தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மே 01, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 01, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

குப்பண்ணாவின் எதிர் வீட்டுப் பையன், கையில் ஒரு கேமராவோடு வேகமாக ஓடி வந்தான். 'எல்லாரும் ஒரு நிமிஷம் அப்படியே இருங்கள்!' என்று சொல்லி, கேமராவை, 'கிளிக்' செய்ய முனைந்தான்.

'ஆமாம்... இவன் மனதில் பெரிய, 'கார்ஷ்' என்று நினைப்பு!' என்றார் குப்பண்ணா.

'ஆமாம்... நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த காலத்திய உலகப் புகழ் பெற்ற புகைப்படக்காரராமே அவர்!' என்றபடியே லென்ஸ் மாமாவைப் பார்த்தேன்; அவர் சொன்னார்...

'கார்ஷ், அவர் காலத்திய உலகப் பிரபலங்கள் பலருடைய போட்டோவையும் பிடித்திருக்கிறார். கார்ஷின் லட்சியம், வெறும் போட்டோ உருவம் மட்டுமல்ல... அந்தப் போட்டோவை பார்த்த மாத்திரத்திலேயே, படத்திலிருப்பவரின் உண்மையான சுபாவம் தெரிந்து விட வேண்டும்; போட்டோ சிரிப்புக்கெல்லாம் மசிந்து விட மாட்டார் கார்ஷ்...'

'பின்னே... அழச் சொல்வாரோ?' என்றேன்.

'இல்லை... இல்லை... இவர் வழி தனி... இங்கிலாந்து பிரதமராக இருந்த சர்ச்சிலை படமெடுக்க ஒருமுறை சென்றார்... ரொம்பக் கோபக்காரர் சர்ச்சில். அவரை எப்படி சீண்டிவிட்டு கார்ஷ் படம் பிடித்தார் தெரியுமா? கார்ஷ் போன போது சுருட்டுப் பிடித்துக் கொண்டு, ஹாயாக இருந்தாராம் சர்ச்சில். கார்ஷûக்கு போஸ்கள் பல கொடுத்தார். ஆனாலும், கார்ஷ் எடை போட்டு வைத்திருந்த சர்ச்சில் அதில் வரவில்லை.

'கடைசியில் அவர் என்ன செய்தார் தெரியுமோ? சர்ச்சிலின் வாயிலிருந்த சுருட்டை, அவர் சற்றும் எதிர்பாராத போது, 'லபக்'கென்று பறித்தாராம். சர்ச்சில் முகத்தைப் பார்க்க வேண்டுமே... ஆத்திரமும், சினமும் பீறிட அவர் முகம் போன போக்கை, 'கிளிக்' செய்து, வெற்றிகரமாகப் பதிவு செய்து விட்டார் கார்ஷ்.

'சர்ச்சிலின் நிர்வாகத் திறமை, செயல் வல்லமை, எதிரிகளைத் தூளடிக்கும் ஆற்றல்... இவை அத்தனையும் கொண்ட முழு சர்ச்சிலை படம் பிடித்து விட்டார் கார்ஷ்...' என, லென்ஸ் மாமா சொல்லிக் கொண்டிருக்கும் போது...

'கார்ஷ் கெட்டிக்காரர் தான்!' என்று, அதுவரை கேட்டுக் கொண்டிருந்த ரிடையர்டு போலீஸ் துறையை சேர்ந்த நண்பர் ஒருவர், தன் கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டார். 'வருகிறேன்... என் மைத்துனனின் பிள்ளை என் வீட்டில் பழி

கிடக்கிறான். நன்றாயிருந்த வேலையைத் தொலைத்து விட்டு வந்து நிற்கிறான். 'ஏதாவது சிபாரிசு செய்யுங்கள், மறுபடியும் சேர்த்துக் கொள்ளச் சொல்லி!' என்று பிராணன் எடுக்கிறான்; போய்ப் பார்க்கிறேன்!' என்று எழுந்து போனார்.

மெதுவாகக் கூறினார் குப்பண்ணா... 'இவர் சிபாரிசு பண்ணாமலிருந்தால் நிச்சயம் வேலை கிடைக்கும்; அந்தப் பயல் துரதிருஷ்டப் பயல்; இவரை நச்சரிக்கிறான்!'

நான் சிரித்துக் கொண்டே, 'ஏன்... இந்த நண்பருக்கு அப்படி ஒன்றும் மதிப்பில்லையா?' என்றேன்.

'மதிப்பு இருக்கிறது என்பதற்காக, 24 மணி நேரமும் யாருக்காவது ஏதாவது சிபாரிசு செய்து கொண்டே இருந்தால்? எனக்குத் தெரிந்த ஒருவர்... சிபாரிசு செய்வது என்றால் அவருக்கு பாதாம் கீர் சாப்பிடுவது மாதிரி. யார் போய் கேட்டாலும் உடனே, ஒரு சிபாரிசு கடிதம் எழுதிக் கொடுத்து விடுவார்...'

