sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மே 12, 2019

Google News

PUBLISHED ON : மே 12, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே

அன்று, 'பீச் மீட்டிங்' எந்த சுவாரஸ்யமும் இல்லாமல் இருந்தது.

'ஓய்... குப்பண்ணா, ஏதாவது கதை சொல்லுப்பா...' என்று வம்புக்கு இழுத்தார், லென்ஸ் மாமா.

குப்பண்ணா ஆரம்பித்தார்:

ஒரு ஊரில், சிறு வணிகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். எப்போதுமே தன் வேலை விஷயமாக, இங்குமங்கும் போவதும், வருவதுமாய் இருப்பார்.

ஒரு நாள், விபத்தில் காயமடைந்து, நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது. சில நாட்களில், வேலைக்கு திரும்பிய அவர், ஒரு கழுதையை, தன் போக்குவரத்திற்கு பயன்படுத்திக் கொண்டார்.

சில நாட்கள், அவர், கிழக்கு நோக்கி பயணிப்பார்... சில நாட்கள், மேற்கு, வடக்கு... இப்படியாக ஒரு ஒழுங்கு இல்லாமலும், வழக்கத்துக்கு மாறாகவும், அவரது பயணம் இருந்தது.

இதை பார்த்த பொதுமக்கள் சிலர், ஒரு நாள், வணிகரை நிறுத்தி, 'என்னப்பா இது... ஒரு நாள் கிழக்கே போற... ஒரு நாள் மேற்கே போற... ஒரு நாள் உடனே திரும்பிடறே... ஒருநாள் ரொம்ப நேரமாகியும் காணல... ஒரு நாள் வேகமா போற... ஒரு நாள் மெதுவா போற... ஒண்ணும் விளங்கலையே... என்னாச்சு?' என்றனர்.

'முன்ன மாதிரி இல்லங்க... இப்ப இந்த, கழுதையோட உதவி தேவைப்படுது; அதை நம்பியே இருக்க வேண்டியுள்ளது. நான் போக சொல்ற இடத்துக்கெல்லாம், இது போறதில்லை; நான் சொல்ற எதையும் கேட்கறதும் இல்லை...

'அதுக்காக, விட்டுட முடியுங்களா... நமக்கு வேலையாகணும்... அதேசமயம், கழுதை கூடவெல்லாம் மல்லுக்கட்ட முடியாது. அதுக்கு சொன்னாலும் விளங்காது. அதனால, நான் கொஞ்சம் மாறிக்கிட்டேன்... அது, கிழக்கே போனா, அங்க இருக்குற வேலையை முடிச்சுக்குறேன்...

'மேற்கே போனா, அங்க இருக்குற வேலையை முடிச்சுக்குறேன்... அது, வேகமா போனாலும், அதற்கேற்ப பழகிட்டேன்... இப்ப, கழுதைக்கும் பிரச்னை இல்ல; எனக்கும் இல்ல. வாழ்க்கை நிம்மதியா போகுது...' என்றார்.

இதேபோல, நம் வாழ்க்கையும் நிம்மதியாக போக வேண்டுமானால், வீட்டில், அலுவலகத்தில், பல கழுதைகளுடன் அன்றாடம் பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்... அதற்காக, கழுதைகளுடன் நாம் மல்லுக்கட்ட முடியாது. அதுங்களுக்கு சொன்னாலும் புரியாது, புரிய வைப்பதும் கஷ்டம்.

அதனால, நாம கொஞ்சம், 'அட்ஜஸ்ட்' செய்து கொண்டால், நம் வேலையும் நடக்கும்; வாழ்க்கையும் நிம்மதியாக இருக்கும். இது, திருமணம் ஆனவர்களுக்கான அறிவுரை என, நினைத்தால், அதற்கு, நான் பொறுப்பல்ல...

- இவ்வாறு கூறி முடித்தவர், விடுவிடுவென்று, மணலில் நடக்க ஆரம்பித்தார்.

'குப்பண்ணாவுக்கு வந்த, குசும்ப பாருப்பா...' என்று அங்கலாய்த்தார், ராமசாமி அண்ணாச்சி.



ஒரு புத்தகத்தில் படித்தது:

உலகம் முழுவதும், இன்று வெளிநாட்டினரால் விரும்பி, ரசித்து சாப்பிடப்படும், ஐந்து உணவு வகைகள் எது தெரியுமா?

அவை, மசாலா டீ, பட்டர் சிக்கன், பிரியாணி, மசால் தோசை மற்றும் சமோசா.

நம்மூர், மசாலா டீயை, வளைகுடா நாடான பக்ரைனில், 'கடக்' என, அழைக்கின்றனர். மேலும், பல நாடுகளில், 'சாய்லட்டி' என, அழைக்கின்றனர்.

கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில், சிக்கன் மசாலா கறியை தான், 'பட்டர் கறி' என்று கூறுகின்றனர். ஐரோப்பிய நாடான அயர்லாந்தில் உள்ள, டப்ளின் நகரில் மட்டும், 20க்கும் அதிகமான கறி கடைகள் உள்ளன. இங்கு, ஏராளமான இந்தியர்கள் வசிப்பதால், இந்திய உணவகங்களும் நிறைய உள்ளன, ஆட்டுக்கறி மற்றும் கோழி கறிக்கு பஞ்சமில்லை.

மேற்கிந்திய தீவுகளில், இதை, 'மெட்ராஸ் கறி' என, அழைக்கின்றனர். பட்டர் சிக்கன்களில் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள், நாட்டுக்கு நாடு வேறுபடும். பல இடங்களில், பூண்டு சேர்த்த பட்டர் சிக்கன் கறிக்கு மவுசு அதிகம்.

தினமும், விமானம் மூலம், நம்மூர், ஐதராபாத் பிரியாணி, வளைகுடா நாடான துபாய்க்கு செல்கிறது. இந்தியா வரும் வெளிநாட்டினர், குறிப்பாக, ஓட்டல் உரிமையாளர்கள், நாடு திரும்பியதும், தங்களுடைய உணவகங்களில், தங்கள் நாட்டு மசாலா பொருட்களை பயன்படுத்தி பிரியாணி தயாரித்துக் கொள்கின்றனர்.

இஸ்லாமிய நாடுகளில், பல பெயர்களில் பிரியாணி கிடைக்கிறது. துபாயில், இவற்றை விதவிதமாக ருசிக்கலாம்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளான, தாய்லாந்து, மலேஷியா மற்றும் சிங்கப்பூரில், 'லிட்டில் இந்தியா' என, தனி பகுதி இருக்கிறது. இங்கு நுழைந்தவுடன், மூக்கை துளைப்பது, நம்மூர் மசால் தோசை வாசனை தான்.

சிங்கப்பூர் போன்ற இடங்களில் உள்ள உணவகங்களில், வாழை இலையில் பரிமாறுகின்றனர். ஏராளமான, பஞ்சாபி நிறுவனங்களும் உள்ளதால், இந்தியர்களுக்கு இங்கு பஞ்சமில்லை. இதனால், இந்திய உணவுகளுக்கும் பஞ்சமிருக்காது.

ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான இந்திய உணவு, சமோசா என, கூறப்பட்டாலும், காலத்துக்கு ஏற்ப, உள்ளே அடைக்கப்படும் மசாலா பொருட்கள் மாறியுள்ளன. பெரிய உணவகங்களில், சமோசாவுடன் கூடுதலாக கொத்தமல்லி, புதினா மற்றும் பச்சை மிளகாய் சட்னி தருகின்றனர். மத்திய கிழக்கு நாடுகளில், இதை, 'சம்பவுசெக்' என, நுாதன பெயரில் அழைக்கின்றனர். பூட்டானில், சமோசாவுக்குள், பாலாடை கட்டியை வைத்திருப்பர்.

நம்மூர் பழைய சோறு மற்றும் சிறு தானிய உணவுகளும், பல வெளிநாடுகளில் பிரபலமாகிட்டு வருகிறதே... அடுத்த முறை, 'சர்வே' எடுக்கிறவர்கள், இதையும் சேர்த்துக் கொள்வர், என்று நினைத்து கொண்டேன்.

சாட்சி கூண்டில் நின்று, கோர்ட்டில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்விக்கும், நிதானமாக பதில் அளித்து வந்தான், ஒரு சிறுவன். நீதிபதிக்கு சந்தேகம் வரவே, 'கோர்ட்டில் என்ன சொல்ல வேண்டும் என்று, நீ இங்கே வரும் முன் யாராவது உனக்கு சொல்லிக் கொடுத்தனரா?' என்று கேட்டார்.

'ஆமாம், சார்...' என்றான், சிறுவன்.

வாதியின் வக்கீல் உஷார் ஆகி விட்டார்.

'இந்த சிறுவனை யாரோ தயார் செய்திருக்கின்றனர் என்பது நிச்சயம்...' என்றார், அவர்.

சிறுவன் பக்கம் திரும்பி, 'உனக்கு, யார் என்ன சொல்லிக் கொடுத்தனர் என்று, எனக்கு சொல்வாயா?' என்றார், நீதிபதி.

'இந்த வக்கீல்கள் எல்லாம் கண்ட கண்ட கேள்விகள் கேட்டு, மாட்டி வைக்க பார்ப்பர்; ஆதலால், உண்மையை சொல்லி விட்டால் எவ்வித தொல்லையும் இருக்காது என்று, என் தகப்பனார் சொல்லி கொடுத்திருக்கிறார் சார்...' என்று பதிலளித்தான், சிறுவன்.

எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது.






      Dinamalar
      Follow us