
பி. சாரதி, திருவண்ணாமலை: கருணாநிதியின் மகனாக இருந்தும், மேடை பேச்சுகளில் ஏன் தடுமாறுகிறார் ஸ்டாலின்?
பேச்சை எழுதிக் கொடுத்தவரின், 'பேப்பர்'களை சரியாக மனப்பாடம் செய்யாமல் வந்திருப்பார்; அது தான் காரணம்!
* பிரதீபா ஈஸ்வரன், தேவூர், சேலம்: சகுனித்தனத்திற்கு இன்னொரு பெயர் தானே ராஜதந்திரம்?
இரண்டாவது, நேர்மையான முறையில் பெரிய வெற்றிகளைப் பெறுவது! முதலாவது, கூடவே இருந்து காலை வாருவது! சகுனிகளிடம் மிக மிக ஜாக்கிரதையாக இருந்து கொள்ள வேண்டும்; அவர்கள், சகுனி என்பதை முன்னதாகவே கண்டுபிடிப்பது, அறிவாளிகள்!
கடல் நாகராஜன், கடலுார்: 'எஸ்' வங்கி, இப்போது, 'நோ' வங்கி ஆகிவிட்டதன் நிலைக்கு காரணம் என்ன?
அதன் தலைவர், ராணா கபூர் தான் முக்கிய காரணம்! சோனியா மகள் வரைந்த ஒரு படத்தை, 2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கினார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! இவருடன் சேர்ந்த தொழிலதிபர்களும், மிக முக்கிய காரணம்!
ஜி. கலைவாணி, மறைமலைநகர், செங்கல்பட்டு: ஒருவனுக்கு பணத்தின் அருமை எப்போது தெரியும்?
அது, கையில் இல்லாதபோது!
மனைவியிடம், குடிக்க பணம் கேட்டு, அவள், 'இல்லை' எனச் சொல்லும்போது, அவளை கொலை செய்தான் என்கிற செய்திகளைத் தான், அடிக்கடி பார்க்கிறோமே!
* அப்துல், திருச்சி: விட்ட இடத்தை காங்கிரஸ் எப்போது மீண்டும் பிடிக்கும்?
பிடித்த இடங்களே கை நழுவிக் கொண்டிருக்கின்றனவே... ஒருவேளை, நேரு குடும்பத்திலிருந்து தலைமை மாறுமானால் நடக்கலாம் அல்லது காந்தியின் வேண்டுதலான, 'சுதந்திரத்திற்கு பின் காங்கிரசை கலைத்து விட வேண்டும்...' என்ற வேண்டுகோளை நிறைவேற்ற பாடுபடுகின்றனரோ என்னவோ!
எஸ். பிரேமாவதி, சென்னை: கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் தலைவர்கள், எந்த துணிச்சலுடன், மீண்டும் ஓட்டு கேட்டு வருகின்றனர்?
தேச தந்தையை நம்பித் தான்; அவர் தான் இவர்கள் கைகளில் உள்ளாரே... நம்மவர்கள், அந்த தாத்தாவின் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனரே... இந்த தைரியம் தான் அந்த அரசியல்வாதிகளுக்கு!
சி. கோபால், குனியமுத்துார், கோவை: அரசியல்வாதிகளுக்கு துணை போகும், அரசு அதிகாரிகள் எப்போது திருந்துவர்?
அரசு அதிகாரிகள் தான், 'ஓட்டை'களை ஆளுவோருக்கு சொல்லிக் கொடுப்பது. இதுபோன்ற அதிகாரிகளை, கம்பி எண்ண வைத்தால், ஓரளவு அரசியல்வாதிகள் திருந்தலாம்!