
கே
சமீபத்தில், ஒரு நாள் மாலை, 'திண்ணை' நாராயணன் சாரும், நானும், கொஞ்ச துாரம் காலாற நடந்து வரலாம் என்று, சென்னை அண்ணா சாலையிலிருந்து, திருவல்லிக்கேணி, கலைவாணர் அரங்கம் நோக்கி செல்ல ஆரம்பித்தோம்.
எதிரில் ஒருவன், சைக்கிளை வேகமாக மிதித்தபடி, 'அன்பு மலர்களே... நம்பி இருங்களேன்... நாளை நமதே...' என்ற பாடலை, உரக்க பாடியபடி, எங்கள் மீது மோதுவது போல் வந்தான்.
பயந்து போன நாராயணன் சார், 'டேய் படுவா... எந்த அண்ணன் - தம்பியை தேட, கண்மண் தெரியாம இப்படி பாடிக்கிட்டு தெரு தெருவா சுத்தறே...' என்று கேட்க...
'யோவ் பெரிசு... வாத்தியார் பாட்டை பாடுவது, உனக்கு கிண்டலா போச்சா... ஒழுங்கா வூடு போய் சேர மாட்டே...' என்று எகிறினான்.
அவனை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தேன்.
அச்சமயத்தில், எங்களை தேடி வந்து விட்டார், லென்ஸ் மாமா.
'என்னப்பா... சொல்லாம கொள்ளாம வந்துட்டீங்களே... ஆபீசுல, நீங்க இந்த பக்கமா போனதா சொன்னாங்க... டாக்டர், என்னை, 'வாக்கிங்' போகச் சொல்லி இருக்காருப்பா...' என்று கூறி, எங்களோடு நடக்க ஆரம்பித்தார்.
நாராயணன் சாரை, சமாதானப்படுத்தும் விதமாக, 'நாளை நமதே படத்தில், 'அன்பு மலர்களே... நம்பி இருங்களேன்... நாளை நமதே... நாளும் நமதே...' என, ஒரு சகோதரன் பாட, உடனே, சிறு வயதில் பிரிந்த மற்ற இரு சகோதரர்களும், அதைக் கேட்டு, பாடியபடி ஒன்றாக சேருவர்.
'இப்படி ஒரு நிகழ்ச்சி, சினிமாவுக்கு மட்டும் தானா... நிஜ வாழ்க்கையில் கிடையாதா...' என்றேன்.
'ஏன் இல்லை... பேராசிரியர், முனைவர் ரத்தின நடராசன் எழுதிய, 'பயணங்கள் பாடங்கள்' என்ற புத்தகத்தில், இப்படி ஒரு சம்பவத்தை பற்றி குறிப்பிட்டுள்ளார்...' என்று கூற ஆரம்பித்தார்:
மவுரிய சாம்ராஜ்ய மன்னன், அசோகரின் வாழ்வில் நடந்தது இது. அசோகரின் மகன் குணாளன்.
திஷ்யரட்சிதா என்ற பெண் மீது ஆசைபட்டு, திருமணம் செய்து கொண்டார், அசோகர்.
அப்போது, குணாளனுக்கு, திருமணமாகி குழந்தையும் இருந்தது.
திஷ்யரட்சிதாவுக்கு, குணாளனை பார்த்ததும் பிடித்து விட்டது.
ஒரு சமயம், ரகசியமாக, தன் ஆசையை குணாளனிடம் தெரிவித்தாள், திஷ்யரட்சிதா. அவனோ, 'நீங்கள், என் தாய் ஸ்தானத்தில் இருக்கிறீர்கள்... ஒருபோதும் இதற்கு நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்...' என்றான்.
இதனால், மனதிற்குள் கறுவியவள், தந்திரமாக, கணவர் அசோகரிடம், 'குணாளனை, தட்சசீலத்தை ஆட்சிபுரிய அனுப்பலாம்...' என்றாள்.
அசோகரும், அதை ஏற்று, குணாளனை கூப்பிட்டு, 'தட்சசீலம் சென்று ஆள்வாயாக...' என, அனுப்பி வைத்தார்.
அதை தனக்கு கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்தி, உடனே புறப்பட்டான், குணாளன்.
ஆனால், குணாளன், தட்சசீலம் சென்றதும், ராஜதுரோக குற்றம் சுமத்தி, அவனை கொல்வதற்கும் உத்தரவிட்டாள், திஷ்யரட்சிதா.
அசோகருக்கே தெரியாமல் நடந்த, இந்த வஞ்சக செயலை, தட்சசீல மேல் மட்டத்தினர் ஏற்கவில்லை. திஷ்யரட்சிதாவை திருப்திப்படுத்த, அவன் கண்களை மட்டும் குருடாக்கி, துரத்தி விட்டனர். விரட்டப்பட்ட குணாளன், தன் விதியை நொந்து, ஊர் ஊராக திரிந்து பிச்சையெடுத்தான்.
