
ஜன., 2ம் தேதி வெளியான, 'அந்துமணி பதில்கள்' புத்தகம் வாங்க, அலுவலகம் வந்திருந்தார், படிப்பாளி நண்பர் ஒருவர். தினமும், நான்கு மணி நேரம் படிப்பதை கடமையாக கொண்டவர்.
அவருடன் ஒரு மணி நேரம் பேசினால்,
10 புத்தகங்கள் படித்த அளவுக்கு விஷயங்களை அறிந்து கொள்ளலாம். அவர், அலுவலகம் வந்தாலே, 'ரம்பம் பார்ட்டி வந்துடுச்சு...' என்று கூறி, வெளியேறி விடுவார், லென்ஸ் மாமா. அவருடன் பேசுவதிலும், அவர் கூறுவதை அறிந்து கொள்வதிலும், எனக்கு ஆர்வம் உண்டு.
இந்த முறையும், பல அரிய விஷயங்களை கூறினார். சமீபத்தில் படித்த புத்தகத்திலிருந்து இரண்டு விஷயங்களை கூறினார். அது:
உலக வரலாற்றில் இடம்பெற்ற, மாவீரன் அலெக்சாண்டர், உலகையே வெல்ல வேண்டும் என்ற, கனவு உலகத்தின் முதல் தன்னம்பிக்கையாளன். அவனது வாழ்க்கை வரலாற்றை புரட்டிக் கொண்டிருந்தேன்.
அலெக்சாண்டர் சிறுவனாக இருந்தபோது, போர் பயிற்சியை கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார், தந்தை பிலிப். ஒவ்வொரு பயிற்சியின்போதும், வெற்றியை மட்டுமே பெற்றுக் கொண்டிருந்த அலெக்சாண்டர், ஒருநாள் தோற்றான்.
'எதற்காக தோற்றாய்...' என்றார், பிலிப்.
'அப்பா... எப்போதும் நானே ஜெயித்து விடுவதால், இதோ இவன் அழுது விடுகிறான். அதனால் தான், அவன் சந்தோஷத்திற்காக, ஒருமுறை தோற்றது போல் நடித்தேன்...' என்றான், அலெக்சாண்டர்.
அவனுக்குள் இருந்த மனிதாபிமானத்தை ரசித்தாலும், 'மகனே... உன் வாழ்க்கையில், எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால், யாருக்காகவும், உன் வெற்றியை மட்டும் விட்டுக் கொடுக்காதே. இந்த உலகம், வெற்றி பெற்றவர்களை மட்டுமே பேசும்...' என்றார்.
இரண்டாவது விஷயம்...
ஐரோப்பிய நாடான, இத்தாலி மக்களின் எழுச்சி தலைவன், கரிபால்டியிடம், 'நாங்கள் போரிட்டால், எங்களுக்கு என்ன கிடைக்க போகிறது. காயமும், மரணமும் தானே?' என்று கேட்டான், ஒரு வீரன்.
'நீங்கள் காயப்படலாம். மரணிக்க நேரலாம். ஆனால், இத்தாலி விடுதலை பெறும். கடைசி வாக்கியத்தை பாருங்கள். இத்தாலி விடுதலை பெறும், எவ்வளவு பொருள் பொதிந்த வாக்கியம்...' என்றார், கரிபால்டி.
துாங்கச் செய்வதற்கானதல்ல புத்தகம். எந்த புத்தகம் நம்மை துாங்க விடாமல் செய்கிறதோ, அதுவே நல்ல புத்தகம்.
இப்படி, நல்ல புத்தகங்களை படிக்க படிக்க, நம்மையும் புரட்டிக் கொண்டே இருக்கும்.
கையிலிருந்த, 'அந்துமணி பதில்கள்' புத்தகத்தை புரட்டி பார்த்து, 'முழுவதும் படித்த பின், கருத்தை சொல்கிறேன்...'
- இப்படி கூறி முடித்தார். பின்னர் -
விரும்பிய புத்தகத்தை விலை கொடுத்து வாங்கி படிப்பவன் தான், வாசகன்; வாங்குபவனிடம் வாங்கி படிப்பவன், வாசகன் அல்ல யாசகன் என்று, ஒரு பொன்மொழியை உதிர்த்தபடி கிளம்பினார், நண்பர்.
