
சிலுக்கின் புகழ், கொஞ்சம் குறையத் துவங்கியது. ஆனால், தனக்கு மார்க்கெட் போனதாக கூறப்பட்டதை ரசிக்கவில்லை.
'எனக்கு, வாய்ப்பு குறைஞ்சு போச்சுன்னு எப்படி சொல்ல முடியும்... போன வருஷம், 1983ல், வரிசையா நான் நடிச்ச படங்களாகவே வந்திருக்கலாம். அப்படி பார்க்கறப்ப, இப்போ, நான் நடிச்ச தமிழ் படங்கள் வெளியீடு குறைஞ்சிருக்கலாம்; அவ்வளவு தான். எனக்கு மார்க்கெட் போயிடுச்சுன்னு சொல்றவங்களை பத்தி நான் கவலைப்பட முடியாது...
'சிலுக்கு இல்லாமல் படம் ஓடாதுன்னு நானா சொன்னேன்... யார் யாரோ, அவங்கவங்க இஷ்டப்படி துதி பாடிட்டு இருந்தாங்க... கடந்த வருஷம், தமிழ்ல, எத்தனையோ பெரிய பெரிய நடிகர்கள் நடிச்ச படங்கள், தோல்வி அடைஞ்சிருக்கு... அப்ப, அவங்களுக்கு மார்க்கெட் போயிடுச்சுன்னா அர்த்தம்... அதே மாதிரி தான் என்னோட நிலைமையும்...
'எனக்கு, படங்கள் குறைஞ்சதுக்கு காரணம், நானே குறைச்சுக்கிட்டது தான். அன்னிக்கி, சிலுக்கு இல்லேன்னா படம் ஓடாதுன்னு சொன்னவங்க தான், இன்னிக்கி, சிலுக்கு படம் குறைஞ்சு போச்சுன்னு சொல்றாங்க... இவங்களுக்கு, வேற வேலையே கிடையாது...
'சில தயாரிப்பாளர்கள், வெளியீடு தேதியை முடிவு பண்ணிட்டு, கடைசியிலே என்கிட்ட வருவாங்க... 'ஒரே ஒரு நாளைக்காவது, 'ஒர்க்' பண்ணி, காப்பாத்துங்கம்மா'ன்னு, காலில் விழாத குறையாக கெஞ்சினவங்களுக்கெல்லாம் உதவி பண்ணியிருக்கேன்... அவங்களோட படம் ஓடறதுக்கும், ஓடாததுக்கும் நானா பொறுப்பு...' என, சிலுக்கின் பதிலில் நேர்மை இருந்தது.
இது பற்றி, நடிகை அனுராதாவும், தன் கருத்தை கூறினார்.
'சிலுக்கை வீழ்த்தி விட்டேன் என்பதை, என்னால் ஒப்புக்கொள்ளவே முடியாது. யாரும், யாரையும் வீழ்த்திவிட முடியாது. ஸ்மிதாவை ரசிக்கிற ரசிகர்களுக்கு, என்னிக்கும் அவங்க தான் வேணும்... என்னை ரசிக்கிறவங்களுக்கு, சில, 'மூவ்மென்ட்ஸ்' நான் தான் ஆடணும்...
'அதே நேரம், ஒரே 'டான்சரை' அதிக காலம் யாராலேயும் பார்த்துகிட்டு இருக்க முடியாது. ஒரு, 'வெரைட்டி' தேவைப்படறப்ப, ஆள் மாற்றம் ஏற்படுது... என்னையும், போதும் போதும்ன்னு சொல்ற காலம் வரும்... என் ஆட்டத்தையும் நிறுத்த வேண்டிய நிலைமை வரும்... மாறுதல்ங்கிறது இங்கே சகஜம்...' என்றார்.
ஒரு காலத்தில், எல்லா கலைஞர்களுக்கும், 'ஆல் இந்தியா ரேடியோ, விவிதபாரதி வர்த்தக ஒலிபரப்பு' மீது, தனி மரியாதை இருந்தது. அதன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் நட்சத்திரங்களிடம், வம்பு தும்பாக கேள்விகள் கேட்க மாட்டார்கள். விரும்பியபடி பேசி மகிழலாம். தனியார், எப்.எம்., சேனல்கள் பிறந்திராத காலம். விவிதபாரதிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு.
அன்று, விவிதபாரதியின், 'சிறப்பு தேன் கிண்ணம்' வளரும் கலைஞர்களுக்கு, மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. இரவு, 7:45 - 9:15 மணி வரையில், பிரபலமான இளம் நடிகர், நடிகையர்களின் குரலை கேட்க, குடும்பம் குடும்பமாக, சாப்பிடாமல் கூட காத்துக் கிடந்தனர்.
