
* கே. சஞ்சீவி பாரதி, ஈரோடு: முழு மது விலக்குக்கு, இது சரியான தருணம் என, நினைக்கிறேன்; சாத்தியமாகுமா?
வீட்டில் அரிசி சமைக்கும், குக்கரிலேயே சாராயம் காய்ச்சி குடிக்கின்றனர்; முழு மதுவிலக்கு சாத்தியப்படுமா?
லெ. நா. சிவகுமார், சென்னை: 'கொரோனா' ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருப்பது, முதலாளிகளா, தொழிலாளிகளா?
இருவருமே தான்! இதில், அதிக பாதிப்பு தொழிலாளிகள் தான்! வியாபாரம் இல்லாததால், சம்பளமே போட முடியவில்லை முதலாளிகளால்; சிலருக்கு, 50 சதவீத சம்பளமே கிடைக்கிறது!
* ஆர். அனன்யா, பொள்ளாச்சி: 'மோடி அரசு, ஏழைகளை புறக்கணிக்கிறது'ன்னு சும்மா புலம்பிக்கிட்டு இருக்கிறாரே, ப.சிதம்பரம்...
உங்கள் கேள்வியிலேயே பதிலும் இருக்கிறதே... ஊழல் குற்றச்சாட்டில், 105 நாள் ஜெயிலில் இருந்தவர், பேச்சு, பேட்டி, அறிக்கை எல்லாம் படித்து, நேரத்தை வீணாக்காதீர்கள் அனன்யா!
வி. பார்த்தசாரதி, சென்னை: அந்த காலத்தில், பொதிகை, 'நியூஸ்!' இப்ப எல்லா, 'டிவி' சானல்களிலும், 24 மணி நேரமும், 'நியூஸ்!' எது, நல்லா இருக்கு?
'கொரோனா'விற்கு பிறகு, பொதிகை சானல், பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி விட்டதாம். நடுநிலையான செய்திகள் என்பதால், இந்த மாற்றம் என்கின்றனர்!
எஸ். மங்கலம், கடலுார்: அஞ்சலகம் தொடர் விடுமுறை. இதனால், வாசகர்கள் தொடர்பில்லாமல் இருப்பது பற்றி...
ஏன் தொடர்பில்லாமல்... இ - மெயில் தான் இருக்கிறதே... இதோ, நீங்கள் கூட, அதன் மூலம் தான் கேள்வி கேட்டிருக்கிறீர்கள். இந்த வார பதில்கள் எல்லாம், இ - மெயிலில் வந்த கேள்விகளை வைத்துத் தான்!
* ஆர். கல்யாணராமன், சென்னை: நாம் இப்போது கடைபிடிக்கும் பல நல்லொழுக்கங்கள், வாழ்நாள் முழுவதும் தொடர வேண்டும் என்பது, நம் அனைவரின் ஆதங்கம். இது நடக்க வாய்ப்பு உள்ளதா?
குறைந்தபட்சம், 50 சதவீதம் வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது. நம் முன்னோர் கற்றுக்கொடுத்தவைகளை, 'கொரோனா' மீண்டும் சொல்லிக் கொடுத்திருக்கிறதே!
பொ. பாலாஜி கணேஷ், சிதம்பரம்: வீட்டிலேயே இருப்பது, உங்களுக்கு சலிப்பாக இல்லையா?
யார் சொன்னது, வீட்டிலேயே இருக்கிறேன் என்று... அலுவலகம் வந்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் உள்ள ஊழியர்களுக்கு, நேரத்திற்கு, டீ, 'சப்ளை' செய்கிறாரா நாயர் என, கவனிக்கும் பொறுப்பு, எனக்கு உள்ளது அல்லவா? அதனால், சரியான நேரத்திற்கு அலுவலகம் வந்து விடுகிறேன்!