
பால் பாக்கெட்டை எடுத்து வர, காலையில கதவை திறந்தாள், ரஞ்சனி. பக்தி பாட்டின் சத்தம், செவிட்டை அறைந்தது. எல்லாம் இந்த பக்கத்து வீட்டிலிருந்து தான். தினமும், இது ஒரு அவஸ்தை.
தலைநகரின் மையத்தில் உயர்தட்டு மக்கள் வசிக்கும், 30 அடுக்கு மாடி அப்பார்ட்மென்டில், ரஞ்சனியும், அவள் கணவர், நீரஜும் வசிக்கின்றனர். இவர்கள் இருப்பது, 10வது அடுக்கு. எதிரெதிரே நான்கு குடியிருப்புகள். போன மாதம் தான், சுரேஷ் குடும்பம் புதிதாக வந்தது.
'சரியான பட்டிக்காட்டான்கள். சுரேஷ் பரவாயில்லை, படித்தவன்; நாகரிகம் தெரிந்தவன். அவன் பெண்டாட்டி, பத்மா, சரியான பட்டிக்காடு. எப்போதும் கதவை திறந்து வைச்சு, சிரிப்பும், சத்தமுமாக கேட்கும். நாகரிகம் தெரியாதவ. கதவை திறந்து, ரஞ்சனி வெளியே வந்தால் போதும், 'அக்கா அக்கா'ன்னு பேச வந்துடுவாள்.
'சுரேஷின் அம்மா - அப்பா ரெண்டு கிழங்களும் அதற்கு மேல். காலையில் மங்கள இசையில் ஆரம்பித்து, இரவு துாங்கற வரை, 'டிவி'யை அலற விட்டு, எல்லா சீரியலையும் பாக்குங்க... இடையில ஊர் கதை வேற. பத்தாததுக்கு ரெண்டு குட்டிச்சாத்தான்கள்... பள்ளி விட்டு வந்தாபோதும், ஒரே கூச்சல்.
'பெரிய கம்பெனியில், 'சீப் எக்ஸிகியூடி'வா இருக்கும், சுரேஷ் பாவம்... எப்படி தான் இதுகளோட காலம் தள்றானோ... காசை குடுத்து, தலையில கட்டிடாங்க போலிருக்கு...' என, நினைத்துக் கொண்டாள், ரஞ்சனி.
கோபமாக கதவை மூடி, உள்ளே வந்தாள், ரஞ்சனி. சோபாவில், சுவாரஸ்யமாக பேப்பர் படித்துக் கொண்டிருந்தான், நீரஜ்.
''ஹே நீரஜ்... பக்கத்து வீட்டுல இருக்கறவங்க, 'நியூசன்ச' என்னால பொறுக்க முடியல... நீ கொஞ்சம் கேட்க கூடாதா... 'அசோசியேஷன் மீட்டிங்'ல, புகார் பண்ண போறேன்... எப்ப பாரு கூச்சல்... வீடா அது, இந்த மாதிரி, 'லோ கிளாஸ் பீப்பிள' யார் குடித்தனம் வெச்சாங்க,'' என்றாள்.
எதுவும் சொல்லாமல் சிரித்தான், நீரஜ்.
ரஞ்சனி, 'இன்டர்நேஷனல் ரெசிடென்ஷியல்' பள்ளியில் படித்து, அந்த நகரிலே மிகப்பெரிய காலேஜில் படித்த பட்டதாரி. அவளது கணவர், பன்னாட்டு நிறுவனத்தின் மேலதிகாரி. அழகான இரு குழந்தைகள்.
அழகை பேணி பாதுகாக்க, அவ்வப்போது, 'பியூட்டி பார்லர், ஸ்பா' செல்வதிலும், நவீன உடை அணிவதிலும் அலாதி பிரியம். தன்னை இளமையாக காட்டிக் கொள்ள விரும்புவாள்; பணக்கார கர்வமும் உண்டு.
நீரஜிடம் காபியை கொடுத்தவள், ''டியர்... இன்னிக்கு, வேலைக்காரி வரமாட்டாளாம்... இப்ப போன் பண்ணி சொல்றா... நீங்க வெளில சாப்பிட்டுக்கறீங்களா... இன்னிக்கு, 'பியூட்டி பார்லர்' போகணும்... அப்புறம், எங்க, 'லேடீஸ் கிளப் மீட்டிங்' வேற போவணும்...
