sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஏப் 19, 2020

Google News

PUBLISHED ON : ஏப் 19, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஆண்டிற்கு, இரண்டு மாதமாவது, இதுபோல் (சம்பளத்தோடு) ஊரடங்கு போட மாட்டார்களா... 'டிராபிக்'கே இல்லாமல் சுலபமாக, அலுவலகம் போய் சேர்ந்துவிட முடிகிறதே...' என்று, எண்ணத் தோன்ற, காக்கி கலர் இரண்டு, என்னை வழி மறித்து, 'எங்கே போகிறேன்...' எனக் கேட்டது.

நான், இடது பக்க சட்டைப் பைக்குள் கை விட்டு, அடையாள அட்டையை எடுக்கும் முன், இரண்டு, 'சார்ஜென்ட்'கள் ஓடி வந்து, 'சல்யூட்' அடித்தனர். சாதாரண போலீஸ்காரர்கள் ஓடிப்போயினர்.

'என்ன சார்... இந்த பிரச்னையிலுமா வேலைக்கு போகிறீர்கள்...' எனக் கேட்டனர்.

'ஐயாக்களே... நீங்கள், எவ்வளவு துடிப்புடன் வேலை செய்கிறீர்கள்... நான் எல்லாம் என்ன?' எனக் கேட்கவும், 'நீங்கள், கிளம்புங்கள்...' என, என்னை அனுப்பி வைத்தனர்.

கொஞ்ச துாரம் தான் சென்றிருப்பேன்... ஒரு கிழவி, இடது கட்டை விரலை காட்டி, 'லிப்ட்' கேட்டார்.

ஒரு இளம்பெண் கூட, 'லிப்ட்' கேட்டதில்லையே என, நான் இதுவரை ஏங்கியது இல்லை.

பாட்டி அருகே நிறுத்தி, விபரம் கேட்டேன். அருகே உள்ள இடத்தை தான் கூறினார்.

பின்னால் கேரியரில் அமர்ந்திருந்த, பாட்டியிடம் பேச்சு கொடுத்தேன்...

'என்னப்பா செய்யறது... வயிற்றுப் பாடு... மூணு வேளையும் சோறு குடுத்து விடுறாங்கோ... ஒருநாள் வேலைக்கு போகலேன்னாலும், சம்பளத்தை பிடிச்சுடுறாங்க...' என, நொந்து கொண்டார்,

நான் முன்னால் நினைத்தது, தப்பாக இருக்கிறதே என, நொந்து கொண்டேன்.

ஆபீஸ் வேலை எல்லாம் முடிந்து, மாலை திரும்பும்போது, அதே இடத்தில், அந்த இரண்டு, 'சார்ஜென்டு'களும், 'சல்யூட்' அடித்தனர்.

அவர்களிடம் பேச்சு கொடுத்தேன்...

'என்ன இது... இவ்வளவு பெரிய ஊரடங்கு இருக்கும்போதும், சாரி சாரியாக, 'பைக்'குகளை விட்டுக் கொண்டிருக்கிறீர்களே...' எனக் கேட்டேன்.

'கம்பைத் துாக்கினால் தான் சரி வருவர்... ஆனால், அதைச் செய்ய நாங்கள் முற்பட்டால், முதல் பக்கத்தில் படத்துடன் செய்தி வெளியிட்டு விடுகிறீர்களே... அது, எங்கள் கைகள் கட்டிப் போட்டு விடுகிறது...' என்றனர்.

'அதற்காக, நீங்கள் அவர்களிடம் கை கூப்புவதும், 'அட்வைஸ்' செய்வதும் சரிதானா?' எனக் கேட்டேன்.

'நீங்களே ஒரு வழி சொல்லுங்கையா...' என்றனர்.

'திரு திரு'வென விழித்து, அவர்களிடம் விடைபெற்றேன்.

போகும்போது, 'சாட்டை ஒன்று தான் இதற்கு வழி' என்று தோன்றியது.

நான் நினைத்தது சரியா, தவறா சொல்லுங்கள் வாசகர்களே!

மார்ச் 15, 2020, வாரமலர் இதழில், பா.கே.ப., பகுதியில், அமெரிக்காவில் வசிக்கும், அந்துமணி வாசகி ஒருவர், நான் சொல்லிக் கொடுத்த, மோர்க்களி செய்த அனுபவத்தை எழுதியிருந்தது, நினைவிருக்கிறது அல்லவா!

முன்பு, அவர் அமெரிக்கா செல்லும் போது, செட்டி நாடு சமையல் குறிப்பு புத்தகம் ஒன்றை வாங்கி கொடுத்திருந்தேன். 'பல ஆண்டுகள் கடந்தும், அப்புத்தகத்தை இன்று வரை பத்திரமாக வைத்துள்ளேன். இப்போது, இங்கும் ஊரடங்கு அமலில் இருப்பதால், அதிலிருந்து தினம் ஒரு அயிட்டமாக செய்து, அசத்தி வருகிறேன்...' என, கடந்த வாரம் எனக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார்.