'நல்லது தானே... அது மாதிரி நாலு பேர் இருக்கிறதனால் தானே மழை பெய்கிறது!'

'முழுக்கவும் கேட்டு விட்டுச் சொல்... நான் சொன்ன பிரமுகருக்குத் தெரிந்த ஒரு கம்பெனியில் ஏதோ ஒரு வேலை காலி இருந்ததாம். இவர் அந்த ஒரு வேலைக்கு எட்டுப் பேருக்கு சிபாரிசுக் கடிதம் எழுதிக் கொடுத்திருக்கிறார். அந்தக் கம்பெனிக்காரன் யாருக்கென்று வேலை கொடுப்பான்?' என்று கேட்டு நிறுத்தி, அவரே தொடர்ந்தார்...

'ரொம்ப புத்திசாலித்தனமாக இந்த சிபாரிசுகளை, 'டீல்' செய்வார் அவர். முகம் சுளிக்காமல் சிபாரிசுக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு, கொஞ்ச நேரத்திலேயே, யாரிடம் சிபாரிசு செய்து அனுப்பினாரோ, அவரை டெலிபோனில் கூப்பிட்டு, 'இந்த மாதிரி ஒரு பயல் என்னைக் கழுத்தறுத்து சிபாரிசுக் கடிதம் வாங்கி வந்து கொண்டிருக்கிறான்; அவனுக்கு நீ வேலை தர வேண்டுமென்று கட்டாயம் ஒன்றுமில்லை!' என்று சொல்லி விடுவாராம்...'

'அடடே... இது அசல் பெரிய மனுஷத்தனமாக இருக்கிறதே!' என்றபடியே எழுந்தேன்... காரணம் மணி இரவு 8:00 லென்ஸ் மாமா தன் கைக்கடிகாரத்தை பார்க்க ஆரம்பித்திருந்தார்... அது, அவரது உ.பா., நேரம்!

***

மிக எச்சரிக்கையாக நடந்து, ரகசியத்தைக் காப்பாற்றுவதாக நினைத்து, பெரிய, பெரிய அரசாங்கங்களே கூட, அசட்டுத்தனமாய் நடந்து கொள்வதுண்டு என்று அதிரடியாய் ஆரம்பித்தார் குப்பண்ணா...

நான் இப்போ சொல்லப் போறது, யுத்த காலத்திலே அமெரிக்காவில் நடந்தது. துருப்புகள் எல்லாம் எங்கே ¬முகாமிட்டிருக்கின்றன என்பதைப் பரம ரகசியமாக வைத்துக் கொண்டிருப்பதே தேசத்துக்கு பாதுகாப்பு என்பது ராணுவத்தின் கொள்கையாக இருந்த சமயம்.

ஒரு அம்மையாருக்கு டிரங்கால் வந்தது. ஆபரேட்டர் கூப்பிட்டு, 'நியூ ஆர்லியன்சில் இருக்கும் ஒருவர் உங்களுடன் பேச வேண்டுமாம். ஆனால், டிரங்கால் கட்டணத்தை நீங்கள் தான் செலுத்த வேண்டியிருக்கும்... சம்மதமா?' என்றார்.

அந்த அம்மணியோ, 'பேசுவது யார்?' என்று கேட்டாள். 'அது ராணுவ ரகசியம், சொல்ல மாட்டோம்!' என்று மறுத்து விட்டார் ஆபரேட்டர்.

படையில் சேர்ந்திருந்த தன் மகன் தான் அப்படி உரிமையோடு பேச விரும்புகிறான் போலும் என்று ஊகித்தவள், சரியென்று ஒப்புக் கொண்டாள்; கனெக்ஷன் கிடைத்தது.

எடுத்த எடுப்பிலேயே, 'நான் தான் ஜார்ஜ் பேசுகிறேன் அம்மா!' என்று அவள் பிள்ளை, தன் பெயரைச் சொல்லி விட்டான். 'எங்கேயிருந்து பேசுகிறாய்?' என்று கேட்டாள் அம்மா. 'அதெல்லாம் ராணுவ ரகசியம் அம்மா. சொல்லக் கூடாது...' என்றான் மகன். இது எப்படி இருக்கு!' என்று சொன்னார்.

'ஓஹோ... ஊர் பெயரை ஆபரேட்டர் சொல்லி விட்டார்; ஆள் பெயரை பிள்ளையே சொல்லி விட்டான். அப்புறம் என்ன ரகசியம் வேண்டி யிருக்கிறது!' என்றேன் நான்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us