
* ஏ. அப்துல் ரஹ்மான், பொன்னமராவதி: தமிழகத்தில், அனைவரும் துாய தமிழில் பேசும் காலம் எப்போது வரும்?
மீண்டும், மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்... அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, 'ழ' உச்சரிக்க வந்த பின், தமது மாணவர்களை திருத்துவர்; அப்போது, உங்கள் ஆசை நிறைவேறலாம்!
இ. சாரினா, புதுமண்டபம், ராமநாதபுரம்: இவ்ளோ பேருக்கு பதில் சொல்கிறீர்களே... உங்களுக்கு, சலிப்பு தட்டலியா?
தபால் அலுவலகத்துக்கு விடுமுறை விடும்போது தான் சலிப்பு தட்டும்; அன்று, தபால் எதுவும் வராதே! நல்லவேளை, 'இ - மெயில்' கண்டுபிடித்து விட்டனர். அதிலாவது, 10 கேள்விகள் வரும்!
ரா.விஸ்வநாதன், சென்னை: தமிழை, 'காட்டுமிராண்டி' மொழி என்றவர், ஈ.வெ.ராமசாமி... அப்படி இருக்கையில், தமிழகத்தை, 'பெரியார் மண்' என்கின்றனரே, சில அரசியல் கட்சி தலைவர்கள்...
உங்களுக்கு கிடைக்கும் நேரத்தை, அநாவசியமாக செலவிடுகிறீர்கள் எனக் கருதுகிறேன்! இப்படிக் கூறும் பத்திரிகைகளையும், 'டிவி'சேனல்களையும் பார்த்து, நேரத்தை வீணாக்காதீர்!
உங்களின் அடுத்த கேள்வியும், நான் சொல்வது சரிதான் என்பது உண்மையாகிறது.
அடுத்த கேள்வி: காஷ்மீர் விவகாரத்தில், பி.பி.சி., சேனல், ஒருதலைபட்சமான செய்திகளை வெளியிடுகிறதே...
நேரம் நமக்கு மிக முக்கியம்... 'டோன்ட் வேஸ்ட் யுவர் டைம்!'
என். பாலசந்திரன், திருப்பூர்: 'அந்துமணி அண்ணா... ரொம்ப நாளா, எனக்கொரு சந்தேகம்ண்ணா... பொதுவா, தன் கணவரை, மனைவி கூப்பிடும்போது, ஏங்க, வாங்க, போங்கன்னு கூப்பிடுவதை தான் பார்த்திருக்கிறேன். ஆனால், பிராமண குடும்பத்தினர், 'ஏண்ணா, வாங்கண்ணா, போங்கண்ணா...' என்று கூப்பிடுகின்றனரே... கணவர், எப்படி அண்ணன் ஆவார். விளக்கமளிப்பீரா...
முன்பெல்லாம், கணவரை, 'கண்ணா, கண்ணா...' என்று தான் ஆசையாக அழைத்திருக்கின்றனர். வழி வழியாக வந்த இந்த பழக்கம், நடுவில், கண்ணா என்று அழைப்பது, யார் காதிலோ, அண்ணா என்று விழுந்துள்ளது. வேகமாக உச்சரிக்கும்போது, ஒரே மாதிரியான ஓசை தான் வெளிப்படும். முதல் எழுத்து, அந்த ஓசையில் மறைந்து விடும். அதிலிருந்து, கண்ணா என்பது, அண்ணா என்று மருவி விட்டது!
விஷயம் தெரியாமல், அதையே வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர், அடுத்தடுத்த தலைமுறையினர்.
பதில் உபயம்: குப்பண்ணா.
* கு. கணேசன், மறைமலைநகர், செங்கல்பட்டு: மது போதை, அதிகார போதை... எது ஆபத்தானது?
இரண்டாவது, திஹாரில் அடைத்து விடும்; முதலாவது, அடுத்த நாள் வீடு போய் சேர்ந்து விடலாம்!