
பொன்விழி, அன்னுார், கோவை:இசைஞானி, இளையராஜாவின், 1,000 பட, இசை சாதனை பற்றி...
ஒரு பட்டிக்காட்டு கிராமத்தில் பிறந்தவர்; முறையாக இசை கற்காதவர்; முயற்சியும், கவனமும் இருந்தால், சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தவர்!
எஸ்.லலிதா, கோவை: சிறந்த நடிகை யார் எனக் கருதுகிறீர்கள்?
குடும்பத் தலைவியர் தான்! துன்பங்கள் ஆயிரம் இருந்தாலும், அதை அடக்கி, கணவர், வீடு வந்ததும், புன்னகை பூக்கின்றனரே!
* என்.ஜெ.ரவி விக்னேஷ்: ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டவர் அனைவரும், அறிவாற்றல் மிக்கவர்களா?
இல்லை! இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே, ஆங்கிலம் தாய் மொழி! நம் நாட்டில், மாநிலத்துக்கு, மாநிலம் வெவ்வேறு; ஆங்கிலம் தெரியாதவர்கள். அவர்கள், வாழ்விலும், பொருளாதாரத்திலும், குடும்ப வாழ்விலும் அறிவாற்றல் இல்லாதவர்களாகவா உள்ளனர்?
கே.ஆர்.சுந்தரம், மதுரை: 'நம்பர் ஒன்' என, சில பத்திரிகைகள் விளம்பரம் செய்து கொள்கின்றனவே... இது, யாரால் எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது?
'ஆடிட் பீரோ ஆப் சர்குலேஷன்' என்ற பத்திரிகைகளின் சிறப்பு நிர்வாகிகளின் கணக்குகள் மூலம், இந்தியா முழுவதும் நிர்ணயிக்கப்படுகிறது!
'நம்பர் ஒன்' என, கூறிக்கொள்ளும் பத்திரிகைகள் எதுவும், இதில் உறுப்பினராய் இல்லை; சும்மா, 'டுபாக்கூர்' தான்!
ஆர்.சாந்தி, வலையபட்டி, புதுக்கோட்டை: சென்னை வந்தால், உங்களை சந்திக்க முடியுமா?
சொல்லுங்கள், நானே வந்து உங்களை வரவேற்கிறேன்... உங்களுடன் வரும் அனைவரும் சேர்ந்து, மதிய உணவு அருந்தலாம். 'தாய் காம்போ' வாங்கி உண்போம். அது, தாய்லாந்து நாட்டு உணவு. இதற்கான பணத்தை அலுவலகத்தில் பெற்றுக் கொள்கிறேன்!
எம்.முகமது அலி, திருச்சி: இந்த உலகிலேயே மிகப்பெரிய பதவி யாருடையது?
அமெரிக்க ஜனாதிபதி உடையது என எண்ணி விடாதீர்கள்... தாய் பதவி தான் மிகப்பெரியது!
* கா.இளஞ்செழியன், தேனி: 'டாஸ்மாக்' வேலை நேரத்தை, ஆறு மணி நேரமாக குறைக்கப் போவதாக, பேச்சு அடிபடுகிறதே...
இதுபற்றி, சைக்கிள் பழுது பார்க்கும், 70 வயது, தெரு நண்பரிடம் கேட்டேன்... 'இப்படி நடந்தால், இவர், ஒரு வாரத்திற்கு வாங்கி வைத்து விடுவார்...' எனக் கூறி, என் சந்தேகத்தை தீர்த்து வைத்தார், அவரது மனைவி!
* ரா.கணபதி, தஞ்சாவூர்: முன்னேற வேண்டும் என்று நினைக்கிறேன்... அதற்கு, முதல் படி ஒன்றைக் கூறுங்களேன்!
முதல் படி, 'ஒன்லி ஸ்மைல்!' - பல் தெரிய சிரிக்கும் சிரிப்பு தான்! இந்த படியில் காலை எடுத்து வைக்கவில்லை என்றால், இரண்டாவது படிக்கு போக முடியாது! சிரிக்காத முகம், சுடுகாட்டில் இருக்கும் பிணம் போன்றதே!