
அன்றைய காலை நாளிதழ்களில், சிலுக்கு மரணம் குறித்த செய்திகளே பிரதானமாக இருந்தன.
நிஜத்தில் நடந்தது என்ன என்று யாராலும் கூற இயலவில்லை. சிலுக்கு இறப்பதற்கு முன், தன் கைப்பட தெலுங்கில் எழுதிய கடிதம், அவர் தற்கொலை தான் செய்து கொண்டார் என்பதற்கு ஆதாரமாக கூறப்பட்டது.
சிலுக்கு வாழ்ந்த ஒட்டுமொத்த வாழ்வின் பிரதிபலிப்பாகவே, படுக்கை அறையில், தலையணைக்கு அடியில் இருந்தது, அக்கடிதம்.
செப்., 22, 1996 என்று தேதியிட்ட கடிதத்தில்: அபாக்கியவதி,
கடவுளே... ஏழு வருஷமா என் வயிற்றுக்காக தான், நான் கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். எனக்கு என்று யாருமே இல்லை. நான் நம்பினவங்களெல்லாம் என்னை மோசம் பண்ணிட்டாங்க.
என் பின்னால் இருந்தவங்க எல்லாம், 'செட்டில்' ஆயிட்டாங்க. வாழ்க்கையில் எனக்கும் நிறைய ஏக்கம், எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், என்னை சுற்றி இருக்கிறவங்க, மன நிம்மதி இல்லாமல், நான் செத்துப் போகிற அளவுக்கு பண்ணிட்டாங்க.
நான் எவ்வளவோ சாதிச்சாலும், மன நிம்மதி இல்லாமல் செய்துட்டாங்க. எல்லாருக்குமே நான் நல்லது பண்ணியிருக்கேன். ஆனால், என் வாழ்க்கையை இந்த மாதிரி பண்ணிட்டாங்களே... என்ன நியாயம் இது!
என் ஆசையை எல்லாம் ஒருத்தர் மீது வைத்திருந்தேன். அவர், என்னை மோசம் செய்து விட்டார். கடவுள் என்று ஒருவர் இருந்தால், அவரை பார்த்துக் கொள்வார்.
தினசரி கொடுமை தாங்க முடியவில்லை. ராதாகிருஷ்ணாவுக்கு எது பிடிக்குமோ, அதை மட்டும் தான் செய்யச் சொல்கிறார். ஒரு தடவை, நகை வாங்கினேன். அதை போட அனுமதிக்கவில்லை; கடவுள், என்னை எதுக்காக படைத்தார்?
ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஒருத்தன் எனக்கு வாழ்க்கை தருகிறேன் என்று சொன்னான். அதையும் தடுத்தார், ராதாகிருஷ்ணன். வாழ்க்கையில், நான் எவ்வளவோ பொறுத்துக்கிட்டேன். ஆனால், இப்போது என்னால் முடியவில்லை. இதை எழுதுவதற்கு நான் மிகவும் சிரமப்பட்டேன். அது, எனக்கு தெரியும்.
- இவ்வாறு எழுதி இருந்தது.
அந்த கடிதம், சிலுக்கு எழுதியது தானா என்றும் சந்தேகங்கள் எழுந்தன. சிலுக்கின் கையெழுத்து பெரிது பெரிதாக இருக்கும். ஆனால், தற்கொலை கடிதம், 'போஸ்ட் கார்டு' அளவில், 'பொடி பொடி'யான எழுத்துகளால் எழுதப்பட்டிருந்தன.
அந்த கடிதத்தில், சிலுக்கின் கையெழுத்து காணப்படாதது மர்மத்தை மேலும் அதிகரித்தது. சிலுக்கின் மரணத்தில் எழுந்த சந்தேகங்களை, பத்திரிகைகள் பட்டியலிட்டன.
டாக்டரின் கூற்று வேறாக இருந்தது:
நான், சிலுக்குக்கு துாரத்து உறவு. சிறு வயதிலிருந்தே என்னை அவளுக்கு தெரியும். அவளுக்கு தெரிந்த ஒரே ஆள் நான் என்பதால், என்னை வரவழைத்து, தனக்கு பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொண்டாள்.
நானும், என் குடும்பத்தை விட்டு விட்டு, அவளுடன் தங்கினேன். நானும், அவளும், கணவன் - மனைவியாக இருந்தோம். 'திருமணம் செய்து கொள்வோமே...' என்று கேட்டால், 'திருமணம் செய்து கொண்டால் தான், கணவன் - மனைவியா, இல்லாவிட்டால் இல்லையா...' என்பாள்.
தாலி கட்டி கொண்ட பிறகு, பெண்களை, ஆண்கள் அடிமை போல நடத்துகின்றனர். இது, பெண்களின் உரிமையை பறிக்கும் செயல் என்பது, ஸ்மிதாவின் எண்ணமாக இருந்தது. இதனால், ஸ்மிதாவுக்கு திருமணம் மீது நம்பிக்கை இல்லாமல் போனது.
