/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
புது வருடம் சந்தோஷமாய் அமைய வேண்டுமா!
/
புது வருடம் சந்தோஷமாய் அமைய வேண்டுமா!
PUBLISHED ON : டிச 29, 2019

தினமும், டைரி எழுத ஆரம்பியுங்கள். அன்றாடம் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை டைரியில் எழுதி வையுங்கள். பிறகு, படிக்கும்போது, சின்ன விஷயம் கூட, சந்தோஷம் தரும் என்பதை உணர்வீர்
* பொழுதுபோக்கு நிச்சயம் தேவை. அந்த பொழுதுபோக்கும், சிறந்த பயனுள்ளதாக இருக்குமானால், நேரமே போதாது
* மறப்போம்; மன்னிப்போம். பழிக்கு பழி என நினைப்பதே, உடலுக்கு தீங்கானது. ஒருவர், நமக்கு தீங்கு செய்தாலும், அவரை மன்னிப்பதோடு, அதை மறந்தும் விடுங்கள். அது சார்ந்த, 'டென்ஷன்' மற்றும் மன உளைச்சல் காணாமல் போகும்
* தினமும், 20 பக்கம் படியுங்கள். குறிப்பாக, இலக்கியம் சார்ந்த புத்தகங்களை படியுங்கள். அத்துடன், நம் மூளையும், சரிசமமாக சிந்திப்பதை உணரலாம். மராத்திய எழுத்தாளர், காண்டேகரின் கதைகளை படிக்கும்போது, அவரை விட கூடுதல் கற்பனையில், படிப்பவர்கள் மூழ்கி விடுவது நிரூபிக்கப்பட்டுள்ளது
* ஒரு லட்சியத்தை ஏற்படுத்தி, அதை சாதிக்க, திட்டமிட்டு உழையுங்கள். அதன் ஒவ்வொரு அடியும், சந்தோஷத்தை தரும். இது, உங்களை துாண்டிவிட்டு, மேலும் முனைப்புடன் செயல்பட்டு வெற்றி காண உதவும்
* எதிர்பாராத மன வருத்தம், திடீர் தோல்விகள் நம்மை பாதிக்கலாம். அப்போது, அவற்றை சமாளித்து வெளியே வருவது எப்படி என யோசியுங்கள். நெருக்கடி நேரும்போதெல்லாம் இந்த யோசனை கை கொடுக்கும்
* மன அழுத்தத்தை சுமையாக நினைக்காதீர். 'இப்படியாகி விட்டதே...' என, மன வருத்தமும் வேண்டாம். இது, வேலையில் மேலும் அக்கறையுடன் செயல்பட வைத்து, சவால்களை எதிர்கொள்ள உதவும். மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில், வேலை மாற்றி ஏதாவது செய்யுங்கள். அது, தானாக குறைந்துவிடும்
* ஒருவரை ஒருவர் சார்ந்து, அதே சமயம் வலுவான உறவை பராமரித்தால், குடும்பத்தில் சந்தோஷம் நிலவும்
* ரயில், பஸ், திருமணம் மற்றும் பொது இடங்களுக்கு செல்லும்போது, பல புதியவர்களை சந்திப்போம். அவர்களுடன் சகஜமாய் அளவளாவதன் மூலம், மனதை லேசாக மாற்றிக்கொள்ள முடியும். உம்மணா மூஞ்சியாக இருந்தால், சந்தேக பார்வையும், சங்கடமும் தான் மிஞ்சும்
* வீட்டில், வளர்ப்பு பிராணி இருந்தால், அதனால் வரும் சந்தோஷமே அலாதி. மற்றவர்கள் அதை பற்றி கேட்கும்போதும், அதனோடு, விளையாடும்போதும், சந்தோஷம் அதிகமாகும்; மன அழுத்தம் இருந்தாலும் பறந்தோடி விடும்
* குழந்தைகளிடம், பெற்றோர் பேசி மகிழ்ந்தால், அவர்கள் மனதில் தன்னம்பிக்கை பிறந்து, மேலும் சாதிக்க துடிப்பர். அந்த துடிப்பு தான், நம் சந்தோஷம்
* மனைவி தான், கணவனுக்கு காபி போட்டு தரணும்ன்னு இல்லை. கணவனும், மனைவிக்கு போட்டு தரலாம். இது, மனைவியை சந்தோஷப்படுத்தி, கூடுதல் ஆர்வத்துடன் அவரது வேலையை தொடர துாண்டும்
* தோட்டம் இருப்பின், அதை சீர்செய்யலாம். அது, புது தெம்பை தரும். மனம், 'டல்' அடிக்கிறதா... வெளியே வந்து, மரம், செடி, கொடிகளை பாருங்கள். அவற்றின் வளர்ச்சி, தன்மை பற்றி யோசியுங்கள். மனதுக்கு இதமாகும்
