
காலை, 7:00 மணிக்கெல்லாம், வெள்ளை வேட்டி, சட்டை சகிதமாக வெளியில் கிளம்ப தயாராக இருந்தார், சின்னதுரை.
சின்ன கருப்பனும், செல்லம்மாளும், பழைய, டி.வி.எஸ்., வண்டியில் வந்திறங்கினர்.
''என்ன, சின்ன கருப்பு, 6:00 மணி வேலைன்னா, 8:00 மணிக்கு தான் வருவீங்க போலிருக்கு. சரி, சரி... ஆத்தோரம் தோப்புல, தண்ணீ ஊத்துற தொட்டிகளை சுத்தி மண்ணை அணைச்சு, வரப்ப நல்லா உசத்தி கட்டுங்க... களை செடி ஒண்ணு விடாம புடுங்கி, குவிச்சு எரிச்சுடுங்க... ம், சீக்கிரம் கிளம்புங்க,'' என, ஒரு மாத வேலையை, ஒரு நொடியில், சின்னதுரை சொல்லி முடிக்க, ''சரிங்கய்யா!'' என்று, இருவரும் புறப்பட்டனர்.
வெளீரென நுரை பொங்க ஓடி வரும் வெள்ள நீர், இரு கரைகளையும் முத்தமிட்டு, பாம்பு போல் வளைந்து நெளிந்து ஓடி வருவதால், அதற்கு, 'பாம்பாறு' என, பெயர் ஏற்பட்டது.
ஆற்றின் புறக்கரை புறம்போக்கு நிலம், 30 ஏக்கர், தலைமுறை தலைமுறையாய் அப்பகுதி மக்கள், மாடு மேய்க்கும் மந்தையாக இருந்தது. அரசு பதிவிலும் அப்படி தான் உள்ளது. அவ்விடத்தின் அருகே, வெறும், 2 ஏக்கர் மட்டுமே, சின்னதுரைக்கு, சொந்தமாக இருந்தது.
வாளரமாணிக்கம் ஊராட்சி ஒன்றிய தேர்தலில், மழைக்கு கூட ஒதுங்காத, சின்னதுரையின் மனைவி, அரியாள் அம்மாள் போட்டியிட்டு, வெற்றி பெற்று, பஞ்சாயத்து தலைவியாக பொறுப்பேற்றாள்.
ஊராட்சி கூட்டங்கள், அரசு விழாக்கள் அனைத்திலும், மனைவியை சோளக்கொல்லை பொம்மையாக உட்கார வைத்து, தானே தலைமை ஏற்பார், சின்னதுரை. அரசு திட்டங்கள் ஏதும் இதுவரை செய்யப்படவில்லை என்று, ஊராட்சி மக்கள் குமுறினர்; சின்ன கருப்பனுக்கும் அந்த மனக்குமுறல் இருந்தது.
ஆற்று தோட்டத்தின் அருகில் நின்று சிந்தனையை ஓடவிட்ட சின்ன கருப்பனை, ''பொழுதாவுது... மம்பட்டிய எடுத்துட்டு வாய்யா... இம்புட்டு நேரமா என்ன செஞ்சீங்கன்னு, வந்து கரிச்சு கொட்டுவாங்க,'' என, அவள் மனைவி, செல்லம்மாள் கட்டளையிட, மண்வெட்டி, அரிவாளுடன் நிலத்திற்குள் இறங்கினான்.
ஆற்றங்கரையோரம் பசுமையான அந்த இடத்தின் அழகையும், அருமை பெருமைகளையும் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், மாடு மேய்க்கும் அந்த நிலத்தின் அருகில், சின்னதுரைக்கு சொந்தமான, 2 ஏக்கர் நிலமும் இருந்ததால், இதை வளைத்துபோட, சாதகமாகி விட்டது.
ஏழைகளுக்கு, 2 ஏக்கர் நிலம் பிரித்து கொடுக்க அரசு கொண்டு வந்த திட்டத்தின் கீழ், மாடு மேய்க்கும் மந்தையாக இருந்த, 30 ஏக்கர் நிலத்தையும், தன் குடும்பத்திற்கே சொந்தமாக்கிக் கொண்டார், சின்னதுரை.
