
பா - கே
'மணி... ஊரடங்கு உத்தரவு காரணமாக, நம் அலுவலகத்துக்கு வர வேண்டிய தபால்கள் எதுவும் வரலை... ஆனாலும், வாசகர்கள், 'இ - மெயில்' மூலம், வாரமலர் இதழில் வெளியான போட்டிகளுக்கான விடைகள், அர்ச்சனை கடிதங்கள், தமாஷ், இ.உ.இ., கவிதை மற்றும் சிறுகதை என, ஏராளமாக அனுப்பி, திக்குமுக்காட வைத்து விட்டனர்.
'இதையெல்லாம், 'பிரின்ட்' எடுக்கணும்... 'பிரின்டர்' பக்கத்தில் நில்... வரும் கடிதங்களை, அந்தந்த பிரிவுக்கு உள்ளதை தனித்தனியாக பிரித்து தர்றியா...' என்று வேண்டுகோள் விடுத்தார், உதவி ஆசிரியை ஒருவர்.
நாலாவது மாடியில் உள்ள கேன்டீனிலிருந்து டீ, காபி வந்து விடுவதால், டீ வாங்குவது மற்றும் தபால் அலுவலகம் போகும் வேலையோ இல்லாததால், ஆர்வத்துடன், அந்த வேலையை ஏற்றுக் கொண்டேன்.
எடுக்க, எடுக்க குறையாத அட்சய பாத்திரம் போல், வாசகர்களின், 'இ - மெயில்' கடிதங்கள் வந்து குவிந்தபடி இருந்தன.
'பத்து கடிதங்களை பிரின்ட் கொடுப்பதற்குள், 40 கடிதங்கள் புதிதாக வந்து விடுகிறது மணி... ரொம்ப, 'டயர்டா' இருக்கு, டீ மாஸ்டர் சேட்டனிடம் இன்னொரு டீ கொண்டு வர சொல்லேன்...' என்றார், உதவி ஆசிரியை.
வாசகர்கள், நவீன தொழில்நுட்பத்தில், 'கில்லி'யாக இருப்பதை மனதிற்குள் பாராட்டியபடி, கருமமே கண்ணாக இருந்தேன்.
கடிதங்களை, பிரிவு வாரியாக பிரித்து வைத்த போது, சில கடிதங்கள் 'ரிபீட்' ஆவது போல் தோன்றவே, நிதானமாக ஒவ்வொரு கடிதத்திலும், அனுப்பியவரின் பெயரையும், தேதியையும் பார்த்தேன். ஒரே வாசகர், ஒரே, 'சப்ஜெக்ட்' கடிதத்தை பல முறை அனுப்பியிருப்பது தெரிந்தது. அதாவது, கு.போட்டிக்கான விடையை அனுப்பிய வாசகர், அடுத்தடுத்து அதே மெயிலை, திரும்ப திரும்ப அனுப்பி வைத்துள்ளார்.
தமாஷ், கவிதை, இ.உ.இ., என்று ஒவ்வொரு பிரிவுக்குரிய கடிதங்களை ஆராய்ந்த போதும், ஒரே படைப்பையே மீண்டும், மீண்டும் பலர் அனுப்பியிருப்பது தெரிந்தது.
உதவி ஆசிரியையிடம் சுட்டிக் காட்டினேன். 'அட... ஆமாம், 'பிரின்ட்' கொடுக்கும் போது, இதையெல்லாம் உன்னிப்பாக கவனிக்க தவறியுள்ளேன். சபாஷ் மணி!' என்றார்.
'எதற்காக, ஒரு மெயிலை திரும்ப, திரும்ப அனுப்ப வேண்டும். சரியான, 'இ - மெயில்' முகவரியை தான் ஒவ்வொரு வாரமலர் இதழின், 31ம் பக்கத்தில் கொடுத்திருக்கோமே... அதை பயன்படுத்தி அனுப்பினால், நிச்சயம் நமக்கு சேர்த்து விடுமே...' என்றேன்.
'இப்படித்தான் மணி, தொடர்ந்து ஒரே கடிதத்தை பலமுறை சிலர் அனுப்பி விடுகின்றனர். இன்னும் சிலரோ, கு.போட்டி கட்டத்தை பூர்த்தி செய்தும், 8 வித்தியாசங்கள் போட்டி பக்கத்திலே விடைகள் சுழித்து, 'ஸ்கேன்' செய்தோ, மொபைலில் போட்டோ எடுத்தோ அனுப்புகின்றனர்.
இதை, 'டவுன் - லோடு' செய்து பிரின்ட் எடுப்பதற்கு, நேரமும், பிரின்டர் டோனரும் (மை) அதிகமாக செலவாகிறது. இன்னும் சிலர், கையால் எழுதி, 'போட்டோ' எடுத்து, அனுப்பி விடுகின்றனர். இன்னும் சிலர், விடைகளை ஆங்கிலத்தில், 'டைப்' செய்து அனுப்புகின்றனர். ஒருமுறை அனுப்பினால், சேருமோ சேராதோ என்று நினைத்து விடுகின்றனர் போலும். அதுமட்டுமல்லாமல், ஒரே நேரத்தில், 700, 800 எண்ணிக்கையில் பிரின்ட் எடுக்கும் போது, பிரின்டர் பழுதாகி விடுமோ என்று பயமாக இருக்கிறது...' என்றார், உதவி ஆசிரியை.
