sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சிலுக்கு ஸ்மிதா! (7)

/

சிலுக்கு ஸ்மிதா! (7)

சிலுக்கு ஸ்மிதா! (7)

சிலுக்கு ஸ்மிதா! (7)


PUBLISHED ON : டிச 22, 2019

Google News

PUBLISHED ON : டிச 22, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மிகவும், 'பிசி' ஆக இருந்த, 1982களில், அதிகாலை, 4:00 மணிக்கே, சிலுக்குக்கு, 'மேக் - அப்' ஆரம்பமாகி விடும். 'மேக் - அப், ஹேர் டிரஸ்சிங்' செய்ய என்று குறைந்தது, இரண்டரை மணி நேரமாவது ஆகும். ஆதலால், படப்பிடிப்பு தளத்திற்கு சிலுக்கு வரும் முன்பே, மற்ற நடிகர்களின் காட்சிகளை இயக்க ஆரம்பித்து விடுவார், இயக்குனர்.

'சிலுக்கின் ஆட்டம் சரியில்லை, மறுபடியும் அவர் ஆட வேண்டும்...' என்று, புலியூர் சரோஜா, கங்கை அமரன் போன்றோர் விரும்பினாலும், ஆட மாட்டார்.

கொஞ்சுகிற குரலில், 'எதுக்கு ஒன் மோர்... இதுவே நல்லாதானே இருக்கு...' என்பார்.

'டான்ஸ் மாஸ்டர்'கள் சொன்னபடி ஆடியதில்லை; கஷ்டமாக இருக்கிறது என்று எந்த, 'மூவ்மென்ட்'களையும் மாற்ற சொல்லியதில்லை... தனக்கே உரித்தான, 'ஸ்டைலில்' தன் ஆட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்வார்.

அதை ஈடுகட்டும் விதத்தில், கண்களாலும், உதடுகளாலும் நாலே நாலு, 'க்ளோஸ் - அப்' காட்சிகளில் ரசிகர்களை கிறங்கடித்து விடுவார்.

ஓய்வின்றி நடித்த காலத்தில், உடை மாற்ற கூட நேரமிருக்காது. ஆபத்துக்கு பாவமில்லை என்று, ஏற்கனவே ஒரு படப்பிடிப்பில் ஆடி முடித்த அதே உடைகளோடு, அடுத்த படப்பிடிப்பிலும் ஆடினார்.

பொதுவாக, உணவு இடைவேளையில், வீட்டுக்கு போய் சாப்பிடும், சிலுக்கு, சில சந்தர்ப்பங்களில், படப்பிடிப்பு தளங்களிலேயே சாப்பிடுவார். அப்படி அவர் சாப்பிடுவது, அரை சப்பாத்தி, ஒரு பீஸ் சிக்கன், ஒரு கப் சூப் அவ்வளவு தான்.

'என்ன சுமி... ரொம்ப கம்மியா சாப்பிடுறே...' என்று, புலியூர் சரோஜா கேட்டால், 'குண்டு போட்டு தொப்பை வந்தால், ஆட முடியாது அக்கா...' என்பார்.

சில நேரங்களில், காலையில், வீட்டிலிருந்து படப்பிடிப்பிற்கு கிளம்பும்போதே, பில்டர் காபி எடுத்து செல்வார்; சில புத்தகங்களும் எடுத்து வருவார். அவை பெரும்பாலும், வாழ்க்கை வரலாறுகளாக இருக்கும். இடைவேளைகளில் டவலை எடுத்து, தன் மீது போட்டுக் கொண்டு, படிக்க ஆரம்பித்து விடுவார். வீண் அரட்டை, 'ஹீரோ'வுக்கு ஐஸ் வைப்பது, ஜோக் அடிப்பதை எல்லாம் செய்ததில்லை.

யாரிடமும் நட்பு பாராட்டியதில்லை; பகைமையும் கொண்டதில்லை. ஏறத்தாழ, 16 ஆண்டுகளுக்கு மேல், சினிமாவில், ஏற்ற இறக்கங்களை சந்தித்திருந்தாலும், வணங்காமுடியாகவே இருந்தார்.

யார் சிரித்து பேசினாலும், அதிகம் சிரிக்க மாட்டார். பழகுகிற வரையில், யாரையும் நம்ப மாட்டார்; ஆனால், பழகி விட்டால், அவருக்காக, உயிரை கொடுக்கவும் தயாராக இருந்தார்.

தனக்கு மிகவும் வேண்டிய, புலியூர் சரோஜா இருக்கிற படப்பிடிப்பு தளங்களில் கூட, சில சமயங்களில் எதையோ பறிகொடுத்தவர் போலிருப்பார்.

'தனிப்பட்ட நல்லதும், கெட்டதும் வீட்ல. இங்கே, கொடுத்த, 'கால்ஷீட்'டுக்காக சிரிச்சுக்கிட்டே இரு. பணம் வாங்கும்போது மட்டும் நல்லா இருந்ததா உனக்கு...' என்று, மிக உரிமையுடன், புலியூர் சரோஜா கண்டிக்கும்போதும், அவரின் பதில், ஒற்றை புன்னகையாக மட்டுமே இருக்கும்.

'ஏன் தான், பெண்ணாக பிறந்தோம்... ஏன் சினிமாவில் நடிக்க வந்தோம்...' என்று, சிலுக்கை அழ வைத்த சம்பவம் ஒன்று, ஆந்திராவில் நடந்தது.

