
இ. நாகராஜன், சாத்துார்: அருவியில் குளிப்பது, ஆற்றில் குளிப்பது, கடலில் குளிப்பது... இதில், ஆனந்தம் தருவது எது?
மூன்றிலுமே ஆனந்தம் தான்; ஆனால், எனக்கு மிக ஆனந்தம், மூன்றாவதில் தான்! 'விண்ட் சர்பிங்' என்ற, காற்று வழியே, நின்றபடி, அதிலிருக்கும் பாய் மரத்தை இழுத்து, அலைகளை தாண்டி, அங்கே விழுந்து நீச்சலடித்து குளிப்பது, படு ஆனந்தத்தைத் தரும்! முயற்சி செய்து பாருங்களேன்!
முருகு. செல்வகுமார், சென்னை: கட்சி தொடங்கி, 30 ஆண்டுகளாகியும், பா.ம.க.,வால், அரசியலில் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லையே... ஏன்?
மரங்களை வெட்டி, தேசிய நெடுஞ்சாலையில் போட்டு, எல்லாரையும் பதற வைத்தாரே, ஸ்தாபகர் ராமதாஸ்... அதை எல்லாம், மக்கள் மறந்து விடுவரா? அதன் பலன் தான் இதுவெல்லாம்!
என்.ஜே. கனகேஷ்வரி, திருப்பூர்: ஒரு நாளிதழின் பலம் என்ன?
மாதம், 200 ரூபாய் கொடுத்து வாங்கும் வாசகர்கள் தான், தம் முதலாளி என்று, பத்திரிகைகள் நினைப்பதே பலம்! ஆளும் கட்சி, எதிர்க்கட்சி எதற்கும் பயப்படாமல், உண்மைச் செய்திகளை வெளியிடுவதே, மிகுந்த பலம்!
* மெய். முருகப்பா, காரைக்குடி: நம்பிக்கை துரோகம், செய்நன்றி மறத்தல்... இதில் எது ஒருவரை மிகவும் பாதிக்கும்?
இரண்டும் ஒன்று தான்! இரண்டுமே பெரும்பாலும் பணத்தால் நேர்பவை தான்! இரண்டு விஷயங்களிலுமே அதிக கவனம் செலுத்தாதவர்கள் தான், அதிகம் பாதிக்கப்படுகின்றனர்!
* எ. தங்கவேல், மண்ணச்சநல்லுார்: சட்டமும், தண்டனையும் கடுமையாக இருந்தால், குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டல்லவா?
காக்கிச் சட்டைகள், கை நீட்டாமல் இருந்தால், இப்போதுள்ள சட்டமும், தண்டனையும் போதுமானதே!
இது நடக்கும் என நம்புகிறீர்களா? ம்... ஹூம்... அரபு நாட்டு சட்டங்கள் வேண்டும்!
வெ. சென்னப்பன், கீரைப்பட்டி, தருமபுரி: உங்களை பார்த்து எந்த பெண்ணாவது, 'ஐ லவ் யூ' சொன்னது உண்டா?
பிழைத்தனர் பெண்கள்... நல்ல வேளையாக, என் முகம் அப்படி அமைந்து விட்டது!
* அப்துல், திருச்சி: வேலை தேடும் இளைஞர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
நமது இதழில் வெளியாகும் பயணக் கட்டுரைகள் படிக்க சொல்லுங்கள்! ரஷ்யாவில் இருந்து பிரிந்த பல நாடுகளிலும், நம்மவர்கள் ஓட்டல் ஆரம்பித்து, ராஜாவாக இருப்பது தெரிய வரும்!