வேலை முடித்து, சின்ன கருப்பனும், செல்லம்மாளும் புறப்பட்டனர்.
அரை மணி நேரத்தில், இரண்டு, 'டிப்பர்' லாரி, இரண்டு, 'டாரஸ்' வாகனங்கள் புழுதியை இறைத்து, செஞ்சாரல் சாலையை மறைத்து, ஆற்றுக்குள் இறங்கியது.
''யோவ், கொஞ்சம் இருய்யா... வெயில் ஒத்துக்கல, வயித்த அனத்துது; ஆத்தங்கரையோரம் போயிட்டு வரேன்,'' என்றாள், செல்லம்மாள்.
போன வேகத்திலேயே நெஞ்சு பதை பதைக்க, ''அடியாத்தி, பாத்தியா கொடுமையை... நான் என்ன செய்வேன்,'' என, ஓடி வந்தாள்.
''என்ன, செல்லம்மா?''
''இப்ப போன வண்டியெல்லாம் ஆத்துக்குள்ள இறக்கி, திருட்டுத்தனமா மணலை அள்ளுறாங்கய்யா... வண்டி நிக்கிறதே தெரியாத அளவுக்கு பள்ளம் தோண்டி, மணல் பூரா அள்ளிட்டாங்கய்யா,'' என, பதறினாள்.
''சரி... வா, வீட்டுக்கு போகலாம்.''
''என்னய்யா, சர்வ சாதாரணமா சொல்ற?''
''வா, செல்லம்மா... வீட்ல போய் பேசிக்கலாம்.''
தார் சாலையில், பொதுப்பணித்துறை என்ற வாசகத்துடன், வெள்ளை நிற கார் ஒன்று, சின்ன கருப்பன் வண்டியை வழி மறித்து நின்றது.
''என்ன, சின்ன கருப்பு... ஐயா, ஆத்து தோட்டத்துல தானே...'' என, காரினுள் இருந்து, குரல் மட்டும் கேட்டது.
''ஆமாங்க,'' என சொல்லி புறப்பட்டனர்.
''யாருய்யா அது?'' என்றாள், செல்லம்மாள்.
''பேசாம வா,'' என்று சொல்லி, வண்டியின் வேகத்தை கூட்டிய, சின்ன கருப்பன், வீட்டிற்கு சென்று, கட்டிலில் சாய்ந்தான்.
பாத்திரங்களை துலக்கி, ஒரு சொம்பில் குடிநீரும், மற்றொன்றில், சுக்குமல்லி காபியுடன் வந்தாள், செல்லம்மாள்.
''யோவ், எழுந்திருய்யா!''
இருவரும், சுக்குமல்லி காபியை பருகினர்.
''நாம ஆதங்கப்பட்டு என்னம்மா பண்றது... தன்னோட தோட்டம்ன்னு சொல்லி, 10 ஆண்டுக்கு மேலா, ஆத்து மணலை அள்ளி திருட்டுத்தனமா வித்து, இன்னிக்கு, கோடிக்கு அதிபதியாயிட்டாரு... அவருகிட்ட, கூலிக்கு மணல் அள்ளிப் போனவங்க, இன்னைக்கும் கூலி வேலை தான் செய்யிறோம்,'' என, மனைவிக்கு விளக்கினார், சின்ன கருப்பன்.
''மழை வருவதும், புள்ளப் பொறப்பும் மகாதேவனுக்கே தெரியாதுன்னு சொல்லுவாங்க... அப்படி திடீர்ன்னு இயற்கை வேகமெடுத்து, மழை, வெள்ளம் வந்தா, மணல் திருடி கரையே இல்லாம போன அந்த இடத்துலதான்யா முதல்ல உடைப்பு ஏற்படும். அப்ப, வெள்ளத்துல அடிச்சுட்டு போறது, முதல்ல நம்ம ஊருதான்ய்யா,'' என, ஓலமிட்டாள், செல்லம்மாள்.
