
மனம்போல் மாங்கல்யம் படம் துவங்கும் போதே, ஜெமினி - சாவித்திரி காதலும் துவங்கி விட்டது. 1953ல் படம் வெளியாகும் முன்பே, ரகசிய திருமணமும் நடந்து விட்டது.
தங்கள் திருமணத்தை இருவரும், ரகசியமாகவே வைத்திருந்தனர். முக்கிய காரணம், அப்போது, சாவித்திரியின் வயது, 16 தான். பெரியப்பா சவுத்ரியின் பராமரிப்பில் இருந்தார், அவர்.
எனவே, இருவரும் படப்பிடிப்புகளில் சந்தித்தும், தொலைபேசியில் பேசியும், காதல் வானில் சிறகு விரித்தனர். அதேசமயம், ஜெமினி கணேசனின் குழந்தையை சுமந்து கொண்டிருந்தார், புஷ்பவல்லி. அப்போது, ஜெமினியின் முதல் திருமணம் மட்டுமே தெரிந்திருந்தது, சாவித்திரிக்கு.
சாவித்திரியின் காதல் விவகாரம், வளர்ப்பு தந்தைக்கு தெரிந்ததும், 'நம்ம வந்தது நடிக்க, அந்த வேலையை பாரு... ஏற்கனவே கல்யாணமான ஒருத்தரை காதலிக்கிறது சரியில்லை...' என்று எச்சரித்தார். காதல் மயக்கத்தில் இருந்தார், சாவித்திரி; ஜெமினியும் தான்.
அப்போது, இந்த காதல் ஜோடியின் படங்களும், காதல் காட்சிகளும் பெரும் வரவேற்பு பெற்றது. அவர்கள் சேர்ந்து நடித்த படங்கள், வெற்றி மேல் வெற்றி கண்டதால், படங்கள் குவிந்தன.
விஜயா- வாஹினி ஸ்டுடியோ அதிபர்கள், நாகிரெட்டி, சக்கரபாணி; இயக்குனர்கள் பி.புல்லையா மற்றும் வேதாந்தம் ராகவையா ஆகியோருடன் ஆலோசனை செய்து, 1956ல், சாவித்திரியை முறைப்படி மணம் முடித்தார், ஜெமினி கணேசன்.
ஜெமினியும், சாவித்ரியும், தென் மாநிலத்தின் மிகப்பெரிய நட்சத்திர அந்தஸ்து பெற்ற தம்பதிகளாக கொடி கட்டி பறந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கிடையே இருந்த காதலும், பந்தமும், நடிப்பு தொழிலுக்கு மிகவும் நன்றாக உதவியது. இருவரும் ஜோடியாக நடிக்கும் படங்களுக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இன்றைக்கும், இளைஞர்கள் ரசிக்கக் கூடிய படமாக, கல்யாண பரிசு இருக்கிறது. காரணம், ஸ்ரீதரின் வித்தியாசமான அணுகுமுறை. அதுவரை செந்தமிழ் வசனங்களை தான், தமிழ் சினிமாவில் பேசிக் கொண்டிருந்தனர். அப்படியில்லாமல், நடுத்தர குடும்பங்களில் இயல்பாக இடம்பெறும் உரையாடல்களை முதன் முதலில் எழுதியவர், ஸ்ரீதர்.
வசீகரமான இளைஞர் ஒருவர் தான், கல்யாண பரிசு படத்தில், பாஸ்கர் கதாபாத்திரமாக இருக்க முடியும் என்று முடிவெடுத்தனர்.
அன்றைய சூழலில், அதற்கு பொருத்தமாகவும், காதல் தியாக கதை என்பதால், அதற்கான வாய்ப்பும் ஜெமினிக்கு தான் இருந்தது.
'வீனஸ் பிக்சர்'சுக்கு வந்து கதை கேட்டார், ஜெமினி. கதை, மிகவும் பிடித்து போனது.
கல்யாண பரிசு படத்தில், பாஸ்கர் வேடம், ஜெமினி கணேசன் அதுவரையில் ஏற்றிராதது; ஜெமினிக்கு சவால் விட்ட வேடம் அது. அதுவரையில், ஜெமினி காட்டாத நடிப்பை காட்ட, அந்த கதாபாத்திரம் வழி வகுத்தது.
