
கூ. முத்துலெட்சுமி, ராமநாதபுரம்:மனைவி உடன் வரும்போதே, மற்ற பெண்களை பார்த்து, 'ஜொள்ளு' விடுகின்றனரே...
அதை ஏன், 'ஜொள்' என, நினைக்கிறீர்கள்... 'நம் மனைவியின் அழகுக்கு, இவளால் ஒரு துளி கூட நெருங்க முடியாதே...' என்ற நோக்கில் பார்ப்பதாக எடுத்துக் கொள்ளுங்களேன்!
* எம். மிக்கேல்ராஜ், சாத்துார்: பெற்றோரை உதாசீனப்படுத்தி விட்டு, கோவில் கோவிலாக சென்று வழிபடுகின்றனரே... இதனால், பலன் உண்டா?
'அரகரா ஆண்டி முருகா' கதை தான் இவர்களுக்கு நேரும் என்கிறார், ஆன்மிக பெரியவர் ஒருவர்!
எஸ்.மகாதேவன், திருப்பூர்:என் மணிபர்ஸ் தினமும் கனமாக இருக்க ஒரு வழி சொல்லுங்களேன்; இல்லை என்றால், லென்ஸ் மாமாவிடம் கேட்டு சொல்லுங்களேன்...
பர்ஸ் சைசில், செங்கல் வருகிறதே... அதில் இரண்டு, மூன்றை, 10 ரூபாய் நோட்டுகளாக எண்ணி, அடைத்துக் கொள்ளுங்கள்; கனமாக இருக்கும்!
சோ. ராமு, திண்டுக்கல்: நீர், இதுவரை சென்று வந்துள்ள வெளிநாடுகளின் எண்ணிக்கை...
நல்ல வேலை கொடுத்து விட்டீர்... 'டேபிள் டிராயரை' ஒவ்வொன்றாக திறந்து, புரட்டிப் பார்க்க வேண்டும், 'பாஸ்போர்ட்'களைத் தேடி!
* டி.கே. நாகராஜன், சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் கைதானவர்களை விடுதலை செய்யலாமா, கூடாதா? கூடாதென்றால் ஏன்?
நமது சொந்தக்காரர்களுக்கே இந்த நிகழ்வு நடந்தால் என்ன முடிவுக்கு வருவீர்கள்... யோசித்து முடிவெடுங்கள்!
* எஸ். ஸ்ரீவர்ஷன், சென்னை: நதிகள் இணைப்பு திட்டத்தில், அனைத்து நதிகளையும் இணைப்பது சாத்தியமா?
அமெரிக்காவின் இடது பக்கம், பசிபிக் கடல் உள்ளது; வலது புறம், அட்லாண்டிக் கடல் உள்ளது. அமெரிக்க கண்டம், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என, இரண்டு பிரிவாகப் பிரிந்திருக்கிறது அல்லவா!
வட அமெரிக்காவின் இடது பகுதியிலிருந்து, வலது பகுதிக்கு பொருட்களை அனுப்ப வேண்டும் என்றால், கடல் மார்க்கமாக, தென் அமெரிக்க கடல் எல்லை முழுவதையும் கடந்தே செல்ல வேண்டி இருந்தது. இதன் நீளம், 21 ஆயிரம் கி.மீ., கடக்க, 67 நாட்கள் ஆனது.
இந்த சிரமத்தைத் தவிர்க்க, வட அமெரிக்காவின் வால் பகுதி இடையே, இரு கடல்களையும் இணைக்கும் வகையில், பனாமா கால்வாய் கட்டப்பட்டது. 1914ல், இது பயன்பாட்டுக்கு வந்தது. இதன் மூலம், 16 ஆயிரம் கி.மீ., பயண துாரமும், 37 நாள் பயண நேரமும் குறைக்கப்பட்டது.
அவ்வளவு ஏன்... நம் நாட்டில், ஆந்திராவில், கிருஷ்ணா நதியையும், கோதாவரியையும், 2015ல் இணைத்திருக்கின்றனரே!
ஆகவே, முயன்றால் முடியாதது இல்லை!

