sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : பிப் 16, 2020

Google News

PUBLISHED ON : பிப் 16, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா-கே

கோவை, மேட்டுப்பாளையத்தில் உள்ள, 'பிளாக் தண்டர்' என்ற பொழுதுபோக்கு பூங்கா, பல ஹோட்டல்கள், தவிர, நர்சிங் காலேஜ், ஹோட்டல் மேனேஜ்மென்ட் மற்றும் 'மேனேஜ்மென்ட் அண்டு சயின்ஸ்' உட்பட பல நிறுவனங்களை, தமிழகம் மட்டுமல்லாமல், கர்நாடகா, டில்லி மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடத்தி வருபவர், டைரக்டர் வின்சென்ட்.

இவர் யார் என்றால், திருச்சி, முன்னாள் எம்.பி., ஆன, அடைக்கலராஜின் மகன்; என் நீண்ட கால நண்பர்.

இவரது மகள், சாந்தல் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, சமீபத்தில், மதுரையில் நடந்தது.

கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டதால், நானும், லென்ஸ் மாமாவும் கிளம்பினோம்.

ஊட்டி செல்லும் போதெல்லாம், மேட்டுப்பாளையத்தில் உள்ள, 'பிளாக் தண்டர்' பூங்காவில், குழந்தைகள் போல் எங்களை மகிழ்ச்சி அடைய வைப்பார், வின்சென்ட்.

மதுரை, ஜி.ஆர்.டி., - நாங்கள் வழக்கமாக தங்கும் ஹோட்டலில், 'ரூம்' கேட்ட போது, 'முழுவதும், 'புக்' ஆகி விட்டது...' என்றனர். அதே போலிருக்கும், 'பாண்டியன்' ஹோட்டலில், 'ரூம்' கிடைத்தது.

மறுநாள் மாலை, 'ரிசப்ஷனு'க்கு கிளம்பும் போது, லென்ஸ் மாமா, 'அங்கிள் ஜானி'யின் அணைப்பில் கிடந்தார்; நான் மட்டும் கிளம்பினேன்.

'ரிசப்ஷன்' ஹாலை அடைந்தேன். இடது பக்க வரிசையில் இருந்து, வலது பக்க வரிசைக்கு அழைத்துச் சென்றனர்.

மணமக்களை வாழ்த்தி விட்டு, இறங்கும் போது, 9:00 மணியாகி விட்டது.

அடுத்த நாள் காலை, 7:55 மணிக்கு, 'இண்டிகோ' விமானத்தில் சென்னை திரும்ப வேண்டும்.

லென்ஸ் மாமா துாங்கிக் கொண்டிருந்தார்.

குளித்து முடித்து, நான் தயாராகி விட்டேன்; அதன்பிறகு தயாரானார், லென்ஸ் மாமா.

சரியான நேரத்திற்கு, விமான நிலையம் சென்றடைந்தோம்!

விமானத்தில் எனக்கும், லென்சுக்கும் அடுத்தடுத்த இருக்கை; பின்பக்கம் சாய்க்க முடியாது; கடைசி இருக்கை. நான், கண்களை மூடிக் கொண்டேன்; லென்ஸ் மாமாவும் உறக்கத்தில் ஆழ்ந்தார்.

திடீரென விழித்த லென்ஸ் மாமா, முன்வரிசையில், ஆண்களுக்கு நடுவில், அவர்களுக்கு தொடர்பில்லாத மூன்று பெண்களுக்கு, 'சீட்' ஒதுக்கி இருந்ததை கண்டார்.

அவரது துாக்கம் பறந்தோடியது. அவர்களையே கவனித்துக் கொண்டிருந்த மாமா, என்னை எழுப்பி, 'ஏண்டா, எனக்கு இந்த வாய்ப்பை வாங்கி தரலை...' என்றார்.