'சாவியில் சில நாட்கள்' என்ற புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது; எழுதியவர்,
ஷ்யாமா என்ற பெண் எழுத்தாளர். அவரைப் பற்றிய சிறு குறிப்பு:
* 'சாவி' வார இதழில், பத்திரிகையாளர் பயிற்சி பெற்று, பணியாற்றி பின், முன்னணி பத்திரிகைகள் பலவற்றிலும் பல ஆண்டுகளாக தொடர்ந்து கட்டுரைகள், கதைகள் மற்றும் நேர் காணல்கள் எழுதி வருபவர்
* பொது நிர்வாக இயலில் முனைவர் பட்டம் பெற்றவர்
* இதுவரை இவர் எழுதிய, 35 சிறுகதைகளும், மூன்று குறுநாவல்களும், நான்கு நாவல்களும், மூன்று பொது தலைப்பு புத்தகங்களும், 300க்கும் மேற்பட்ட கட்டுரைகளும் வெளி வந்துள்ளன.
இவரது நுாலுக்கு, முன்னுரை எழுதியிருப்பவர், மிகப்பெரும் எழுத்தாளரும், பத்திரிகையாளருமான, ராணி மைந்தன்.
அவர் எழுதிய முன்னுரையில், நம் வாசகர்கள் என்னிடம் கேட்கும் கேள்விக்கு விடை உள்ளது.
அது, இதோ... படித்துப் பார்த்து தெளிவுறுங்கள்...
சினிமா, அரசியலுக்கு அடுத்து, பலர், கால் பதிக்க எண்ணும் துறையாக, பத்திரிகை துறை இருக்கிறது. படைப்பாளிகள் பலரும், தன் பெயரும் இருக்க வேண்டும் என்று விரும்ப காரணம், அந்த துறை தரும் புகழ். பல துறை பெருமக்களோடு எளிதாக,
'ஹலோ' சொல்லி, கை குலுக்கக் கூடிய வாய்ப்பு.
ஆனால், அந்த வாய்ப்பு அவ்வளவு சுலபமாக வாய்ப்பதில்லை. எழுதும் முயற்சியில் ஈடுபடுபவர்களைக் கேட்டால் தெரியும்.
'பிரசுரமான கதைகளை விட,
திரும்பி வந்த கதைகளே அதிகம்...' என்பர்.
'நுாறு துணுக்குகள் அனுப்பினால், இரண்டு மாதங்கள் கழித்து, ஐந்து பிரசுரமானால் அதிகம்...' என்பர்.
'யார் யாரையோ பேட்டி எடுத்து, எத்தனையோ கட்டுரைகள் அனுப்பியாச்சு. என்ன ஆச்சுன்னே தெரியலை சார்...' என்பர்.
பத்திரிகை உலகில் இவையெல்லாம் நடக்கக் கூடியவையே.
காரணங்கள் அனேகம்.
ஒவ்வொரு பத்திரிகைக்கும் ஒரு கேரக்டர் உண்டு.
அதன் பசிக்கு தீனி போட வேண்டும்.
அந்த தீனியை எப்படி அடையாளம் காண்பது?
அனுபவம் தான் அடையாளம் காட்டும்.
அந்த அனுபவத்தை எப்படி பெறுவது?
சாவி சார் போன்றவர்கள் கிடைத்தால் பெறலாம். என்னைப் போன்ற பலருக்கு, இவர் கிடைத்தார்.
- படித்தீர்களா வாசகர்களே... ஒரே வாசகர் பல்வேறு பெயர்களில் எழுதினாலும், அவர் கையெழுத்தைக் கொண்டு, கண்டு கொள்வேன்.
ஆயிரக்கணக்கான வாசகர்கள் எழுதுகின்றனர்... அவர்களுக்கிடையே உங்களது படைப்புகள் வாரா வாரம் வெளியாக வேண்டும் என்பதில், என்ன நியாயம் இருக்கிறது சொல்லுங்கள்!