இதனிடையே, எதிர்பாராத விதமாக, குணாளன் இறந்து விட்டதாக, அசோகரிடம் சொல்லப்பட்டது.
நல்ல குரல் வளம் உள்ளவன், குணாளன். பாட்டு பாடி, பிச்சை எடுத்தான். பலரிடம் விசாரித்து, சொந்த ஊரான, பாடலிபுத்திரத்திற்கு வந்தான்.
அவன் முழுவதும் உருமாறிப் போயிருந்ததால், யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.
ஒருநாள், அசோகர், ரதத்தில், வீதி வலம் செல்லும்போது, ஒரு இடத்தில் அமர்ந்து பாடிக் கொண்டிருந்தான், குணாளன்.
அந்த குரலை கேட்டதும், அசோகருக்கு, தன் மகனின் ஞாபகம் வரவே, தேரை நிறுத்தச் சொல்லி, முழு பாட்டையும் கேட்டார்.
குணாளன் சிறு வயதாக இருந்தபோது, அந்த பாடலை அடிக்கடி பாடுவார், அசோகர்.
அப்பாடலை கேட்டதும், இது, தன் மகன் குணாளனே என அறிந்து, 'குணாளா... குணாளா...' என, கூப்பிட்டார், அசோகர்.
'யார் என் பெயரை சொல்லி அழைப்பது...' என, வினவிய குணாளனை நெருங்கி அணைத்து, 'உன் தந்தை, அசோகன் நான்...' என, கண்ணீர் வடித்தார்.
- ஆக, குணாளன் பாடிய பாட்டு, தந்தையையும், மகனையும் சேர்த்து வைத்தது என்று, கூறி முடித்தார், நாராயணன் சார்.
இதைக் கேட்ட லென்ஸ் மாமா, 'என்னவோப்பா... நமக்கு மட்டும், குடும்ப பாட்டுன்னு எதுவும் இல்லையே...' என்று அலுத்தபடியே, 'ஒரு கொடியில் இரு மலர்கள் மலர்ந்ததம்மா...' என்ற பாடலை முணுமுணுத்தபடி, நடந்தார்.
மார்ச் 3, 2019 வாரமலர் இதழில், பா.கே.ப., பகுதியில், முதியோர் இல்லத்தில் படும் வேதனைகள் பற்றி, 70 வயது அம்மையார் எழுதிய கடிதம் வெளியாகி இருந்தது.
அதைப் படித்த, வாசகர், சி.வி.பாலசுப்ரமணியன் எழுதிய கடிதம் இது:
நான் பணி ஓய்வு பெற்ற பின், அரசு குடியிருப்பை காலி செய்து, குடும்பத்துடன் சொந்த வீட்டுக்கு வந்து விட்டேன். ஒரே மகன், திருமணமாகி, மும்பையில் செட்டிலாகி விட்டான். 2007ல், மனைவியும், 2012ல், என் அம்மாவும் காலமாகி விட்டனர்.
தனிமை மற்றும் சாப்பாடு பிரச்னை காரணமாக, கோவையில் உள்ள, 'ரக் ஷா' முதியோர் இல்லத்தில் சேர்ந்தேன். நான் இருந்த காலத்தில், மாதம், 5,000 ரூபாய் தான் கட்டணம். மூன்று வேளை சாப்பாடு, காலை - மாலை டீ அல்லது காபி கொடுப்பர்; அருமையாக இருக்கும்.
மிகவும் அருமையான சூழலில் அமைந்திருந்தது, அந்த இல்லம். சில சட்ட சிக்கல்கள் ஏற்பட, தற்காலிகமாக இல்லத்தை மூடி விட்டனர்.
அங்கிருந்தவர்கள், வெவ்வேறு இடங்களுக்கு செல்ல, நான், என் உறவினர் வீட்டாருடன் சென்று விட்டேன். அவ்வப்போது, 'ரக் ஷா' இல்ல நிர்வாகிகளுடன், தொலைபேசியில் பேசுவேன்.
சில காலத்துக்கு பின், 'ரக் ஷா' முதியோர் இல்லம் மீண்டும் இயங்க ஆரம்பித்தது. இந்த விஷயத்தை, எனக்கு, தொலைபேசியில் தெரிவித்தனர்.
நானும், எனக்கு தெரிந்த இரண்டு மூன்று பேரை, அவர்களது முகவரி கொடுத்து அனுப்பி வைத்தேன்.
பா.கே.ப., பகுதியில், இதை படிக்கும் யாருக்காவது உதவி தேவைப்பட்டால், ரக் ஷா முதியோர் இல்லத்துக்கு செல்லலாம். இல்லத்தை நிர்வகித்து வரும், ஸ்ரீமதி பார்வதியின், தொலைபேசி எண்: 99442 04310.
- இப்படி எழுதியுள்ளார்.