''நீரஜ், லைலா இருக்கால்ல, அதான் உங்க கீழ வேலை பார்க்கற கணேசோட, 'ஒய்ப்!' அவ புது, 'பிராண்ட் மாடல்' கார் வாங்கியிருக்காளாம்... 'கிளப்'ல வந்து ஒரே அலட்டல் தான்... ஹூம், நாமும் புது கார் வாங்கணும்... இப்போ, 'நியூ டிரெண்டி மாடல்' வந்துருக்குல்ல... அத வாங்கலாம், ஜஸ்ட் ஒரு கோடி தானாம்... எத்தனை நாளைக்கு தான் பழைய கார்ல போறது, டியர்,'' என்றாள்.
கதவு தட்டும் சத்தம் கேட்டு, எரிச்சலுடன் திறந்தாள், ரஞ்சனி.
எதிரே, மங்களகரமாக நின்று கொண்டிருந்தாள், பத்மா.
படித்தவள்; ஆனால், கிராமத்து கலகலப்பில் வளர்ந்தவள். ஊரார் அனைவரையும் சொந்தமென நினைக்கும் வெள்ளந்தி உள்ளம். மஞ்சள் பூசி, பொட்டு வைத்து, தலை வாரி, பின்னலில் பூ முடிந்து, கருப்பு தேவதையாய் நின்றாள்.
''என்ன வேணும், பத்மா,'' என்றாள், ரஞ்சனி.
முகம் நிறைய சிரிப்புடன், ''அக்கா... இன்னிக்கு எங்க வீட்ல நோம்பு, பூஜை செய்தோம்; இந்தாங்க, சர்க்கரை பொங்கல் பிரசாதம்... வாங்கிக்கோங்க, சுட சுட இருக்கு,'' என்றாள், பத்மா.
'நா என்ன அவளை விட பெரியவளா தெரியறேனா... என்னை அக்கான்னு கூப்பிடுறா...' என, கோபம் தலைக்கு ஏறியது.
''இதெல்லாம் நாங்க சாப்பிட மாட்டோம். வேண்டாம்,'' எனக் கூறி, அவள் பதிலை எதிர்பார்க்காமல், கதவை அறைந்து மூடினாள், ரஞ்சனி.
பத்மாவின் முகம் வெளிறியது.
'சே... புதுசா வந்துருக்காங்கன்னு, 'பார்மாலிடி'க்கு பேச போனது, தப்பா போச்சு... எப்ப பாரு, அக்கா அக்கான்னு...' ரஞ்சனியின் ஈகோ, தலைக்கு ஏறியது.
கண்கள் கலங்க உள்ளே வந்தவளை பார்த்து, மாமியார் முகம் மாறியது.
''என்ன கண்ணு... என்ன ஆச்சு, கண்ணு கலங்கியிருக்கு... எந்த சிறுக்கி என்ன சொன்னா,'' உக்கிரமாக கேட்டாள், பத்மாவின் மாமியார்.
''ஒண்ணுமில்ல அய்த்த, கண்ணுல துாசி விழுந்துருச்சு, அத கசக்குனேன் செவந்துருச்சு,'' என்றாள், பத்மா.
''சரி, அந்த அர டவுசர்காரிக்கு, பொங்கல் கொண்டு போனீயே... குடுக்கலியா புள்ள,'' என்றார்.
''இல்லீங்க அய்த்த, அவுக வெள்ளனே வெளில கிளம்பிட்டாங்க போல... ஆள காணோம்,'' என, சிரித்தபடியே, பொய் சொன்னாள்.
அத்தையின் முகத்தில் சந்தேக ரேகை ஓடியது.
வந்த அழுகையை மறைத்து, அடுக்களைக்குள் சென்றாள், பத்மா.
லேடீஸ் கிளப்...
''ஹாய்... எப்படி இருக்கீங்க,'' என்றபடியே, வந்தமர்ந்தாள், ரஞ்சனி.
அங்கிருந்தவளிடம், ''ஹே எப்படியிருக்க... போன, 'மீட்டிங்'ல உன்னை பார்க்கல... என்னாச்சு,'' என்றாள்.
''போன வாரம், கனடா போயிருந்தோம். அதான் வரல,'' என்றாள், அவள்.
அவரவர் பெருமைகளை எல்லாரிடமும் பகிர்ந்தனர். அப்போது, புது காரின் பெருமிதத்தோடு வந்தாள், லைலா.
''ஹாய்... சாரி, கொஞ்சம், 'லேட்' ஆயிருச்சு... என்னா, 'டிராபிக்' யா... புது கார ஓட்டறதுக்கு எடமே இல்ல,'' பெருமையில் முகம் மலர்ந்தாள்.