''வாளரமாணிக்கம் ஊராட்சி வட்டாரமே சேர்ந்து பலமுறை புகார் கொடுத்தாச்சு... பல தடவை போராட்டம் நடத்தியாச்சு... இதனால, பெரிய அடிதடி, சண்டை, வம்புன்னு வந்து, நம் முன்னாள் ஊராட்சி தலைவருக்கும், சின்னதுரைக்கும் இன்னவரைக்கும், வழக்கு நடந்துகிட்டிருக்கு...
''ரோஷத்தோடு நேர்மையா தட்டிக்கேட்ட, ரெண்டு தாசில்தார்களை இன்னைக்கு வரை கண்டுபிடிக்க முடியல...
2 ஏக்கர் நிலத்துக்கு, பட்டா தர்றேன்னு சொல்லியே, ஏழெட்டு வருஷமாச்சு... அரைக்காணி நிலம் கூட, நமக்கு கிடைக்கல,'' என்றார், சின்ன கருப்பன்.
''அப்போ, இவ்ளோ நாள் பொய் தான் சொன்னாங்களா,'' குறுக்கிட்டாள், செல்லம்மாள்.
''நம்மட்ட சொன்ன மாதிரி, 15 பேர்ட்ட சொல்லியிருக்கார். நம்மள மாதிரி வேலையாளுங்ககிட்ட சொல்லி, அவுங்க மனச ஆறுதல்படுத்தி, காலம் பூரா வேலை வாங்கிப்பாங்க. அவங்க குடும்பமே பக்கா சுயநலவாதிங்க,'' என்றார்.
''அப்போ, இதுக்கு முடிவே இல்லையா,'' என்றாள்.
''இருக்கு... இருக்கு... பெரியநாயகி கண்ணு முழிச்சு பாக்காமலா போயிருவா,'' என்று, முடிவாக, ஊர் அம்மன் பெரியநாயகியை துணைக்கு அழைத்து, மனைவியின் மனதை தேற்றினார்.
''அம்மா,'' என்றபடியே வந்தான், மகன் கைலாசம்.
''என்னை, அம்மான்னு கூப்பிடாதடா... பிச்சையெடுக்காத குறையா, படாத பாடுபட்டு, உன்னை படிக்க வச்சா... நீ என்னடான்னா குண்டுச்சட்டிக்குள்ள குதிரை ஓட்டுற கதையா, சின்னதுரை குடும்பத்துக்கு, குப்பை அள்ளுறேன், மணல் அள்ளுறேன்னு மம்பட்டிய புடிச்சு திரியறே...
''ஒங்கப்பனுக்கு, அந்த சின்னதுரை கொடுத்த பட்டம், முட்டாப் பயலாம். இதுக்கா உன்னை படிக்க வச்சோம்... எங்காவது ஒரு கம்பெனி, கிம்பெனிக்கு, போன்னா கேக்கறியா,'' என்றாள்.
''இன்னும் ஒரு வாரம் பொறும்மா... ஒரு முக்கியமான காரியம் முடிக்க வேண்டி இருக்கு,'' என்றான், கைலாசம்.
''இத தாண்டா நாலு வருஷமா சொல்ற... கேட்டு கேட்டு காதும் புளிச்சு போச்சு,'' என, கத்தினாள்.
''உடம்புக்கு சரியில்லையாப்பா,'' விசாரித்தான், கைலாசம்.
''அது ஒண்ணுமில்லை... ஒடம்பு கொஞ்சம் அலுப்பா இருக்குப்பா,'' என்றார், சின்ன கருப்பன்.
நள்ளிரவு, 12:00 மணி.
வீட்டின் பின்புறம் இரு உருவங்கள் மெதுவாக பேசியது, செல்லம்மாளின் காதிற்கு எட்டியது. அவர்கள் யார் என கண்டுகொள்ள முடியாவிட்டாலும் பேசுவதை காது கொடுத்து கேட்டாள்.
''தன் மேல எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருக்க, அதிகாரிகளுக்கு வேணும்ங்கிற அளவுக்கு கவனிக்கிறாராம், சின்னதுரை. உள்ளூர் போலீசோ, தாலுகா அதிகாரிகளோ கண்டும் காணாம ஒதுங்கிடுவாங்களாம்,'' என, மகன் கைலாசம், தந்தையிடம் சொல்லிக் கொண்டிருக்க, இடைமறித்தார், சின்ன கருப்பன்...
