
பா - கே
அன்று, அலுவலகம் வந்திருந்த குப்பண்ணாவின் கையில், ஏகப்பட்ட கடிதங்கள் இருந்தன.
'இதெல்லாம் என்ன...' என்று விசாரித்தேன்.
'அதை ஏன் மணி கேட்கிற... துாரத்து சொந்தக்கார பெண்ணுக்கு, மாப்பிள்ளை பார்க்க கூறினர். வரும் வரன் எல்லாம் வில்லங்கமாகவே இருக்கிறது. அது சம்பந்தமான கடிதங்கள் தான் இவை...' என்றார்.
'சார்... ரொம்ப கவலைப்படாதீங்க. இப்போ, மாப்பிள்ளையோ, பெண்ணோ, முழு விபரம் வேணும்ன்னு கேட்டா போதும், சேகரித்து கொடுப்பதற்காக நிறைய ஏஜன்சிகள் வந்து விட்டன...' என்றார், அருகில் இருந்த எழுத்தாள நண்பர்.
அவர் கூறியது:
முன்பெல்லாம் ஒரு பையன் ஜாதகம் கிடைத்து, அது பொருந்தினால், உடனே பெண்ணின் அப்பாவோ அண்ணனோ, அந்த பையனின் அலுவலகம் மற்றும் குடும்ப விபரங்களை விசாரித்து, திருப்தியடைந்தால் தான் திருமணத்தை முடிப்பர்.
இன்று, அதற்கெல்லாம் நேரமில்லை. பெண்ணை பெற்றவர், இருந்த இடத்திலிருந்தே கறாராய் கேட்பார்... அதில் முக்கியமான கேள்வி, 'பையனின் அப்பா - அம்மா, கல்யாணத்துக்கு பின், ஊரோடு போயிடுவீங்களா அல்லது கூடவே இருப்பாங்களா?'
பையனை பெற்றவர்களோ, அடங்கி, ஒடுங்கி, பணிவுடன் பதில் சொல்வது இந்த காலம்.
இது, நடுத்தர குடும்பங்களின் நிலைமை. சற்று பெரிய இடமாக இருந்தால், துப்பறியும் நிறுவனத்தை அணுகுவர். இப்போது, அதுவும் போய், இதற்கென உள்ள ஏஜன்சிகளை அணுகி விசாரிக்க சொல்கின்றனர்.
இப்படி விசாரிப்பதற்கென்றே நிறைய ஏஜன்சிகள் வந்து விட்டன. சிலவற்றிற்கு, மும்பை தலைமையகம். இந்தியா முழுவதும், இதற்கு கிளைகள் உண்டு.
இவர்கள் முக்கியமாக விசாரிப்பது எதுவென்றால்...
* கல்வி பின்னணி
* வேலை மற்றும் பொருளாதார நிலை
* சல்லாபங்கள்... ரகசிய உறவுகள்
* 'சோஷியல் மீடியா'வில் ஈடுபாடு
* வாடகை வீடா, சொந்த வீடா
* உடல் நலம்
* புகை மற்றும் மது பழக்கங்கள்
* குடும்ப பின்னணி
இதையெல்லாம் விசாரிக்க, 15 - 30 நாட்கள் எடுத்துக் கொள்கின்றனர். உள்ளூரிலேயே அனைத்தும் முடிந்து விடும் என்றால், அதற்கு ஒரு, கட்டணம்; பல இடங்களில் விசாரிக்க வேண்டுமென்றால், அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
இதற்கான கட்டணம், 15 ஆயிரம் முதல், 50 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது.
சம்பந்தப் பட்டவர்களை தொந்தரவு படுத்தாமல் தான் அனைத்து விசாரிப்புகளும் இருக்கும். ஆதாரத்திற்கு புகைப்படங்களும் எடுக்கப்படுகின்றன. சரி, இப்படி விசாரிக்கும்போது, சில சுவாரஸ்யமான விஷயங்களும் அகப்படும். அப்படி சில:
ஒரு ஏர்லைன்சில், 'ஸ்டூவர்ட்' ஆக பணிபுரிபவருக்கும், ஒரு பெங்களூரு பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டது. பிறகு திருமணம் முடிவு செய்ய, இரு குடும்பத்தினர் சந்திப்பு வரை அனைத்தும் நடந்தன.
அப்போது, 'ஏர்லைன்ஸ் ஸ்டூவர்டு'க்கு, பெண்ணின் சில புகைப்படங்கள், 'சோஷியல் மீடியா'வில் கிடைத்தன. அவற்றை பார்த்ததும், சந்தேகம் எழுந்தது. ஏனென்றால், அதில், அந்த பெண் அலங்கோலமாக காட்சியளித்தாள்.
உடனே, ஒரு ஏஜன்சியிடம் விபரத்தை கூறி, விசாரிக்க சொன்னார்; திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
அந்த பெண், ஒரு நிறுவனத்தில், உயர் பதவியில் இருப்பதாக கூறியிருந்தார். விசாரித்தபோது, அப்படி ஒரு நிறுவனமே இல்லை என தெரிந்தது. உண்மையில், அவள், ஒரு மது பாரில் கவர்ச்சி நடனம் ஆடுபவள் என, தெரிந்தது.
பிறகு என்ன, போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
வட மாநிலங்களில் வேலை பார்க்கும் பையனை பெற்றவர்கள் தான், அதிக வரதட்சணை வாங்குவதற்காக பொய்களை கூறுகின்றனர்.