மறுநாள் -
''நீரஜ்... எந்த கலர் கார் வாங்கலாம் சொல்லுங்க,'' என்றாள்.
''உனக்கு என்ன பிடிக்குமோ அதயே வாங்கிக்கோ டார்லிங்,'' என்றான்.
பிரமாண்டமான அந்த, 'ஷோரூமிற்குள்' நுழைந்தனர். பல வண்ணங்களில், பலவகை வடிவத்தில் கார்கள்.
கண்கள் விரிய எல்லாவற்றையும் பார்த்து பரவசமானாள், ரஞ்சனி. அவளுக்கு பிடித்த வெளிர் பச்சை நிற காரை தேர்ந்தெடுத்து, 'புக்' செய்து, சந்தோஷமாக கிளம்பினர்.
இரண்டே நாளில், வீட்டிற்கு வந்தது, கார். அவள் கையாலே திறப்பு விழா செய்து, பலுான் பறக்க விட்டு, 'கேக்' வெட்டி கொண்டாடி, சாவியை அவள் கையில் ஒப்படைத்தனர்.
பேரின்பத்தில் திளைத்தாள்.
'நாளைக்கே, 'லேடீஸ் கிளப்'புல, 'மீட்டிங்' போட்டு, எல்லாரையும் கூப்பிட்டு புது காரை காட்ட வேண்டும்...' என்று எண்ணினாள்.
''நீரஜ், ரொம்ப ரொம்ப நன்றி. இப்போ, புது காரில் கொஞ்சம் வெளியே போய் வரலாமா,'' என்றபடி, காரில் ஏறி, 'ஸ்டார்ட்' செய்தாள்.
''ரஞ்சு, மெதுவா ஓட்டு,'' என, நீரஜ் சொல்லி கொண்டிருக்கும்போதே, எதிரே ஒரு லாரி, வேகமாக முன்னோக்கி வருவதை கண்டு தடுமாறினாள். அதிர்ச்சியான நீரஜ், தானும், 'ஸ்டியரிங்'கை பிடித்து, காரை இடதுபுறம் வேகமாக ஒடித்தான்.
நிலைகுலைந்த கார், இரண்டு மூன்று முறை உருண்டு, கவிழ்ந்தது. நீரஜிற்கு பலத்த அடி, மயங்கினான். எக்குதப்பாக விழுந்ததில் இடது கை மாட்டி, என்ன செய்வதென்று தெரியாமல் கத்தினாள், ரஞ்சனி.
போன் செய்து யாரையாவது அழைக்கலாம் என்று அவசரமாக, ஒரு கையால் பெயரை தேட, கைகள் நடுங்கின. 'ஸ்கிரீனில்' பத்மாவின் நம்பர் வந்தது. தட்டுத்தடுமாறி போன் பண்ணினாள். இரண்டு, 'ரிங்'கில் எடுத்தாள், பத்மா.
''அக்கா... புது கார் வாங்கி இருக்கீக போல... மாடிலேர்ந்து பாத்தேன்... நீங்க சொல்லவே இல்ல,'' என, ஏதேதோ பேச ஆரம்பித்தாள்.
பதட்டத்துடன், ''எங்களுக்கு ஆக்சிடெண்ட் ஆயிருச்சு... யாரையாவது வரசொல்லு ப்ளீஸ்,'' என்றாள்.
''எங்க இருக்கீங்கக்கா?''
மலங்க மலங்க விழித்து சுற்றும் பார்த்தவள், அதிர்ச்சியில் எங்கு இருக்கிறோம் என்பது, சட்டென்று நினைவுக்கு வரவில்லை.
''அக்கா சொல்லுங்க!''
சிறிது நேரத்திற்கு பின், இருக்கும் இடத்தை பற்றி கூறினாள், ரஞ்சனி.
''அக்கா... எனக்கு அந்த எடம்லாம் தெரியாதே... இருங்க, அய்த்தான்கிட்ட குடுக்கறேன்,'' என்றவள், ''மாமா, மாமா,'' என, கத்தியபடியே உள்ளே ஓடினாள்.
பதற்றமாக அவனிடம், இருக்கும் இடத்தை கூறி, அவசரமாக வர சொன்னாள், ரஞ்சனி.
இவர்கள் போய் சேரவும், ஆம்புலன்ஸ் வரவும் சரியாக இருந்தது.