* 'டிவி'யில் நகைச்சுவை காட்சிகளை பார்க்கலாம்; பிடித்த பாடலை கேட்கலாம். இது, கூடுதல் சந்தோஷம் தரும்
* வேளா வேளைக்கு சரிவிகித சாப்பாடு, ஓய்வு, துாக்கம் என, பழகி பாருங்கள். வாழ்க்கை சந்தோஷமாய் போவதை உணர்வீர்
* தினமும் குறைந்தது, 30 நிமிடங்களும், வாரத்திற்கு, ஐந்து நாட்களும் உடற்பயிற்சி செய்யுங்கள். உடம்பும் நன்றாக இருக்கும்; நாமும் மகிழ்ச்சியாக இருப்போம்
* 'ஆறு மணி நேரத்திற்கு குறைவாக துாங்குவோர், மற்றவர்களை விட, 30 சதவீதம் குறைந்த மகிழ்ச்சியையே அனுபவிக்கின்றனர்...' என்கிறது, ஒரு ஆய்வு. ஆகவே, துாங்கும் நேரத்தை அதிகப்படுத்தி, சந்தோஷத்தை கூட்டுங்கள்
* உறவினர்களிடம் கலகலப்பாக பேசுங்கள். இது, அலுவலகத்தில் பதவி உயர்வு வாங்குவதற்கு சமம். அது மேலும் சந்தோஷத்தை துாண்டும்
* கடையில் வாங்குவதை விட, நீங்களே செய்து சாப்பிடும் உணவு, கூடுதல் திருப்தி தரும். வீட்டு சாப்பாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து, அதில் சந்தோஷம் காணுங்கள். ஏதாவது, ஐட்டம் நன்றாக இருந்தால், மனைவியை பாராட்டவும் மறக்காதீர்
* ஞாயிற்றுக்கிழமை, வீட்டில், வெளியில் ஜாலியாக இருந்துவிட்டு, திங்கட்கிழமை அலுவலகம் செல்லும்போது, ஒரு துடிப்புடன் வேலை செய்வோம். அந்த வேகம், செவ்வாய், சற்று குறையும், புதன் கிழமை, துடிப்பு மேலும் குறையும்.
அன்று மாலை, குழந்தைகளுடன் கடை வீதிக்கோ, நண்பர்களின் வீடுகளுக்கோ சென்று வாருங்கள். வியாழன், புது தெம்புடன் வேலையை தொடரலாம். பிறகு, வெள்ளிக் கிழமை, சற்று குறைந்து, சனியன்று மேலும் தெம்பு குறையும்போது, மறுபடியும் ஞாயிறு வந்து நம்மை காப்பாற்றி விடும்
* கூலிங்கிளாஸ் அணிவதில் கூட மகிழ்ச்சி உண்டு. நாம் அபூர்வமாய் அதை அணிந்து நடந்து பாருங்கள். ஒரு, 'த்ரில்'லும், சந்தோஷமும் ஏற்படும்
* ஒரே சமயத்தில், பல வேலைகளையும் இழுத்து போட்டு செய்யாமல், முதலில் ஒரு வேலையை செய்யலாம். கச்சிதமாய் அந்த ஒரு வேலை முடியும்போது, மனம் சந்தோஷபடுவதுடன், அடுத்த வேலையை அதே மாதிரி எடுத்து முடிக்கவும் துாண்டும்
* சில சமயங்களில், பணம் கூடுதலாக செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், தயங்காமல் செலவழிக்கவும்.
* சீக்கிரம் வீடு வந்துவிட முடியுமானால், மனம் சந்தோஷமடையும்; குடும்பத்தினரும் மகிழ்வர்
* சுற்றுலா மற்றும் 'பிக்னிக்' போதல், மனைவி அல்லது கணவன் வழி நண்பர்கள் வீடுகளுக்கு பரஸ்பர விருப்பப்படி செல்லுதல் ஆகியவற்றின் மூலமும், புது அனுபவமும், சந்தோஷமும் பெற முடியும்
* நல்லதை பார்த்தால், அதை செய்தவரை மனதார பாராட்டுவோம். அது நமக்கே நிகழ்ந்திருந்தால் மறக்காமல் உடனுக்குடன் நன்றி செலுத்துவோம். இதன் மூலமும் அலாதி சந்தோஷம் பெற இயலும்
* எப்போதும், சந்தோஷம் பற்றியே நினைத்துக் கொண்டிருக்காதீர். அது சில சமயம், துன்பத்திற்கும் வழி வகுத்து விடும். நம் பாதையில் இயல்பாக வரும் சந்தோஷமே, நிஜ சந்தோஷம் என்பதை உணர்வோம்
* நாம் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது. நம்மை சுற்றி உள்ளவர்களும் சந்தோஷமாய் இருக்க வேண்டும். அதற்காக உழைக்க தயாராகுங்கள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
- ராஜிராதா