆகி இருக்கும்... கொஞ்சம், 'யங்' ஆக முயலுங்களேன்!
கே.மீனாட்சி சுந்தரம், திருப்பூர்: மூட நம்பிக்கைகள், நம் நாட்டில் மட்டும் தானா; மேற்கத்திய நாடுகளிலும் உண்டா?
உண்டு! எனக்குத் தெரிந்து, பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் உள்ளது; மற்ற நாடுகளிலும் இருக்கலாம்! மேற்கூறிய இரு நாடுகளிலும், கறுப்புப் பூனை குறுக்கே செல்லுதல், ஒரே தீக்குச்சியில் மூன்று பேர் சிகரெட் பற்ற வைத்தல், கண்ணாடி உடைதல், 11 மற்றும் 13ம் எண்கள் அதிர்ஷ்டம் இல்லாதவை என்ற மூட நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்! பல அடுக்கு மாடி தங்கும் விடுதிகளில், 11, 13 தளங்களே கிடையாது... 10க்கு பிறகு, 12 மற்றும் 12க்கு பிறகு, 14வது தளங்களே உள்ளன!
* எஸ்.ஸ்ரீதேவி, திண்டுக்கல்: வருங்கால அரசியல், அரசு எல்லாம், நடிகர்கள் கையில் தான் என்று, என் தோழி கூறுகிறாளே...
தவறு... எம்.ஜி.ஆர்., - ஜெ.,யுடன் அது முடிந்து விட்டது! இப்போது குதித்திருப்பவரும், குதிக்க நினைப்போருக்கும் ஒரு இடம் கூட கிடைக்காது என்பது, என் கணிப்பு!
* எஸ்.ஆர்.சக்திவேல், திண்டுக்கல்: பத்திரிகைகள், 'டிவி' சேனல்களில் பணியாற்றும், பெண் நிருபர்கள் பற்றி உங்கள் கருத்தென்ன...
பெண் புலிகள்... எதற்கும் அஞ்சாமல் கேள்வி கேட்பவர்கள். அவர்களை பாராட்டுகிறேன்! ஆண் நிருபர்கள், அவர்களுக்கு குறைந்தவர்கள் அல்ல... ஆனால், கொஞ்சம், தயக்கம் காட்டுவர்!