ஆம்புலன்சில் வந்தவர்களுடன், இவர்கள் இருவரும் சேர்ந்து, அவர்களை காரிலிருந்து வெளியேற்றவும், போலீஸ் வரவும் சரியாக இருந்தது.
போலீசிடம் விபரத்தை கூறினான், சுரேஷ்.
மிகப்பெரிய, 'மல்டி ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனைக்கு சென்றனர்.
ரஞ்சனிக்கு, இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு, கட்டு போடப்பட்டிருந்தது. ஆங்காங்கே சில காயங்கள். நீரஜின் ஒரு பக்க கை, கால் மற்றும் தலையில் பலத்த அடிபட்டிருந்தது.
இரண்டு வாரமாய் சுரேஷும், பத்மாவும் தான், தினமும் மருத்துவமனைக்கு வந்து பார்த்துக் கொண்டனர். நீரஜ் மற்றும் ரஞ்சனியின் நண்பர்கள், 'அப்பார்ட்மென்டில்' சிலர், விஷயம் அறிந்து அவ்வப்போது வந்து பார்த்தனர்.
''அக்கா... எப்படி இருக்கீங்க,'' கேட்டபடியே உள்ளே வந்தாள், பத்மா. பின்னால், சுரேஷ் மற்றும் ரஞ்சனியின் குழந்தைகள்.
''பைன் பத்மா... அவர் எப்படி இருக்கார், சுரேஷ்,'' என்றாள், ரஞ்சனி.
''பரவாயில்லை மேம்... தலைல அடிபட்டதால குணம் ஆகறதுக்கு கொஞ்சம் நாள் ஆகும்ன்னு டாக்டர் சொல்லியிருக்கார்... ஒரு பக்கம் கை, கால்ல பிராக்சர்... வேறொண்ணுமில்லை,'' என்றான், சுரேஷ்.
கண்களில் நீர் நிறைந்தது. சத்தமில்லாமல் குலுங்கி குலுங்கி அழுதாள், ரஞ்சனி.
''அக்கா... அழுவாதீங்க... அவருக்கு ஒண்ணுமில்ல... நல்லாதா இருக்காக... நீங்க கவல படாதீக... அய்த்தான் பெசல் டாக்டருகிட்ட பேசியிருக்காக... சீக்கிரம் நல்லாயிருவாக... கவலப்படாதீங்கக்கா,'' என்றாள், பத்மா.
''உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல,'' என்று தழுதழுத்தாள், ரஞ்சனி.
''எப்படி இருக்கீங்க மம்மி,'' என்றான், இளையவன்.
அவனை அணைத்து முத்தமிட்டாள். மூத்தவள், பக்கத்தில் வந்து நின்றாள். கண்கள் கலங்கியது.
இருவரிடமும், ''கவலைப்படாதீங்க... நான் சீக்கிரமே வீட்டுக்கு வந்துடுவேன். ஆன்டி சொல்றத கேக்கணும் சரியா,'' என்றபடியே, பத்மாவை பார்த்தாள்.
''தாங்க்ஸ், பத்மா... குழந்தைகள கொஞ்சம் பாத்துக்கோ,'' என்றாள்.
''கவலபடாதீக அக்கா, அவுக ரெண்டு பேரும் ஏ கொளந்தைக மாதிரி... தங்க கட்டிக... எங்கூட்டுல தான் இருக்காக... நல்லா பாத்துக்கறேன், நீங்க நல்லா, 'ரெஸ்ட்' எடுங்க, மனச அலட்டிகாதீக,'' என்றாள்.
ஒரு வாரத்தில், ரஞ்சனியை, 'டிஸ்சார்ஜ்' செய்தனர்.
'கவுன்டரில்' பணம் கட்டி வந்தான், சுரேஷ்.
''சாரி, சுரேஷ்... உங்கள கஷ்டப்படுத்தறேன்... ஐ வில் டிரான்ஸ்பர் மணி,'' என்றாள்.
''பரவாயில்ல மேடம்!''
''அவர பாக்கணுமே!''
கட்டிலில் கட்டுகளுடன் படுத்திருந்த, நீரஜை கண்டு, அடக்க முடியாமல் வாய் விட்டு அழுதாள், ரஞ்சனி.
வீட்டிற்கு வந்தாள், ரஞ்சனி. மனம் அமைதி ஆனது. இடது கை வலி அதிகமாக இருந்ததால் அசைக்க முடியவில்லை.
ஓடியாடி சளைக்காமல் எல்லா வேலையும் செய்தாள், பத்மா. பாட்டியும், தாத்தாவும் அவ்வப்போது வந்து பேசி சென்றனர்.
