
வெ. ராம்குமார், வேலுார்: 'மணி... உனக்கு, இன்று முதல் மூன்று நாட்களுக்கு, சந்திராஷ்டமம்; யாருடனும் பேசாதீர்...' என்று, ஜோசியம் மீது நம்பிக்கை கொண்டோர் கூறுவதுண்டா...
உண்டே! ஆனால், அப்படி கூறுபவர்களுடன் தான், அன்று முழுவதும் பேசிக் கொண்டே இருப்பேன். எந்த ஒரு இக்கட்டையும் சந்தித்ததில்லை.
நாள் பலன், மாத பலன், ஆண்டு பலன் இவற்றை எல்லாம் படித்து, மனதை குழப்பிக் கொண்டதில்லை. நீங்களும் இதையெல்லாம் படித்து, நேரத்தையும், பணத்தையும் வீணாக்காதீர்!
* ஆர். தினேஷ், கோவை: ஐந்தாண்டு திட்டம் என்கின்றனரே... அதனால், பலன் அடைபவர்கள் யார்?
மோடி அரசின் கடந்த பட்ஜெட்டையோ, இந்த பட்ஜெட்டையோ பற்றி, நான் சொல்ல வரவில்லை. ஆனால், ஆட்சிக்கு முந்தைய ஆட்சிகளின் பட்ஜெட் மூலம், வெட்டி வெட்டி, வீட்டிற்கு கொண்டு சென்றவர்கள், ஒப்பந்ததாரர்கள், இன்ஜினியர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தான். (வரிசையை மாற்றி எடுத்துக் கொள்ளலாம்) பதிலை படித்து விட்டு, இவர், பா.ஜ., உறுப்பினர் என, தப்புக் கணக்கு போட்டு விடாதீர்!
பி. விநாயகன், காரைக்குடி: சிந்திக்க வயது வரம்பு உண்டா?
உண்டு என்றே நினைக்கிறேன்! எனக்கு தெரிந்த, 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு, இது இருப்பதை அறிவேன். ஆனால், 1ம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தை ஒன்றை பார்த்தேன்; அறிவாளி... அப்படியே அசந்து போனேன்!
* கோ. குப்புசுவாமி, சென்னை: போலி டாக்டர்கள் மாதிரி, போலி வக்கீல்களும் இருக்கின்றனராமே... உண்மையா?
கோர்ட்டில் பலிக்காது; ஆனால், போலீஸ் ஸ்டேஷன்களில், கறுப்பு கோட் அணிந்து வாதாடலாம்; இது நடந்து கொண்டுதானே இருக்கிறது!
ருக்மணி தேசிகன், சென்னை: ஒரு நாட்டில், வயதானவர்கள் அதிகரித்தால், அது, நல்லதா... கெட்டதா?
'ஆர்டிக் ஓஷன்' என்ற கடல் பரப்பு, உலகின் வடக்கு பக்கம் உள்ளது. இங்கு, மூன்று நாடுகள் அடுத்தடுத்து உள்ளன.
அவை, நார்வே, ஸ்வீடன் மற்றும் பின்லாந்து. இங்கு, இளைஞர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவு. வீட்டு வாசலில், இரண்டு நாட்களுக்கு பால் பாட்டில்கள் எடுக்கப்படாமல் இருந்தால், கதவை உடைத்து, யார் யார் இறந்துள்ளனர் என்பதை கண்டுபிடிப்பர்.
கடந்த, '83க்கு பின், நிலைமை சிறிது மாறியுள்ளது; இலங்கை நாட்டு, தமிழ் இளைஞர்களை வேலைக்கு அமர்த்தி, தம்மை காத்து கொள்கின்றனர்!
* டி. ராஜா சார்லஸ், சென்னை: பல பெயர்களில், வாசகர்கள் எழுதுவது குறையா... தவறா?
இரண்டுமே இல்லை! கேள்வியின் தகுதியைப் பொறுத்தே, அவை தேர்வு செய்யப்படுகின்றன!