ஒருவர், இந்திய ரயில்வேயில் வேலை பார்ப்பதாக கூற, விசாரித்தனர். அப்போது, அவர், அங்கு வேலையில் இல்லை என்பதுடன், அதில் சேருவதற்கான தேர்வுக்காக தற்போதுதான் தயாராகி வருகிறார் என்பதும் தெரிந்தது.
பெற்றோர், போதிய அக்கறையெடுத்து நேரில் சென்று விசாரிக்காததே, இவற்றிற்கெல்லாம் அடிப்படை காரணம்.
நிலைமை முற்றி, விவாகரத்துக்கு செல்பவர்கள், இந்த ஏஜன்சிகளில் சொல்லி விசாரிக்கும்போது தான், பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வருகின்றன. இவற்றில் ஏற்கனவே திருமணம் ஆகி, விவாகரத்து பெற்றவர்களும் அடக்கம்.
பெங்களூரு போன்ற நகரங்களில் இந்த ஏஜன்சிக்கு, மாதம், 30 வழக்குகளாவது விசாரிக்க வருகிறதாம்.
இந்த ஏஜன்சிகளின் கொள்கை என்னவென்றால், யாருடைய ரகசியத்தையும் வெளியே சொல்ல மாட்டார்கள். சம்பந்தப்பட்டோரை நேரடியாகவும் தொந்தரவுபடுத்த மாட்டார்கள். சரி, இதையும் மீறி, ஏதாவது தவறு ஏற்பட்டால், விசாரிப்பில் ஈடுபட்டவர், உடனடியாக வேலையிலிருந்து நீக்கப்படுவார்.
'சம்பந்தப்பட்டவரின் கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன் கால்களை ஆராய்வதில்லை; ரகசிய பின்பற்றுதல்களும் செய்வதில்லை; 'டாக்குமென்டு'களை பார்ப்பதும் இல்லை. இருந்தும், விசாரிக்க வேண்டியவரின் அனைத்து தகவல்களையும் கச்சிதமாய் சேகரித்து விடுவோம்...' என்கின்றனர், இந்த ஏஜன்சியை சேர்ந்தவர்கள்.
- இவ்வாறு எழுத்தாள நண்பர் கூறி முடிக்க, 'சரி... சரி... இப்படி ஒரு ஏஜன்சியில் தான், விசாரிக்க சொல்லணும்...' என்று கிளம்பினார், குப்பண்ணா.
ப
சினிமா பி.ஆர்.ஓ., ஒருவர், வயது, 70. லென்ஸ் மாமாவின் பக்கத்து வீட்டுக்காரர். அவர் என்னை சந்திக்க விரும்பியதாக, அழைத்து வந்திருந்தார். அவருடன் பேசியபோது கிடைத்த தகவல்:
எகிப்து நாட்டு பேரழகி கிளியோபாட்ரா, கழுதைப் பாலில் குளித்ததாக கூறுவர். இதேபோல், இந்தியாவிலும் ஒரு ராணி, கழுதைப் பாலில் குளித்துள்ளார். அவர் யார் தெரியுமா, ஆரவல்லி!
ஆரவல்லி, சூரவல்லி, அலங்காரவல்லி ஆகிய மூவரும் சகோதரிகள். இதில், ஆரவல்லி சர்வாதிகாரி ராணி. இவர்கள் ஆண்ட நாட்டில், ஆண்கள் அடிமைகள்.
தன்னை மணக்க வரும் இளவரசர்களிடம், மூன்று கேள்விகள் கேட்பாள், ஆரவல்லி.
வரும் இளவரசன், பதில் அளித்தால், ஆரவல்லியை மணக்கலாம்; இல்லாவிடில் அடிமையாக வேண்டும்.
பல நாட்டு மன்னர்களும், இளவரசர்களும், இவளிடம் தோற்று அடிமையானார்கள். இறுதியில், ஒரு இளைஞன் வந்து அவளை வெற்றி கொள்வதுடன், அவளது கர்வத்தையும் முடிவுக்கு கொண்டு வருவான்.
இந்த ராணியின் வரலாற்றை அடிப்படையாக வைத்து ஒரு படத்தை தயாரித்தது, 'மாடர்ன் தியேட்டர்ஸ்!' படத்தின் பெயர்: ஆரவல்லி. இதில், ஆரவல்லியாக, ஜி.வரலட்சுமி நடித்திருந்தார்.
இப்படத்தில், இவர், கழுதைப் பாலில் குளிக்கும் காட்சியும் உண்டு. அக்காட்சிக்காக, 100 கழுதைகளிடமிருந்து, கழுதைப் பாலை கறக்கவும், அதை மேய்க்கவும், துணை நடிகர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
இந்த படத்திற்காக, உண்மையிலேயே கழுதைப் பாலில் குளித்தார், ஜி.வரலட்சுமி.
பெரிய நகரங்களில், படம் சரியாக போகவில்லை. ஆனால், சிறிய ஊர்களில் ஆரவல்லி, 'சூப்பர் ஹிட்' அடித்தது!
- 'கழுதை பாலில் குளிக்கும் ஆர்வம், இப்போதுள்ள நடிகை யாருக்காவது உண்டா...' என, கேட்டேன்.
மையமாக ஒரு சிரிப்பு சிரித்து கிளம்பினார், அவர்.