''அக்கா... டிபன் கொண்டாந்திருக்கேன் சாப்டுறீகளா,'' என்றபடியே உள்ளே வந்தாள், பத்மா.
''இல்ல பத்மா, குளிக்கணும்... அப்புறம் சாப்பிடறேன்!''
''என்னக்கா, ஒடம்பு சூடேறி போயிருக்கு... எண்ண தேச்சு குளிக்க மாட்டீகளா... இருங்க, செக்குல ஆட்டின நல்லெண்ணையும், சீயக்காய் பொடியும் கொண்டாறேன்,'' என்று கூறி, எடுத்து வந்தவள், ''எண்ண தேச்சு விடறேன் வாங்கக்கா, குளிக்க போலாம்,'' என்றாள்.
''வேண்டாம் பத்மா... நா பாத்துக்கறேன்!''
''சும்மா இருங்க, கை வேற முடியாம கெடக்கு... எங்க அம்மா தான், எனக்கு வாரா வாரம் எண்ண தேச்சு குளிப்பாட்டுவாக... நா ஒங்க தங்கச்சி மாதிரிதானே... கூச்சப்படாதீக!''
உடம்பு முழுதும் எண்ணெய் தேய்த்து, தலையிலும் அழுந்த தேய்த்தாள். சுகமாக இருந்தது. குளிப்பாட்டி கட்டிலில் அமர்த்தி, ஜன்னலை திறந்தாள்.
சில்லென்று வெளிக்காற்று உடம்பு முழுவதும் பரவியது. சிலிர் காற்றை வேகமாக உள்ளிழுத்தாள், ரஞ்சனி. புது ரத்தம் பாய்ந்தது போல் இருந்தது.
சுடச்சுட இட்லி - சாம்பார் எடுத்து வைத்தாள்.
சாப்பிட தடுமாறிய ரஞ்சனியிடம், ''அக்கா... இருங்க, ஏ கஷ்டபடுதீக... நா தர்றேன்,'' என்று ஊட்ட ஆரம்பித்தாள்.
பிரமிப்புடன் அவளை பார்த்தபடியே உணவை மென்றாள், ரஞ்சனி. தன் தாயின் பரிவு, அவளது கவனிப்பில் தெரிந்தது. பத்மாவின் பாசத்தில் நெகிழ்ந்தாள்.
''எப்படி உன்னால மட்டும் இப்படி இருக்க முடியுது... உன்ன எவ்வளவோ ஏளனமா பேசியிருக்கேன்; புறக்கணிச்சிருக்கேன்... அப்படி இருந்தும் எப்படி உன்னால நேசிக்க முடியுது... இந்த மாதிரி மனுஷங்கள என் வாழ்நாள்ல பாத்ததில்ல... நீ, என் கண்ணுக்கு தெய்வமாதான் தெரியற... என்ன மன்னிச்சிரு, பத்மா,'' என்றாள், ரஞ்சனி.
''அய்யயோ... என்னக்கா, பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு... நீங்களும் என் அக்கா மாதிரி தானே... எங்கூருல அக்கம்பக்க இருக்கறவங்க, அண்ணந்தம்பியா, மாமா மச்சாமாரா, சொந்த பந்தமா தான் இருப்பாக... நானு அப்டிதே...
''என்னத்த பண்ணிட்டேன்னு, இத போய் பெருசா சொல்லிக்கிட்டு... மனச அலட்டாம இருங்க... நா போய் மதியத்துக்கு சாப்பாடு செஞ்சு எடுத்து வரேன்... பேச்சு தொணைக்கு, அய்த்த, மாமா வறேன்னுருக்காக,'' என்றபடியே சென்றாள், அந்த கிராமத்து பாசக்கார பறவை.
அனிச்சையாக வாசல் கதவை மூட வந்த, ரஞ்சனி, ஒரு நிமிடம் நின்று கதவை விசாலமாக திறந்து வைத்தாள், அந்த பாச தேவதையின் வருகைக்காக.
அவள் மனமும் மெல்ல திறந்தது.
எல். மாதவன் நாராயணன்
ஊர்: மதுரை, கல்வி: டி.எம்.இ., தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இணைய தளத்தில், கவிதை, கதைகளை எழுதி வருகிறார். பத்திரிகைக்கு எழுதிய முதல் சிறுகதை இது. முதல் கதையே ஆறுதல் பரிசு பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் நிறைய எழுத, இப்பரிசு ஊக்கமளித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