மேலும், 'அதில், செட்டிநாட்டு ஸ்பெஷல் அயிட்டங்களான, கந்தரப்பம், வெள்ளை பணியாரம், இனிப்பு சீயம், கும்மாயம் மற்றும் மசாலா பணியாரம் என்று, தினம் ஒன்று செய்து வருகிறேன். இவைகளில், மசாலா பணியாரம் மற்றும் கும்மாயம், எனக்கும், கணவர் - குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்திருக்கிறது...' என்று, குறிப்பிட்டிருந்தார்.

குறுஞ்செய்தி வந்த பின், அவருடன் போனில் பேசி, அதன் செய்முறை விளக்கத்தை கேட்டேன்.

அவர் கூறியது:

மசாலா பணியாரம் செய்ய தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 2 ஆழாக்கு, புழுங்கல் அரிசி - அரை ஆழாக்கு, உளுத்தம் பருப்பு - ஒரு ஆழாக்கு, சாம்பார் வெங்காயம் - ஒரு கப், பச்சை மிளகாய் - 4, தேங்காய் துருவல் - ஒரு கப், உப்பு, எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து, மிக்சியில் நைசாக அரைக்கவும். அதன் கூடவே, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து அரைக்கவும். வடை மாவை விட, சற்று இளக்கமாக இருக்க வேண்டும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். இத்துடன், தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு கிளறி, இறக்கி, ஆற விடவும்.

இந்த கலவையை, அரைத்து வைத்துள்ள அரிசி மாவுடன் கலந்து, பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடேறியதும் சிறு சிறு உருண்டைகளாக கிள்ளி போட்டு, நன்கு வெந்ததும் எடுக்கவும்.

கும்மாயம் செய்ய தேவையான பொருட்கள்: உளுத்தம்பருப்பு - 2 ஆழாக்கு, பச்சரிசி - 1 ஆழாக்கு, பாசிப் பருப்பு - 4 ஆழாக்கு.

இவைகளை, தனித்தனியாக பொன்னிறமாக வறுத்து, மிக்சியில், தண்ணீர் விடாமல் மாவாக அரைத்துக் கொள்ளவும். மாவு திப்பி திப்பியாக இருக்க கூடாது என்பதால், சல்லடையில் சலித்துக் கொள்ளவும்.

இந்த மாவில், ஒரு ஆழாக்கு மட்டும் எடுத்துக் கொள்ளவும். மீதமுள்ள மாவை, காற்று புகாத பாட்டிலில் எடுத்து வைத்து, தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

வெல்லம் அல்லது கருப்பட்டி - கால் கிலோ, நெய் - அரை கப், எண்ணெய் - கால் கப்.

அடி கனமான பாத்திரத்தில், எண்ணெய் மற்றும் நெய்யில் பாதியளவு ஊற்றி, சூடாக்கி, அதில் மாவை சிறிது சிறிதாக கொட்டி வறுக்கவும்.

ஒரு பாத்திரத்தில், மூன்று டம்ளர் தண்ணீர் ஊற்றி, அதில் துாளாக்கிய கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து கொதிக்க விடவும்; நன்கு கரைந்ததும் வடிகட்டி, ஏற்கனவே வறுத்து வைத்துள்ள மாவில் ஊற்றி, அடுப்பில் வைத்து, கட்டி வராமல் கிளறவும்.

அல்வா பதத்திற்கு வந்ததும், கையை தண்ணீரில் நனைத்து, மாவை தொட்டுப் பார்த்தால், ஒட்டாமல் வர வேண்டும். அது தான் சரியான பதம். அப்போது, அடுப்பை நிறுத்தி, மீதமுள்ள நெய்யை ஊற்றி கிளறவும்.

தட்டில் பரிமாறிய பின்னும், ஒரு ஸ்பூன் நெய்யை விட்டு சூடாக சாப்பிட, சுவை அள்ளும்.

- என்று கூறி முடித்திருந்தார்.

'சமையலில், 'எக்ஸ்பர்ட்' ஆகிவிட்டாய்...' என்று பதில் அனுப்பினேன்.

நாக்கில் நீர் ஊறுகிறதா வாசகர்களே... அரிசி, உளுந்து, பாசிப்பருப்பு, வெல்லம் எல்லாம் வீட்டில், 'ஸ்டாக்' வைத்திருக்கிறீர்கள் அல்லவா! உடனே செய்ய ஆரம்பியுங்கள். சுவைத்து பார்த்து சொல்லுங்கள்.






      Dinamalar
      Follow us