sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

இது உங்கள் இடம்!

/

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : டிச 22, 2019

Google News

PUBLISHED ON : டிச 22, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இப்படியும் சிலர்!

என் கணவர், திருமணம் ஆன நாள் முதலே, அவர் அம்மா பேச்சை கேட்டு, அனைவர் முன்னிலையிலும் என்னை கேவலமாக பேசுவார். யாராவது என்னை உயர்த்தி பேசினால் அவருக்கு பிடிக்காது. உடனே, ஏதாவது குறை கண்டுபிடித்து திட்டுவார்.

நான், பிள்ளைகளை கண்டித்தால், 'நீ ஒன்றும் அவர்களை கண்டிக்க வேண்டாம். எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ சமையலை மட்டும் பார்த்துக்கொள்...' என்று, அவர்களுக்கு ஆதரவாக பேசி, நக்கலாக சிரிப்பார்.

இதனால், என்னை மதிக்காமல், அப்பாவை பகடைக்காயாக பயன்படுத்தி, தான்தோன்றித்தனமாக இருந்தனர், மகனும், மகளும்.

'உங்களின் குணம் தவறு. இதை மாற்றிக் கொள்ளுங்கள்...' என, கணவரிடம் எவ்வளவோ எடுத்து சொல்லியும், பலன் இல்லை.

பிள்ளைகள் வளர்ந்து, வாழ்க்கை துணையை அவர்களே தேடிக் கொண்டனர்.

நான் தடுத்தும், 'உனக்கு ஒன்றும் தெரியாது. நீ அந்த கால கட்டுப்பெட்டி...' என்று அடக்கி, இருவருக்கும், அவர்கள் விரும்பியவர்களையே திருமணம் செய்து வைத்தார், கணவர்.

மணமான, மூன்று மாதத்திலேயே திரும்பி விட்டாள், மகள். விபரம் கேட்டால், 'நான் சொன்னால் உடனே திருமணம் செய்து வைத்து விடுவீர்களா... என்ன, ஏது என்று விசாரிக்க வேண்டாமா... அவர்கள், பெரும் கடன்காரர்கள், வங்கியில் என்னை, 'லோன்' எடுத்து தர சொல்கின்றனர். கடனை அடைக்க, நான் என்ன வேலைக்காரியா...' என, வரிசையாக புகார்களை அடுக்கினாள்.

ஆங்கிலோ - இந்தியன் பெண்ணை மணந்த மகனின் வாழ்க்கையிலோ, பிரச்னைகள் சொல்லி மாளாது. கலாசார மாற்றம் மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக, முழு நேர, 'குடி'மகனாகி விட்டான்.

தற்போது, தன் தவறுகளை எண்ணி வருந்துகிறார், கணவர்.

ஆண்களே... ஆண் ஆதிக்கத்தை காட்டுகிறேன் பேர்வழி என்று, பெற்ற பிள்ளைகளின் வாழ்க்கையில் கொள்ளி வைக்காதீர். தாய் கண்டிக்கும்போது, தந்தையும், தந்தை கண்டிக்கும்போது, தாயும் தலையிடாமல் இருந்தால் தான், குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை சிறக்கும்!

எஸ். ரம்யா, சென்னை.

மகிழ்ச்சிக்கான வழி!

கடந்த மாதம் ஒருநாள் மாலை, என் தோழியை சந்திக்க, அவள் வீட்டுக்கு சென்றிருந்தேன். முதியோர் இல்லத்திற்கு சென்றிருப்பதாக, தோழியின் மகள் கூறினாள்.

தோழியின் மாமனாரும் - மாமியாரும் அவளுடன் இருக்கும்போது, இவள், யாரை பார்க்க முதியோர் இல்லத்திற்கு சென்றிருக்கிறாள் என, வியப்பாக இருந்தது. பின், தோழியிடம் இதுகுறித்து விசாரித்தேன்.

சிரித்த அவள், 'ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை மாலையில், முதியோர் இல்லம் செல்வேன், அங்கு தங்கியிருப்பவர்களுடன், சிறிது நேரம் நாட்டு நடப்பு, அரசியல், சுவாரசியமான விஷயங்கள், நகைச்சுவை போன்றவை குறித்து பேசி வருவேன்.

'அவ்வாறு பேசுவது அவர்களுக்கு மன மகிழ்ச்சியையும், எனக்கு நிம்மதியையும் கொடுக்கிறது. இவ்வாறு, வெளியிலிருந்து யாராவது வந்து பேசிக் கொண்டிருப்பதை, அவர்கள் விரும்புகின்றனர். இதன் மூலம் அவர்களது தனிமை உணர்வும் குறைகிறது...' என்றாள், தோழி.

அவளது சேவையை மனப்பூர்வமாக பாராட்டினேன். இப்போது, வார இறுதி நாட்களில், மாலையில் அவளுடன், முதியோர் இல்லத்திற்கு சென்று, அங்கு இருப்பவர்களுடன் பேசி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.

ஓய்வு நேரம் கிடைக்கும் போது, நீங்களும், இதுபோன்ற சேவையை செய்யலாமே...

நமக்கும் மன நிம்மதியாக இருக்கும்; உறவுகளிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டு, முதியோர் இல்லங்களில் தங்கியிருக்கும் பெரியவர்களுக்கு, பெரிய மன ஆறுதலாகவும் இருக்கும்.

ஜே. பிரியதர்ஷிணி, சென்னை.

பழைய பேப்பர்காரரின் பெருந்தன்மை!

எங்கள் வீட்டில், மாதந்தோறும் பழைய பேப்பர் எடுக்கும் வியாபாரிக்கு, மூன்று பெண்கள். மூத்தவள், எம்.பி.ஏ., அடுத்தவள், டிகிரி. கடைசி மகள், பிளஸ் 2 படிக்கின்றனர்.

ஆயிரம் சிரமம் இருந்தாலும், பெண்களை படிக்க வைத்து, நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று நினைப்பவர்.

'எனக்கு ஒரு தம்பி. ஊரில் கடை வெச்சு கொடுத்திருக்கேன். அவனுக்கும், இரண்டு பெண் குழந்தைகள். அவன் சரியில்லை; குடி பழக்கம் உண்டு. சண்டை சச்சரவால் துாக்கு போட்டுக்குவேன்னு வீட்டில் மிரட்டிக் கொண்டிருக்கான். அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாத்தணும்...' என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அதற்குள், விபரீதம் நடந்து விட்டது. கிணற்றில் விழுந்து, தற்கொலை செய்து கொண்டான், தம்பி.

ஊருக்கு போன வியாபாரி, தம்பியின் இறுதி சடங்கை முடித்து, சோகத்துடன் திரும்பினார். நாங்கள் ஆறுதல் சொன்னோம். தம்பியின் இரண்டு மகள்கள் பற்றி விசாரித்தோம்.

'பொறுப்பில்லாம போய் விட்டான். அதற்காக அவன் குழந்தைகளை விட்டுட முடியுமா, அழைத்து வந்துட்டேன். மொத்தம், ஐந்து குழந்தைகளுக்கும் பாடுபட வேண்டியது தான்...' என்றார்.

சாதாரண பழைய பேப்பர்காரர், அசாதாரண மனிதராக எங்களை பிரமிக்க வைத்து விட்டார். உலகில் இப்படியும் சில நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான், மழை பெய்கிறதோ என்று நினைத்துக் கொண்டேன்.

எஸ். சுகுமார், சென்னை.






      Dinamalar
      Follow us