
வி.ஆர். ஆராவமுதன், சென்னை: 'டாஸ்மாக்'கை எதிர்க்கும் நீங்கள், லென்ஸ் மாமாவை வைத்து எப்படி சமாளிக்கிறீர்கள்?
அவர், நண்பர் என்றாலும், உடன் பணிபுரிபவர்... அவரது பிரச்னை குறித்து, நிர்வாகம் தான் கவலை கொள்ள வேண்டும்! இது போகட்டும்... உடன் நடிக்கும்,
வி.கே.ராமசாமி, தேங்காய் சீனிவாசன், மற்றும் சந்திரபாபு ஆகியோருக்கு, இது குறித்து, 'அட்வைஸ்' செய்ய, அவர்கள், தங்களது நீண்ட நாளைய மது, 'பர்மிட்'டை அரசிடம் திரும்ப கொடுத்து விட்டனராம்... நான் என்ன எம்.ஜி.ஆரா!
* கி.தமிழ்பாவை, பழங்காநத்தம், மதுரை: அல்வாக்களில் எந்த, 'அல்வா' உங்களுக்கு பிடிக்கும்?
'தமிழர் தலைவர்' என, தன்னைத் தானே கூறிக் கொள்பவரையும், அவர் நடத்தும் பத்திரிகையில் வரும், 'பாக்ஸ்'களை படிக்கும் போது, திருநெல்வேலி, இருட்டு கடை அல்வா சாப்பிடுவது போல இருக்கும்!
பி. பவித்ரா, மம்சாபுரம்: நாட்டில் லஞ்சம் பெருகுவது, அரசியல்வாதிகளாலா, அதிகாரிகளாலா?
முதலாமவருக்கு கொஞ்சம், நஞ்சம் தான் தெரியும்... 'டெக்னிக்கலாக' அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பது, இரண்டாமவர் தான்! இப்படிப்பட்டவர்களை ஒழிக்க முடியுமா என்பது சந்தேகம் தான்!
* எம். சேது மலையாண்டி, பொன்னமராவதி: சிறையிலிருந்து சசிகலா வந்ததும், அனைத்து, அ.தி.மு.க., அமைப்பினரும், அவர் தலைமையில் செயல்படுவர் எனக் கூறுகின்றனரே...
சசிகலாவின், 'சேமிப்பில்' மிச்சம், சொச்சம் ஏதும் தமக்கு கிடைக்குமா என்ற ஆவலில் கூறப்படுபவை இவை! சசிகலா என்றால், கிராமங்களில் ஒருவருக்குமே தெரியாதவர் அவர்!
மா. அமர்ஜித், சேலம்:தமிழக அரசு வேலைகளில், வெளி மாநிலத்தவர் நியமிக்கப்படுவதை எப்படி பார்க்கிறீர்கள்?
நம் நாடு ஒன்றே ஒன்று; மொழிகளில் தான் வேறுபாடு! அரசு நியமனத்தை விடுங்கள்... ஓட்டல்களில் அவர்களுடன் பேசி, வேண்டியதை வாங்குவதில்லையா?
நம்மவர்கள், வட மாநிலங்களுக்கு மாற்றப்பட்டால், கவலை கொள்ளாதீர்... அவர்களுக்கே மொழி சொல்லிக் கொடுப்பதில் முன் நிற்பர், நம்மவர்கள்!
* எஸ். நிக்கில் குமார், ராமேஸ்வரம்:'இடைத்தேர்தல், செலவு - விரயங்களைத் தவிர்க்க, அடுத்த நிலை ஓட்டு வாங்கிய வேட்பாளரை தேர்வு செய்யலாம்...' என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
பல வகைகளில் ஏற்றுக் கொள்ளக் கூடியது தான்; ஆனால், அரசு மனது வைத்து, சட்டத் திருத்தங்களை செய்யுமா? செய்யாதே!