காரணம்:

அந்த மூன்று ஆண்களும், முதல் நாள் மது அருந்தியதைப் போல், மயக்கத்தைக் காட்டி, அப்பெண்களின் தோள் மீது அடிக்கடி தலையைச் சாய்த்தனர்.

ஆனால், பெண்கள் சளைத்தவர்களா... அவர்கள், அத்தலைகளை, வலது கையால் தள்ளி விட்டபடி இருந்தனர்.

இதைக் கண்ட, லென்ஸ் மாமா, 'இவன்களுக்கெல்லாம் விபரமே புரியவில்லை. என்னைப் போன்ற வயதானவன் என்றால், உரிமை கொடுத்திருப்பரே...' என, நொந்து கொண்டார்.

'இவ்வளவு வயதாகியும் இவருக்கு இன்னும், 'ஜொள்' போகவில்லையே...' என, நினைத்துக் கொண்டேன்.

சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தோம்.

'அலுவலகம் செல்ல வேண்டுமே... டீ வாங்கிக் கொடுக்க வேண்டுமே...' என்ற பரபரப்பு என்னுள் தொற்றிக் கொள்ள, அலுவலகம் நோக்கி பாய்ந்தேன்.



மனித வாழ்வில், நம்பிக்கைகள், காலம் காலமாக தொடருகின்றன. காரணம் தேடினால், கண்டுபிடிப்பது கஷ்டம். ஆனால், நம்புவது மட்டும் இன்றும் தொடருகிறது. இப்படி சில நம்பிக்கைகளை தொகுத்து தந்துள்ளார், டாக்டர்  மா.மீனாட்சி சுந்தரம். இவர், பாரதியார் பல்கலை கழகத்தின் தமிழ் துறையில், பல பதவிகளை வகித்தவர்.

அவர் எழுதியுள்ளது:

* அணில், வீட்டிற்குள் வந்தால், அதிர்ஷ்டம்

*செவ்வாய் கிழமை, தலைமுடி வெட்டினால், தரித்திரம். (இதனால் தான், நம் ஊர் சலுான்களில், செவ்வாய் கிழமை விடுமுறை

விடுகின்றனரோ?)

* பயணம் செய்யும்போது, திருவிழாவைக் காணல் நல்லது

* நம் செருப்பையும், ஆடைகளையும், புண்ணிய தலங்களில் தொலைத்தால், பாவங்கள் போகும்

* இடி இடிக்கும்போது, பித்தளை பாத்திரங்களை, வெளியில் வைக்கக் கூடாது

* துண்டை தோள் மீது போட்டு, சாப்பிடக் கூடாது

* இரவு நேரத்தில், பாம்பு என்று சொல்லக் கூடாது; பூச்சி என்று தான் சொல்ல வேண்டும்

* பிறரிடமிருந்து, எள்ளை இலவசமாக பெறுதல் கூடாது

* யானை மீது, குழந்தைகளை ஏற்றி வைத்தால், அவர்களுக்கு ஏற்பட்ட திருஷ்டி கழியும்

* நாய் கடிப்பது போல் கனவு கண்டால், பலிக்கும்

* புத்தகங்களின் இடையே, மயில் இறகை வைத்தால், படிப்பு நன்றாக வரும்

* தந்தையும் - மகனும், ஒரே நாளில் முடிவெட்டிக் கொள்ளக் கூடாது

* கர்ப்பிணி, கணவனையே பார்த்துக் கொண்டிருந்தால், ஆண் குழந்தை பிறக்கும்

* பயணம் மேற்கொள்ளும்போது, நாய், சோம்பல் முறிக்கும் காட்சியை பார்த்தால் நல்லது

* கர்ப்பிணி பெண்கள் விரும்புவதை கொடுக்கவில்லை என்றால், குழந்தைகளுக்கு, காதில் சீழ் வடியும்

*மணப்பெண் சூடிய பூவை, திருமணம் ஆகாத பெண்ணிற்கு சூட்டினால், விரைவில் திருமணம் நடக்கும்