அது ஒரு தெலுங்கு படப்பிடிப்பு. அத்துவான காட்டில் நடைபெற்றது. காலையிலேயே ஆரம்பித்த படப்பிடிப்பு, இழுத்துக்கொண்டே போனது.

பொறுத்து பொறுத்து பார்த்தார், படப்பிடிப்பு முடிகிற மாதிரி இல்லை. அன்று கொடுக்கப்பட்டிருந்தது, உச்சி முதல் பாதம் வரை, 'ஜிப்' வைத்திருந்த உடை. எவ்வளவு நேரம் தான், இயற்கை உபாதைகளை அடக்க முடியும்?

கழிப்பறை முதலிய எல்லா வசதிகளும் உடைய வாகனமான, 'கேரவன்'கள் இல்லாத காலம் அது. ஒதுக்குப்புறமாக ஏதாவது இடம் தென்படுகிறதா என்று தேடினார். சற்று துாரத்தில், ஒரு குட்டி சுவர் தென்பட்டது. அப்பாடா என்று எழுந்த சிலுக்குக்கு, பேரதிர்ச்சி...

சுவரின் மறுபக்கத்திலும், மரக்கிளைகளிலும் ஆயிரக்கணக்கான ஆண்கள், தங்கள் தலைகளை மட்டும் காட்டியபடி இருந்தனர்.

அவரது கண்களில் கண்ணீர் பிரவாகம். உதடுகளில் உப்பு கரித்த கண்ணீரோடு, படப்பிடிப்பை முடித்து, மனோரமாவிடம் ஓடினார்.

'என்ன வாழ்க்கை இது, ஆச்சியம்மா... நடிகையை எந்த கண்ணோட்டத்துல இவங்க பார்க்கிறாங்க... நடிகையும் ஒரு பெண்தானே... சக மனுஷிதானே... அப்படி பார்க்கவே மாட்டாங்களா...' என, அழுதபடியே கேட்டார்.

மனோரமாவாலும் பதில் சொல்ல இயலவில்லை. மனோரமாவின் கண்ணீர், தன் தோள்பட்டையை நனைத்தபோது, சற்று ஆறுதல் அடைந்தார்.

இந்த தருணங்கள் எல்லாமும் சேர்ந்து தான், சிலுக்கை, உரம் கொண்ட பெண்ணாக, யாராலும் நெருங்க முடியாதவராக, உருமாற்றியது.

சிலுக்கை பற்றி யார் என்ன பேசினாலும், கங்கை அமரனின், 'யூனிட்'டில் மட்டும், தவறாக ஒரு வார்த்தை வராது. அவரது, 'யூனிட்'டில், பிரியமுள்ள ரெட்டை வால் சுந்தரி, சிலுக்கு.

கங்கை அமரனை, 'அத்தான், மச்சான்' என, கூப்பிட்டும், அவரது தோளை பிடித்து தொங்கியும், ஒரு பால்ய கால சிநேகிதி போல வளைய வருவார். அமரனின் கையை கோர்த்து கொண்டுதான் உட்காரவே செய்வார்.

கங்கை அமரன், முதன் முதலில் இயக்கிய, கோழி கூவுது படத்தில் மட்டுமல்லாது, தொடர்ந்து அவரது இயக்கத்தில் வெளியான படங்களில் தவறாமல் இடம்பெற்றார்.

'என்னை ஏன் போர்த்தி வெச்சு எடுக்கறீங்க...' என்று, அங்கலாய்த்து கொள்கிற அளவுக்கு, அவரை ஆபாசமாக காட்டாமல், மிகவும் ரசிக்கத்தக்க வகையில் படமாக்கியவர், கங்கை அமரன்.

வேலை இருக்கிறதோ, இல்லையோ, கங்கை அமரனின் வெளிப்புற படப்பிடிப்புகளில் தவறாமல் இருப்பார்.

திருவண்ணாமலையில் தான், கோழி கூவுது படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு ஆரம்பமானது. ரூபஸ்ரீ என்ற நிஜ பெயருடன் சினிமாவில் நடிக்க வந்தார், ஒரு புதுமுகம். அவருக்கு, சிலுக்கின் நிஜ பெயரான, விஜியை தான் சூட்டினார், கங்கை அமரன்.

ரூபஸ்ரீக்கு, விஜி என்று பெயர் சூட்டும்போதே, 'என்ன சார்... இந்த புதுமுகத்துக்கு, எம் பேரு வைக்கிறீங்களே... நல்லா வருமா...' என்று ஆர்வத்தோடு கேட்டார்.

கோழி கூவுது படத்தில் நடித்தபோது, சிலுக்குக்கு, ஆங்கிலம் பேச வராது. பிற்காலத்தில் ஆங்கிலத்தில் பேசி, அமரனை மலைக்க செய்தார்.

தன் இமேஜ், மார்க்கெட் மற்றும் இயல்புக்கு தகுந்தபடி, கதாபாத்திரத்தை வடிவமைத்துக் கொள்கிற உரிமையை சிலுக்குக்கு, ஒரு இயக்குனராக வழங்கியிருந்தார், கங்கை அமரன்.

தொடரும்.

பா. தீனதயாளன்






      Dinamalar
      Follow us