தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/வாரமலர்/இயக்குவது யார், எது?

இயக்குவது யார், எது?

இயக்குவது யார், எது?


PUBLISHED ON : டிச 08, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 08, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் சரி, ஒவ்வொன்றினுள்ளும் உள்ளே இருந்து, 'அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்' இருக்கக்கூடிய அந்த மாபெரும் சக்தி, அனைத்தையும் இயக்கி கொண்டிருக்கிறது.

இதை உணர்ந்து அனுபவத்தில் கொண்டு வந்து, அடுத்தவர்களுக்கும் வழி காட்டுபவர்கள், மகான்கள். உணராதவர்கள் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தாலும், அவர்களின் நிலை என்ன என்பதை விவரிக்கும் கதை இது:

இந்திரன், வாயு மற்றும் அக்கினி மூவருக்கும், தங்களுக்குள் யார் பெரியவர் என்பதை பற்றி, வாக்குவாதம் எழுந்தது.

'நான் தான் பெரியவன். காரணம், நான் தான் மழையை பொழிய செய்பவன். மழையில்லா விட்டால், எந்த உயிரும், எந்த ஜீவராசியும் வாழ முடியாது. ஆகவே, அனைவரையும் காப்பாற்றுபவன் நான் தான்...' என்றார், இந்திரன்.

'உணவில்லாமல் கூட, சில நாட்கள் இருந்து விடலாம். ஆனால், மூச்சுக்காற்று இல்லாமல், யாரும் வாழ முடியாது. ஆகவே, நான் தான் பெரியவன்...' என்றார், வாயு.

'என்ன பேசுகிறீர்கள் நீங்கள் இருவரும்... உடம்பில் சூடு -அக்கினி எனும் நான் இல்லாவிட்டால், எதுவுமே இயங்க முடியாது. ஆகவே, நான் தான் பெரியவன்...' என்றார், அக்கினி பகவான்.

இவ்வாறு வாதம் நடந்த அந்த நேரத்தில், அவர்களின் முன், ஒரு ஜோதி (அம்பாள்- சக்தி) தோன்றியது. அதைப் பார்த்ததும் அக்கினி பகவான், 'யார் நீ...' என, கேட்டார்.

'என்னை பற்றி விசாரிப்பது இருக்கட்டும். நீ யார், அதை சொல்...' என்றது, ஜோதி.

'நான் தான் அக்கினி. இந்த உலகில் எதையும் ஒரு நொடிப்பொழுதில் எரித்து விடுவேன்...' என்றார்.

'சரி... எங்கே இந்த துரும்பை எரி பார்க்கலாம்...' என்ற ஜோதி, ஒரு துரும்பை எடுத்து, அக்கினி முன் போட்டது.

தன் முழு பலத்தையும் திரட்டி, துரும்பை எரிக்க முயன்றார்; முடியாமல் தோற்று திரும்பினார்.

அடுத்து வாயு பகவானிடம், 'நீ யார்...' என, விசாரித்தது ஜோதி.

'நான் தான் வாயு பகவான். நான் வேகமாக வீசினால், என் வேகத்தை தாங்க யாராலும் முடியாது; ஊதித் தள்ளி விடுவேன்...' என்று, பெருமை பேசினார்.

'அப்படியா... எங்கே இந்த துரும்பை ஊதித் தள்ளு பார்க்கலாம்...' எனக் கூற, தன் முழு ஆற்றலோடும் துரும்பை அசைக்கக் கூட முடியாமல், தோற்று திரும்பினார், வாயு பகவான்.

'நான் தான் இந்திரன்; தேவர்களின் தலைவன். மழையை கொட்டி, அனைத்தையும் நனைத்து விடுவேன்...' என்று, பெருமை பேசினார்.

அவர் முன் துரும்பை போட்ட ஜோதி, 'இந்த துரும்பை நனையுங்கள் பார்க்கலாம்...' என்றது.

கொட்டு கொட்டென்று மழை கொட்டியும், சிறிதளவு கூட துரும்பை நனைக்க முடியாமல் தோற்றுத் திரும்பினார், இந்திரன்.

மூவரும் தலை குனிந்து நிற்க, 'நான் தான் பெரியவன் எனும் அகம்பாவம், உங்கள் மூவருக்கும் உள்ளது. வீண் அகம்பாவம் வேண்டாம். உலகில் பெரியவன், சிறியவன் என்று யாரும் கிடையாது.

'தங்கள் கடமையை யார் சரியாகச் செய்கின்றனரோ, அவர்களே பெரியவர்கள். அதுவும் நாம், நம் சக்தியை கொண்டு செய்வதில்லை; தெய்வ பலத்தைக் கொண்டே செய்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்...' என்றது, ஜோதி.

இந்திரன் முதலான மூவரும், கர்வம் நீங்கி திரும்பினர்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கடமை உள்ளது; ஆற்றலும் உள்ளது. தெய்வ பலத்தால் தான், நல்லவிதமாக செய்கிறோம் என்பதை உணர்ந்து செயல்பட்டால், உயர்வை அடையலாம்.

பி.என். பரசுராமன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us