
தனித்திறமையை காட்டத் துடிக்கும், துருவ் விக்ரம்!
ஆதித்யவர்மா படத்தில் அறிமுகமாகியுள்ள, விக்ரமின் மகன், துருவ் விக்ரம், தன் நடிப்புக்கு கிடைத்த வரவேற்பில், உற்சாகமடைந்துள்ளார். அதோடு, 'இந்த படத்தில், நான் நன்றாக நடித்திருக்கிறேன் என்றால், அதற்கு காரணம், அப்பா தான். ஆனால், அடுத்து நடிக்கும் படங்களில், அவரது பாதிப்பு இல்லாமல், அவரிடம் பயிற்சி பெறாமல், நானாகவே நடித்து, என் தனித்திறமையை வெளிப்படுத்துவேன். அது தான், எனக்கு கிடைக்கும் உண்மையான அங்கீகாரமாக இருக்கும்...' என்கிறார், துருவ் விக்ரம்.
சினிமா பொன்னையா
இளவட்ட இயக்குனர்ரகளை ஆச்சரியப்படுத்தம், ரஜினி!
ரஜினிகாந்த், 167 படங்களில் நடித்த, 45 ஆண்டு கால சீனியர் நடிகர். சமீபகாலமாக, இளவட்ட இயக்குனர்களின் படங்களில் நடித்து வரும், ரஜினி, அவர்கள் சொல்லும் வசனங்களை திருத்தம் செய்யாமல், அப்படியே பேசி வருகிறார். அதோடு, கதை மற்றும் காட்சிகளில் தன் சொந்த கருத்துக்களை திணிப்பதே இல்லை. இதைப் பார்த்து, 'வளர்ந்து வரும் நடிகர்களே, இயக்குனர்கள் சொல்லும் கதைகளில், தங்கள் கருத்தை திணிக்கும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இப்போது வரை, இயக்குனர்களின் படைப்புகளில் கை வைக்காமல் இருப்பது, மிகப்பெரிய ஆச்சரியத்தை கொடுக்கிறது...' என்று புகழ்கின்றனர், இளம் தலைமுறை இயக்குனர்கள்
— சினிமா பொன்னையா
'டுவிஸ்ட்' அடித்த, ஷங்கர்!
இந்தியன் படத்தில் நடித்த, அதே சேனாதிபதி வேடத்தை, இந்தியன் - 2 படத்திலும் தொடர்கிறார், கமல்ஹாசன். மேலும், இந்தியன் படத்தில், அவரின் மனைவியாக, சுகன்யா நடித்த வேடத்தில், 85 வயது பாட்டியாக, காஜல் அகர்வால் நடிப்பதாக இருந்தது. ஆனால், மேயாத மான் படத்தில் நடித்த, பிரியா பவானி சங்கரை, 'மேக் - அப் டெஸ்ட்' எடுத்தபோது, காஜல் அகர்வாலை விட, கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். அதனால், காஜலை வேறு வேடத்திற்கு மாற்றி, பிரியா பவானி சங்கரை, கமலின் மனைவியாக்கி விட்டார், இயக்குனர் ஷங்கர். இதனால், கமலுக்கு ஜோடியாகப் போகிறோம் என்ற பெருங்கனவில் இருந்து வந்த, காஜல் அகர்வால், 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விட்டதே...' என்று, 'பீல்' பண்ணிக் கொண்டிருக்கிறார்.
— சினிமா பொன்னையா
கங்கனாவை காயப்படுத்திய நித்யாமேனன்!
மறைந்த முதல்வர், ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு கதையில், தலைவி மற்றும் த அயர்ன் லேடி என்ற இரண்டு படங்கள், ஒரே நேரத்தில் தயாராகி வருகின்றன. இதில், தலைவி படத்தில் நடிக்கும், கங்கனா ரணாவத்தின், 'பர்ஸ்ட் லுக்' சமீபத்தில் வெளியானபோது, ஜெயலலிதா வேடத்திற்கு கொஞ்சம் கூட பொருந்தவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதையடுத்து, 'ஜெயலலிதா வேடத்திற்கு, நான் மட்டுமே சரியான தேர்வாக இருப்பேன்...' என்று சொல்லி, கங்கனாவின் ஜெயலலிதா, 'கெட்-அப்'பை கிண்டல் செய்து, செய்தி வெளியிட்டு, அவரை காயப்படுத்தியுள்ளார், நித்யாமேனன். துள்ளாதே துள்ளாதே ஆட்டுக்குட்டி; என் கையில் இருக்கிறது, சூரி கத்தி!
— எலீசா
பதவிக்கு மயங்காத, த்ரிஷா!
'மாஜி ஹீரோயினி'களான குஷ்பு, கவுதமி போன்றோர், அரசியல் களத்தில் இறங்கியுள்ள நிலையில், பதவி தருவதாக சொல்லி, த்ரிஷாவையும், மக்கள் சேவைக்கு அழைத்துள்ளது, ஒரு தேசிய கட்சி. அதற்கு, 'ஏற்கனவே, 17 ஆண்டுகளாக, நான் சினிமா மூலம் மக்கள் சேவை தான் செய்து கொண்டிருக்கிறேன். மனசுக்கு பிடித்த இந்த துறையே திருப்திகரமாக உள்ளது. நடிப்பு மூலம் மக்கள் மனங்களில் நிறைந்திருப்பதையே பெரிய பதவியாக கருதுகிறேன்...' என்று சொல்லி, அரசியல் அழைப்பை நிராகரித்து விட்டார், த்ரிஷா. கழுவுகிற மீனிலும் நழுவுகிற மீன்
- சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
சின்ன திரையிலிருந்து, பெரிய திரைக்கு வந்த நடிகை, புதுப்பட வாய்ப்புகளுக்காக, சில சீனியர்களிடம், நெருங்கி பழகி வந்தார். விளைவு, அரை கிழடு வயதாகியும், இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும், அந்த குஷியான இயக்குனருக்கு, அம்மணி மீது ஆசை பிறந்திருக்கிறது. அதனால், அவருக்கு, நாசூக்காக துாது விட்டுள்ளார், இயக்குனர். அதைப் பார்த்து மிரண்டு போன நடிகை, 'என் அப்பா மாதிரி நினைத்து தான் பழகினேன். பதிலுக்கு, என் மீது பாசம் காட்டாமல், இப்படி ஆசை வைத்து விட்டீர்களே... 'இளசுகளை நம்பினாலும், நரை முடிகளை நம்பக் கூடாது' என்று, சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை, இப்போது நானே நேரில் பார்த்து விட்டேன்...' என்று, ஒரு, 'நறுக் மெசேஜ்' அனுப்பி, அவரது ஆசைக்கு கடிவாளம் போட்டு விட்டார், அம்மணி.
'அக்கா... கேட்டீங்களா இந்த அநியாயத்தை... இப்படியா வயசு வித்தியாசம் இல்லாம...'
'முதல்ல உள்ளே வாடி, என் பிரியமான பவானி... இந்தா காபி குடி. விஷயத்தை, 'நறுக்'ன்னு சொல்லு...' என்று கடிந்து கொண்டாள், பக்கத்து வீட்டு அக்கா.
சினி துளிகள்!
* பிரியா பவானி சங்கர், படப்பிடிப்பின்போது, அருகில் அமருபவர்களிடம், சீரியல்களில் பேசுவது போன்று, பக்கம் பக்கமாக பேசி தள்ளுவதாக, சக நடிகையர் புகார் சொல்கின்றனர்.
அவ்ளோதான்!

