PUBLISHED ON : மே 01, 2011

*கே.மகேஸ்வரன், மணவாளநல்லூர்: உமது சொத்து கணக்கு எவ்வளவு? உமது ஓட்டை சைக்கிளை அசையும் சொத்தாக எடுத்துக் கொள்ளவும்...
ஓ.கே.,! அசையும் சொத்து அது ஒன்றே! அசையா சொத்து ஒன்றுமில்லை... இது போக, ஒரு பேனா, கொஞ்சம் மூளை உண்டு!
***
** பா.பெரியசாமி, அம்மாபேட்டை: இந்திய நர்சுகளுக்கு அமெரிக்காவில் ஏக கிராக்கியாமே...
உண்மைதான்! ஒரு லட்சம் நர்சுகள் தேவைப்படுகிறது அமெரிக்காவிற்கு! உலகின் மற்ற நாடுகளை விட, இந்திய நர்சுகள் திறமையானவர்கள், பொறுமைசாலிகள், அன்பானவர்கள் என்பதைக் கண்டு, இந்திய நர்சுகளை பணிக்கு சேர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறது அமெரிக்கா. அமெரிக்காவில் பணியாற்ற விசேஷ பயிற்சி கொடுக்கும் இன்ஸ்டிடியூட்களும் இங்கு ஏராளமாக முளைக்க ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவில் பணியாற்றும் நர்சுகளுக்கு ஒரு மணி நேர சம்பளம், 50 அமெரிக்க டாலர்கள். அதாவது, 2,500 ரூபாய். நம்மூர் நர்சுகள் ஒரு நாளைக்கு, 12 மணி நேரம் கூட உழைக்க தயங்காதவர்களாயிற்றே!
***
*ஆர்.பத்மநாபன், செஞ்சி: என்னை சுற்றியுள்ளவர்களில் பலரும் கெட்டவர்களாக உள்ளனர்... நான் மட்டும் ஏன் நல்லவனாக இருக்க வேண்டும்?
நல்லவர்களாக இருந்தால் தடையற்ற திருப்தியும், கலையாத அமைதியும் கிட்டும். துன்பங்களையும், துயரங்களையும் கடந்து செல்ல முடியும். நல்லவர்களாக இருப்பவர்களுக்கு, அவர்களின் எல்லை எதுவென்று தெரியும். அதனால், உண்மையுடனே நடந்து இன்புற முடியும்.
***
*கே.ராமசாமி, மதுரை: மொபைல் போன்களின் வளர்ச்சி எப்படி உள்ளது?
மிக அபாரமாக உள்ளது! இந்தியா முழுவதும் மாதம் ஒன்றுக்கு, 15 லட்சம் புதிய சந்தாதாரர்கள் மொபைல் போன் சொந்தக்காரர்களாகின்றனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!
***
*கி.ஜெயன், மீஞ்சூர்: 'தலைவலிக்கு சிறந்த மருந்து உடலுறவு!' என, ஜெர்மன் ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியுள்ளாரே...
தலைவலியே எனக்கு வந்ததில்லை; அவ்வப்போது தலைவலி வருபவர்கள், அடிக்கடி தலைவலி வருபவர்களிடம் இது குறித்து கேட்டுப் பாருங்களேன்!
***
** பி.நந்தன், கம்பம்: மன நிம்மதியோடு வாழ வழி சொல்லுங்களேன்...
அடுத்தவரின் நல்வாழ்வு கண்டு பொறாமைப்படும் குணத்தை ஒழியுங்கள்; ஆசையை, தேவைகளை குறையுங்கள் - தானாக தேடி வரும் மன நிம்மதி!
***
*இ.நிர்மலா, புதுச்சேரி: பள்ளியில் படிக்கும் போது, 'மெசபட்டோமியா' என்று ஒரு நாடு இருந்ததாக படித்திருக்கிறேன். இப்போதும் அந்த நாடு உள்ளதா? அதன் தற்போதைய பெயர் என்ன?
சதாம் புகழ் ஈராக்கின் பழைய பெயர்தான் மெசபட்டோமியா! இந்த சொல்லுக்கு, இரண்டு ஆறுகளுக்கு நடுவே உள்ள நாடு என்று பொருள். யூப்ரட்டீஸ், டைக்ரீஸ் என்ற இரண்டு ஆறுகள் இங்கு பாய்கின்றன!
***
* ஏ.சுந்தரி, கே.புதூர்: நம் கல்வி திட்டம் எப்படி அமைய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
மனப்பாடம் செய்து, அதை வாந்தி எடுத்தல் என்ற முறை கூடவே கூடாது! நான் நல்லவனாக, உண்மையை பேசுபவனாக, அகிம்சையை கடைபிடிப்பவனாக இருக்க வேண்டும். பெற்றோர், ஆசிரியர், போலீஸ் மீதுள்ள பயம் காரணமாக இவற்றை நான் கடைபிடிக்காமல், 'இந்த நற்பண்புகள் என் இயல்பு!' என்று ஒவ்வொரு மாணவனும் எண்ணும் அடிப்படையில் அமைய வேண்டும் கல்வி திட்டம்!
***