சிலுக்கு பங்கு கொண்ட, சிறப்பு தேன் கிண்ணம் நிகழ்ச்சி, 1987ல், யுகாதி பண்டிகை அன்று, வானொலியில் ஒலிபரப்பு ஆனது. மூன்று மாதங்களுக்கு முன்பே, சிலுக்கிடம் ஒப்புதல் பெறப்பட்டது.
தன் சிறப்பு தேன் கிண்ணம், சிறப்பாக வரவேண்டும் என்று, மூன்று மாதங்களுக்கும் மேலாக தன்னை தயார் செய்திருந்தார், சிலுக்கு.
ஒன்றரை மணி நேரத்தில் ஒலிபரப்புவதற்காக, 45 சினிமா பாடல்களை தேர்வு செய்திருந்தார்.
தனக்கு முன், சிறப்பு தேன் கிண்ணம் வழங்கிய, காமெடி நடிகர், செந்தில், எப்படியெல்லாம் நிகழ்ச்சியை வழங்கினார் என்று, அந்த, 'ஸ்கிரிப்டை'யும் வாங்கிப் பார்த்தார்.
சிறப்பு தேன் கிண்ணம் தயாரித்த இளைஞரை, மிகவும் மரியாதையாக நடத்தினார். அந்நிகழ்ச்சி குறித்த தன் சந்தேகங்களை, அவர் வீட்டுக்கே போன் போட்டு கேட்டார்.
பாடல்களுக்கு இடையே பேசுவதற்காக, தெலுங்கில், தன் கைப்பட, 15 பக்கங்கள் எழுதி வைத்து, ஒரு விடுமுறை நாளில், இந்த நிகழ்ச்சியின் ஒலிப்பதிவுக்காக, சென்னை, வானொலி நிலையத்துக்கு சென்றார்.
தன் திரையுலக அனுபவங்களை, ஆசைகளை வானொலி நேயர்களிடம் சந்தோஷமாக பகிர்ந்து கொண்டார்.
எஸ்.ஜானகியின் ரசிகை ஒருவர், தன் முதல் பாடலாக, 'சிங்கார வேலனே தேவா'வை ஒலிபரப்ப சொன்னார்.
மூன்றாம் பிறை படத்தில், 'பொன்மேனி உருகுதே' பாடலுக்காக, மிக குறைந்த ஆடைகளுடன், ஊட்டியின் பனி சிதறல்களுக்கிடையே வெறும் காலுடன் ஆடிய கஷ்டத்தை, கூறி, அந்த பாடலை ஒலிபரப்ப சொன்னார்.
'எனக்கு, பாக்யராஜ் படத்துல நடிக்கறதுக்கு ரொம்ப ஆசை. ரொம்ப நாளா எதிர்பார்த்து காத்துகிட்டு இருக்கேன். வாய்ப்பு கிடைச்சா, கண்டிப்பா நடிப்பேன்...' என்று, தன் ஆசையை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சிக்காக, சிலுக்குக்கு, வானொலி வழங்கிய சன்மானம், 150 ரூபாய்.
'எழுதி எழுதி, கிழிச்சு போட்ட பேப்பர்களுக்கே, 150 ரூபாய் ஆகியிருக்கும். ரூபாய்க்காக நான் வரல... விவிதபாரதி எனக்கு பிடிக்கும்; அது ரொம்ப பிரபலம். அதுல நிகழ்ச்சி பண்ணணும்ன்னு தான் எனக்கு ஆசை...
'நான் மத்தவங்க மாதிரியெல்லாம் கிடையாது. வெளியில என்னை பத்தி, சில பேரு, சில மாதிரி சொல்வாங்க... நான் அப்படியெல்லாம் கிடையாது... ஜென்டில் வுமன்...' என்றார்.
தனக்கான ஒலிப்பதிவு முடிந்ததும், விவிதபாரதி, 'உங்கள் விருப்பம்' எப்படி ஒலிபரப்பாகிறது என்பதை நேரில் இருந்து பார்த்து, கேட்டார். மூன்று மணி நேரம், சென்னை, வானொலியில் தன் நேரத்தை செலவிட்டார்.
தன் நிகழ்ச்சியை சிறப்பாக அமைத்த, இளைஞருக்கு போன் செய்து, 'நீங்க ஏன், எனக்கு, சுபா காஞ்சலு சொல்லவேயில்ல...' என்று, குழந்தை மாதிரி கேட்டார், சிலுக்கு.
'சுபா காஞ்சலு' என்றால், 'யுகாதி - தெலுங்கு புத்தாண்டு நல்வாழ்த்து' என்று, பிறகு தான் புரிந்தது, அந்த இளைஞருக்கு.
அந்த இளைஞரிடமிருந்து, 'சுபா காஞ்சலு' பெற்ற பிறகே, போனை வைத்தார், சிலுக்கு.
— தொடரும்.
பா. தீனதயாளன்