* தாய்ப்பால் கொடுக்கும் பெண், வெளியே சென்று, வீட்டுக்கு திரும்பி வந்ததும், குழந்தைக்கு, பால் கொடுக்க கூடாது

* கோவில் கிணறுகளுக்கு நீர் இறைக்க, கயிறு வாங்கிக் கொடுத்தால், காசநோய் தீரும்

* சுமங்கலி பெண்கள், இரவில், வெறும் வயிற்றுடன் துாங்கக் கூடாது

* பிறந்த குழந்தையை, முதன் முதலில் துாக்கும்போது, அதன் கையில் பணம் கொடுத்து எடுப்பர்

* மழை துாறும்போது, பயணம் புறப்படக் கூடாது

* தற்கொலை செய்து கொள்பவர், பேயாக திரிவர்

* தெய்வம் இருக்கும் இடத்திற்கு, வெறும் கையுடன் செல்லக் கூடாது

* தலையில் சூடும் மலர், நீண்ட நேரம் மனமுடையதாக இருந்தால், வருகிற மாமியார் நல்லவராக இருப்பார்

* காலையில், வீட்டின் பின் கதவுகள் தான் முதலில் திறக்கப்பட வேண்டும்

* கனவில், சந்திரனை கண்டால், காதல் வெற்றியடையும்

* சூரியன் உதயமாவது போல் கனவு கண்டால், உத்தியோக உயர்வு ஏற்படும்

* இடி இடிக்கையில், தலைச்சன் பிள்ளைகள் வெளியே செல்லக் கூடாது

* பிறர் எதிரில், குழந்தைகளுக்கு, உணவு கொடுக்கக் கூடாது

* சமையல் அறையில், தென் கிழக்கு மூலையில் அடுப்பை வைத்தால், வீட்டில் செல்வம் பெருகும்

* வீட்டு வாசலில் கோலமிடுவோர், அக்கோலத்தில் மஞ்சள், குங்குமம் வைத்தால், வீடு வளம்பெறும்

* எரிந்த துணியை வீட்டில் வைத்தால், கஷ்டம் வரும்

* கர்ப்பிணி பெண்கள், கனவில் தண்ணீரை கண்டால், அவர்களுக்கு ஆண் பிள்ளை பிறக்கும்

* கனவில் ஒரு பெண், பாம்பை கண்டால், அவளுடைய காதலன், ஏமாற்ற பார்ப்பான்

*கர்ப்பிணி பெண்கள், பச்சை நிற மரகத கல்லை அணிந்து கொண்டால், பிரசவம் எளிமையாக இருக்கும்

*ஆற்று வெள்ளம், வீட்டு வாசலில் ஓடுவது போல் கனவு கண்டால், செல்வம் வரும்

* உடைத்த தேங்காயில், கண்ணுள்ள மூடியை முதலில் பயன்படுத்த வேண்டும்

* சிரித்து விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தையை கனவில் கண்டால், வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படும்

* உடம்பெல்லாம் அழுக்கு படிந்த குழந்தையை கனவில் கண்டால், எதிர்பாராத வெற்றி தேடி வரும்

* குழந்தையை தொட்டிலில் போட்டு தாலாட்டுவது போல் கனவு கண்டால், குடும்ப வாழ்க்கையில் இன்பம் பெருகும்

* மிளகாய், புளி, உப்பு போன்ற பொருட்களை, ஒருவர், மற்றவர் கையில் கொடுக்க கூடாது; தரையில் வைத்து, அதை, மற்றவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.

- பல்கலையில் பல பதவிகள் வகித்தவர், இப்படி எல்லாமா, 'நம்பிக்கை' குறித்து எழுதுவார்; சரி... நம்புபவர்கள் நம்பிக் கொள்ளட்டும்!






      Dinamalar
      Follow us