கல்யாண பரிசு படத்தின் வெற்றி தான், தமிழ் சினிமாவில், ஜெமினி கணேசனுக்கு நிரந்தர இடத்தை தக்க வைத்துக் கொடுத்தது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து வெளிவந்த ஜெமினி கணேசன் படங்கள், தோல்வியை தழுவின. அந்த சரிவை சரிபடுத்தி, வெற்றியை தேடி தந்தது, களத்துார் கண்ணம்மா படம். இதில், சாவித்திரி தான் ஜோடி.
நோ படீஸ் சைல்டு என்ற ஆங்கில படம் தான், ஜாவர் சீதாராமனின் எழுத்தில், பட்டுவும் கிட்டுவும் ஆனது. அதை, களத்துார் கண்ணம்மா படமாக, ஏவி.எம்., குமாரர்கள் தயாரித்தபோது, சின்ன அண்ணாமலையும், அதே கதையை, கடவுளின் குழந்தை என்று பெயரிட்டனர்.
கடவுளின் குழந்தை வெளியாகும் முன்பே, களத்துார் கண்ணம்மா படம் வந்தால் தான் வெற்றி பெறும் என்று, ஏவி.எம்., குமாரர்கள் விரும்பினர்.
எட்டு காட்சிகளை, மீண்டும் புதிதாக எடுக்க சொன்னார், ஏவி.எம்., 'நம் படம் நல்லா வரணும், அது தான் முக்கியம். நமக்கே திருப்தியில்லாம படத்தை வெளியே அனுப்பக் கூடாது...' என்று, அறிவுரை கூறினார். அவர் விருப்பம் போல் நடந்தது.
'கடவுளின் குழந்தை படத்தில் இருந்த விறுவிறுப்பு, களத்துார் கண்ணம்மா படத்தில் இல்லை...' என்றது, குமுதம் இதழ் விமர்சன குழு.
'விமர்சனம் பற்றி கவலைப்படாதே; கலெக் ஷனை பார்...' என்றார், ஏவி.எம்.,
சென்னையை தவிர மற்ற நகரங்களில், 100 நாட்கள் ஓடி, சாதனை படைத்தது, களத்துார் கண்ணம்மா.
ஜெமினி கணேசனின், கல்யாண பரிசு பட வசூலை, 'பி அண்டு சி' ஏரியாக்களில், களத்துார் கண்ணம்மா படம் முறியடித்தது.
ஜெமினி ஸ்டுடியோவில், கணேசனாக வேலை பார்த்தபோது, சின்ன சின்ன வேடங்களை மட்டுமே கொடுத்த, எஸ்.எஸ்.வாசன், அவரை, கதாநாயகனாக வைத்து, முழு நீள திரைப்படம் எடுக்க முடிவு செய்து அழைத்தார்.
வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தை பற்றி சொன்னவுடன், ஜெமினி கணேசனுக்கு பரம சந்தோஷம். ஜெமினி ஸ்டுடியோவில் கதாநாயகனாக நடிப்பது, ஒரு சந்தோஷம்; ஒரே நேரத்தில் தமிழிலும், இந்தியிலும் படமாக்கப்பட்டது, மற்றொரு சந்தோஷம்.
எப்போதும் போல், காதல் காட்சிகள் மட்டுமல்லாமல், வீர தீர சண்டை காட்சிகளும் இடம்பெற்ற படம், வஞ்சிக்கோட்டை வாலிபன். ஜெமினி கணேசன் ஜோடியாக, வைஜெயந்தி மாலா, பத்மினி இருவரும் நடித்தனர்.
கடந்த, 1958ல், 'மகத்தான பொழுது போக்கு சித்திரம்' என்ற அறிவிப்போடு, தமிழில், வஞ்சிக்கோட்டை வாலிபன் என்ற பெயரிலும், ஹிந்தியில், ராஜ்திலக் என்ற பெயரிலும் வெளியானது. அப்போது, வைஜெயந்தி மாலா, ஹிந்தி படங்களில், 'ஓஹோ'வென்று ஜொலித்த நேரம்.
ராஜா, ராணி கற்பனை கதையாக, மிக பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டது. கத்தி சண்டை, கண்கவர் நடனங்கள் என்று, படம் ஏக அமர்க்களம் பண்ணியது.
— தொடரும்.
சபீதா ஜோசப்