''அது தெரியும்டா!''
''அப்பா... மூணு நாளைக்கு ஒரு தடவையோ, இல்ல, அஞ்சு நாளைக்கு ஒரு தடவையோ மணல் திருடி ஏத்துறாங்க... மணல் போகும்போதே, உள்ளூர் போலீஸ்காரங்க, 'வண்டி வரலாம்... வரவேண்டாம்'கிற விபரத்தை, சின்னதுரைக்கு போன்ல சொல்றாங்க; அந்த அளவுக்கு, சின்னதுரைக்கு உடந்தையா சிலர் இருக்காங்கப்பா...
''இதுபோன்ற அதிகாரிங்க, அரசியல்வாதிகள கைக்குள்ள போட்டுகிட்டு, ரொம்பவே ஆட்டம் போடுறாரு, சின்னதுரை.
''எவ்வளவு விரிஞ்சு ஓடின ஆறு, ஒரு சின்ன கால்வாயா சுருங்கிடுச்சு... இவுங்களே, ஒரு தீவிரவாத கும்பலா மாறிட்டாங்களே... இத, நாம தான் தடுக்கணும்ப்பா,'' என்றான், கைலாசம்.
''சரி... எல்லாம் தயாரா வச்சிருக்கியா,'' என்றார்.
''புகைப்படம், 'வாட்ஸ் ஆப்' செய்தி, யார் யாருக்கு என்ன தொடர்பு, யாருக்கு எவ்வளவு லஞ்சம், எத்தனை மணிக்கு வண்டியில மணல் ஏறுது, இறங்குது, பிரதான சாலைக்கு வண்டி போகும்போது, ஓட்டுனரை மாத்துறது, எங்கெல்லாம் அதிகாரிங்க கண்டுக்காம ஒதுங்குறதுன்னு, எல்லா ஆதாரங்களும் தயாரா வச்சிருக்கேம்பா,'' என்றான்.
''சரி... அதையெல்லாம் காலையில என்கிட்ட கொடு,'' என்றார்.
''நீ எப்படிப்பா... உனக்கு என்னப்பா...'' என இழுத்தான், கைலாசம்.
''நான் முட்டாப் பயதானே, என்னால என்ன முடியும்ன்னுதானே கேக்கறே... டேய், நான் படிக்காதவன் தான், கூலி வேலை செய்யலாம்... ஆனா, பெத்த புள்ளைகளை வளர்த்து, ஆளாக்குறோம்ல... அப்புறம் நான் எப்படி முட்டாப்பயலா இருக்க முடியும்... எங்களை போன்ற தகப்பன்கள் ஏணிகள்; சுமைதாங்கிகள்.
''இன்னிக்கு ஏதோ வறுமையில, சின்னதுரைகிட்ட கூலி வேலை செய்யிறோம். அறிவாளியா இருக்கணும்; ஆனா, முட்டாளா நடிக்கணும்... எங்க அப்பா காலத்துல, சின்னதுரை குடும்பம், சாப்பிடுறதுக்கே கூழு கிடைக்காதப்ப, கேப்பை, சோளம்ன்னு கொடுத்து உதவினார்.
''எல்லாத்தையும் அந்த பெரியநாயகி பாத்துகிட்டுதான் இருக்கா,'' என, சின்ன கருப்பன் சொல்லியதை கேட்டு, வியந்தான், கைலாசம்.
''சரிப்பா... நீ சொல்ற மாதிரி செய்யுறேன்பா,'' என்றான்.
''பல ஆயிரம் உயிர்களை காப்பாத்துறதுனால, நம் ரெண்டு உயிர் போறத பத்தி யோசிக்க வேண்டாம். வெளி உலகத்துக்கு நான் முட்டாப்பயலாவே இருந்துட்டு போறேன். நீ போய் துாங்கு... காலையில பாப்போம்,'' என்றார்.
இருவரும் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட, செல்லம்மாள், மனதுக்குள் பெருமைப்பட்டு, துாங்க சென்றாள்.