நானும், அவளை வற்புறுத்தவே இல்லை. என் மீது அவளுக்கு அதிக பாசம். நானும், ஸ்மிதாவும், தாலி கட்டாமலேயே, 15 ஆண்டுகளாக, கணவன் - மனைவியாக வாழ்ந்து வந்தோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.
டாக்டரை பகிரங்கமாக திருமணம் செய்து கொள்ளும் சந்தர்ப்பம், சிலுக்குக்கு வாய்க்கவே இல்லை. ஏற்கனவே ஒருவருக்கு, தாலி கட்டிய மனைவியாக வாழ்ந்து விட்டு, டாக்டரிடமும் புதுசாக தாலி கட்டிக்கொள்ள, சிலுக்கு தயங்கி இருக்கலாம். தாலி இல்லாமல் குழந்தை பேறும், சிலுக்குக்கு கேள்விக்குறியாகவே இருந்தது.
சிலுக்கின் அந்தரங்க வாழ்வை பற்றி, உலகம் எழுப்பிய கேள்விகளுக்கெல்லாம், அவரின் மரணத்துக்கு பின்பே பதில் கிடைத்தது; அதுவும், டாக்டர் மூலமாகவே...
'என்னை விட, ஸ்மிதாவுக்கு, குழந்தைகள் மீது கொள்ளை ஆசை. ஆனால், குழந்தை பெற்றுக் கொண்டால், பட வாய்ப்பு வராது என்பதால், அதை தவிர்த்தோம். அடுத்த ஆண்டு, இருவரும், பகிரங்கமாக அறிவித்து, திருமணம் செய்து, குழந்தை பெற்றுக் கொள்வது என்றும் முடிவு செய்திருந்தோம். அதற்குள், இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை.
'பட வாய்ப்புகள் இல்லாமல், சிலுக்கு அவதிப் பட்டதாகவும், அவர் நடித்து பெற்ற பணமும், சொந்த படங்கள் எடுத்து, அதனால் ஏற்பட்ட கடனை அடைப்பதற்கே போதவில்லை; கடன் தொல்லையால் தான், சிலுக்கு தற்கொலை செய்து கொண்டார் என்று, திரையுலகினர் கருத்து கூறினர்.
'ஆனால், இப்பவும், 500 சவரனுக்கு மேல், வங்கி லாக்கரில் இருக்கு; கணிசமான பணமும் வங்கியில் இருக்கு... எல்லாத்தையும் அவங்களே பாத்துக்குவாங்க... எனக்கு, அதுல சம்பந்தமில்லை...' என்றார், டாக்டர்.
ஐந்து ஆண்டுகளாக, யாரையோ, உயிருக்கு உயிராக காதலித்து வந்ததாகவும், அவர் ஏமாற்றி விட்டதாகவும், சிலுக்கின் கடைசி கடிதம் கூறியது பற்றி, போலீசார் விசாரணை மேற்கொண்டதாக தெரியவில்லை.
'அது, யாருன்னு எனக்கும் தெரியல; அப்படியே இருந்தாலும், என்கிட்ட எப்படி தைரியமா சொல்ல முடியும்... அவ, மனதில் உள்ளது எனக்கு எப்படி தெரியும்?' என்றார், டாக்டர்.
போலீசார் வருவதற்கு முன்பே, டாக்டர், தன்னிச்சையாகவே, சிலுக்கை, ஏன் துாக்கிலிருந்து கீழே இறக்க வேண்டும்... நாடி பிடித்து சோதித்தபோதே, சிலுக்கு உடலில் உயிர் இல்லை என்று, டாக்டருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். அதன்பின், ஆம்புலன்சை வரவழைத்து, விஜயா மருத்துவமனைக்கு, சிலுக்கின் பிணத்தை ஏன் கொண்டு செல்ல வேண்டும்?
இதற்கு, 'ஏதோ கொஞ்ச நஞ்சம் உயிர் இருக்காதா... நெஞ்சை அழுத்தி, மசாஜ் செய்து காப்பாற்றி விடலாமென்று தான், உடலை கீழே இறக்கினோம்...' என்றார், டாக்டர்.
குழந்தை, உத்ராவின் அழு குரல் கேட்டு தான் மாடிக்கு ஓடியதாக, டாக்டரின் மகன் ராமு சொன்னார். ஆனால், அன்று காலை, 8:00 மணிக்கெல்லாம், உத்ராவை குளிக்க வைத்து, 'டிரஸ்' செய்து, பள்ளிக்கு அனுப்பியதாக, பத்திரிகை பேட்டியில் கூறினார், 'டச் - அப்' பையன், ராமகிருஷ்ணா.
இப்படி பல கேள்விகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன.
பிரபல நடிகை, துாக்கு மாட்டிக் கொண்ட சூழலில், கைரேகை நிபுணர்களை கூட, தங்களுடன் போலீசார் அழைத்துச் செல்லவில்லை.
— தொடரும்
பா. தீனதயாளன்