PUBLISHED ON : ஆக 04, 2019

எம். கதிர்வேல், மன்னார்குடி: லென்ஸ் மாமா, '555' சிகரெட் பிடிப்பதாக எழுதுகிறீர்கள்... அது நல்லதா, கெட்டதா?
எந்த சிகரெட் என்றாலும், கெட்டது தான்; புற்றுநோய் வந்து விடும். இவற்றை தயாரிக்க பயன்படுத்தும் புகையிலையை வளர்க்க, பயன்படுத்தும் பூச்சி மருந்துகளில், பல வகை உலோக சத்துக்கள் உள்ளன; அவற்றால் புற்றுநோய் வந்துவிடும். எனவே, 'நோ ஸ்மோக்கிங்!'
* எஸ். ரங்கராஜன், புதுக்கோட்டை: சகுனம் நன்றாக இருந்தால் தான், வெளியே செல்ல வேண்டும் என்கிறாரே, என் பாட்டி...
அதெல்லாம் சரியோ, தவறோ எனக்குத் தெரியாது... ஆனால், வெளியே செல்லும்போது, நடை பாதையிலேயே செல்ல வேண்டும்... இல்லையென்றால், 'ஹெல்மெட்' அணியாத, இரு சக்கர வாகன ஓட்டிகள், நம்மை, 'கவனித்து' விடுவர்!
ஜே.ஏ.கே.நியாஸ், கடலுார்: 'எப்படியாவது காப்பாற்றுங்கள்' என கதறும், 'பி.எஸ்.என்.எல்.,' நிறுவனத்தை, மத்திய அரசு காப்பாற்றுமா?
தனியார் நிறுவனங்கள் செய்ய வேண்டிய பணிகளை, மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டிய நேரம் நெருங்கி விட்டது. முன்னேறிய பல நாடுகளிலும் இந்த நடைமுறை தான் உள்ளது.
ஆர். கல்யாணசுந்தரம், கொச்சி: தேர்தல் முடிவுகளைப் பார்த்தோம்... கம்யூனிஸ்ட் கட்சிகள், இனி உருப்படுமா?
ஏற்கனவே, அவை, 'லெட்டர் பேடு' கட்சிகளாகி விட்டன... இனி, அதை அச்சடிக்கும் செலவும் கூட, அக்கட்சிகளுக்கு மிஞ்சும்!
* ஆர். பன்னீர்செல்வம், தேனி: நம் நாளிதழ் பற்றி, அரசியல்வாதிகள் திட்டி வெளியிடும் அறிக்கைகளையும், வாசகர்கள் அதே போல் எழுதும் கடிதங்களையும் ஏன் வெளியிடுகிறீர்கள்?
ஆசிரியருக்கு, நமது நாளிதழின் நிறுவனர், டி.வி.ஆர்., கொடுத்தது, இந்த ஆலோசனை எனக் கேள்விப்பட்டுள்ளேன்... ஏனென்றால், வாசகர்களாகிய, 'முதலாளி'கள், அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டுமாம்!
அ. கவுசியாபானு, நெய்வேலி: நீங்கள் எழுத்தாளர் ஆகாமல் இருந்திருந்தால், என்னவாகி இருப்பீர்கள்?
கன்னியாகுமரி மாவட்டத்திலும், நெல்லையில் உள்ள, 300 ஏக்கர் அளத்தில், உப்பு வாரிக்கொண்டு இருந்திருப்பேன் அல்லது புதுக்குடி கிராமத்தில் உள்ள, 1,500 தென்னைமரங்களில், தேங்காய் பறிக்கவும், நெல் அறுவடை செய்வதற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்!
* எஸ். ராகவன், கடலுார்: 'வாயையும், மணிபர்சையும் எப்போதும் மூடி வைக்க வேண்டும்...' என்கிறானே, என் நண்பன்... இது சரியா?
சரி தான்! மணிபர்சை மூடினால், செலவு குறையும்; வாயையும் அதே போல் செய்தால், வம்பு வராது!