காலையில், தேநீர் கோப்பையுடன் மகனை எழுப்ப சென்றாள், செல்லம்மாள்.
மகன் கைலாசம், தந்தை சின்ன கருப்பனிடம், ஏதேதோ முக்கிய ஆவணங்கள், புகைப்படங்கள் அடங்கிய நகல்களை கொடுத்து, இடையிடையே அலைபேசியில் யாருக்கோ தகவல் சொன்னான்.
'இப்ப நாம தொந்தரவு செய்யக்கூடாது' என, நினைத்தபடியே திரும்பினாள், செல்லம்மாள்.
மகனிடம் பெற்றுக் கொண்ட நகல்களுடன், அறந்தாங்கி செல்லும் நகர பேருந்தில் பயணித்தார்.
செல்லம்மாளும், மகன் கைலாசமும், சின்னதுரை தோப்பிற்கு, வேலைக்கு சென்றனர்.
''எங்க செல்லம்மா, உன் புருஷன்,'' என்றார், சின்னதுரை.
''ஒடம்புக்கு சரியில்லைங்கய்யா... ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வரேன்னாரு,'' என்றாள்.
''அட முட்டாப்பயலே... வந்திருந்தா, தைலம் தந்திருப்பேனே, தேய்ச்சுகிட்டு வேலையையும் பார்த்திருக்கலாமே... சரி... சரி... செல்லம்மா, நீங்க பன்னெண்டு பொம்பளைங்களும், கரும்புக்கு, குப்பையை வைங்க, நாளைக்கு உரத்தை வச்சு தண்ணி பாய்ச்சணும். போங்க,'' என கட்டளையிட்டார், சின்னதுரை.
ஓரிரு நாட்களில், சின்னதுரையின் ஆற்று தோட்டத்தை சுற்றி வளைத்தது, காவல் துறை பட்டாளம். யாரையும், எங்கும் நகர விடாமல் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.
காலை, 6:00 மணிக்கெல்லாம், மாவட்ட ஆட்சியர், தாலுகா மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள், துணை கண்காணிப்பாளர் படை என, சகலரும் வந்திறங்கினர். அனைத்தையும் நேரடியாக பார்வையிட்டு, சின்னதுரை குடும்பத்தினரை கைது செய்தனர்.
பத்திரிகை நிருபர்கள், 'டிவி' செய்தியாளர்கள் பல்வேறு கோணங்களில் படம் பிடித்து, செய்தி சேகரித்தனர்.
வேடிக்கை பார்த்த பொதுமக்கள் மனங்களில், அமைதி வெள்ளம் ஓடியது. காலை, 10:00 மணிக்கெல்லாம் அச்சம்பவம், 'டிவி'யில் சிறப்பு செய்தியாக ஓடிக் கொண்டிருந்தது.
''அம்மா... ஒருத்தன் அமைதியா இருந்துட்டா, அவன் முட்டாள் இல்லம்மா... முட்டாளும் சில விஷங்கள்ல அறிவாளிதாம்மா. சின்னதுரை போன்ற ஆளுங்களுக்கு இது தெரியாதும்மா... அவங்கள போல, அப்பாவ கரிச்சு கொட்டாம பாத்துக்க...
''நான், ஒரு கம்பெனி வேலை விஷயமா, பெங்களூரு போயிட்டு வரேன்,'' என்ற கைலாசம், உடைமைகளை ஒரு பெட்டியில் வைத்து, கிளம்பினான். அவனை, உச்சி முகர்ந்து வழியனுப்பினாள், தாய் செல்லம்மாள்.
தென்றல் காவியன்
இயற்பெயர்: டி.சிவக்குமார். ஊர்: புத்தன்பட்டி, சிவகங்கை மாவட்டம். நாடக பாடல்கள் மற்றும் ஆன்மிக பாடல்கள் எழுதுவதில் ஆர்வம் உள்ளவர். கதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் இருந்தாலும், இதுவரை எந்த படைப்பும் வெளியானதில்லை. இச்சிறுகதை ஆறுதல் பரிசு பெற்றிருப்பது, மிகப்பெரிய ஊக்கமாக இருப்பதோடு, மகிழ்ச்சியையும் அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