வாசகர்கள் புத்திசாலிகள், இனி, புரிந்து நடந்து கொள்வர் என்று நம்பிக்கை அளித்தேன், நான்.
ப
அந்துமணி அவர்களுக்கு, தங்கள் வெகுநாளைய வாசகன், நீலகிரியிலிருந்து, ராஜ்குமார் எழுதிக் கொண்ட மடல் இது:
தங்களுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுத வேண்டும் என்ற என் ஆவல். இன்று, நிறைவேற்ற முனைந்துள்ளேன்.
எங்கு திரும்பினாலும், 'கொரோனா வைரஸ்' என்று ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும், ஏதாவது ஒரு வியாதி மனித இனத்தை பயமுறுத்திக் கொண்டே வந்துள்ளது.
கடந்த, 1820ல் மலேரியா நோய் வந்தபோது, பிரஞ்சு விஞ்ஞானிகளால், 'கொய்னா' என்ற மருந்து தயாரிக்கப்பட்டு, நோயின் தாக்கம் குறைக்கப்பட்டது.
ஸ்காட்லாந்து நாட்டில், ஒரு விவசாயியின் மகனாக பிறந்த, மெக்கவார் என்பவரை, 1848ல், உதகமண்டலத்தில், அன்றைய பிரிட்டீஷ் அரசு கண்காணிப்பாளராக பணி அமர்த்தியது.
மூலிகை வளமிக்க நீலகிரியை தேர்ந்தெடுத்த பிரிட்டீஷ் இந்திய அரசு, முதன் முதலாக, சிங்கோனா துறையை, உதகமண்டலம் பூங்காவில் உருவாக்கியது. அந்த பூங்கா தான், தற்போது, அரசு தாவரவியல் பூங்காவாக உள்ளது.
வரலாற்று புகழ்பெற்ற இந்த சிங்கோனா துறை, கொய்னா மருந்து மாத்திரம் அல்ல, பலவித மூலிகைகள், வாசனை திரவியங்கள் என, கண்டுபிடித்து அசத்தியது.
சிங்கோனா துறை, வனத்துறை ஆகியவற்றுக்கு தனி செயலர், அமைச்சர்கள் இருந்தனர். எம்.ஜி.ஆர்., முதலமைச்சராக இருந்தபோது, தமிழக மக்களுக்கு, இலவசமாக பல்பொடி செய்ய இத்துறைக்கு அனுமதி அளித்தார். நேர்த்தியான மூலிகை பல்பொடி தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டது. 'ஆக்சிமம் கேம்பரா' என்கிற துளசி செடியிலிருந்து, சூடம் தயாரிக்கப்பட்டு, பழநி, திருப்பதி கோவில்களுக்கு விற்கப்பட்டது. அந்த சூடத்தை கொளுத்தினால், புகையே இல்லாத பிரகாசமான ஒளி கிடைத்தது.
சின்பிரஸ் என்ற தரை கழுவும் திரவம், சிட்ரிடோரா என்கிற இலையிலிருந்து தயாரிக்கப்பட்டு, எவ்வித கிருமியும் அண்டாதபடி பாதுகாத்தது. சிங்கோனா துறையினரால் தயாரிக்கப்பட்ட, யூகலிப்டஸ் எண்ணெய், சூட எண்ணெய் பிரசித்தமானது; பாட்டிலை திறந்து வைத்தால் ஆவியாகிவிடும் அளவுக்கு வீரியம் மிக்கது.
நான் கல்லுாரியில் படிக்கும்போது, என் தந்தை, சூட தைலம் வாங்கி வரச்சொல்வார். வாங்கி வந்தவுடன், ஆசையோடு கை, கால்களில் சூடு பறக்க தேய்ப்பார்;
வலி பறந்து விடும்.
நறுமண தைலங்களான, ரோஸ்மேரி தைலம், சிட்ரிடோரா தைலம், லெமன் கிராஸ் தைலம், ஜெரோனிய தைலங்கள், வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அதிக விலைக்கு விற்கப்பட்டன.
இந்த அருமையான துறை நலிவடைந்தது; ஏன் நலிவடைந்தது என்பது புரியாத புதிர். பின்னர், தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தோடு இது இணைக்கப்பட்டது.
சிங்கோனா துறையில் பணியாற்றிய ஊழியர்கள் நடுவட்டம், சேரங்கோடு, வால்பாறை பகுதிகளில் தேயிலை செடிகளை நட்டு சாதனை புரிந்தனர். அவர்களது அயரா உழைப்பு பிரமிக்க தக்கதாக இருந்தது. தொழிலாளர்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை இப்போதும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.
சேரங்கோடு பகுதியில், 144 எக்டேர் பரப்பளவு பகுதி நிலம், நன்கு வளர்ந்து, அதிக மகசூல் தந்து கொண்டிருந்த, சரகத்தில் பணியாற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.
சிங்கோனா காலத்தில், மெக்கவார் சிங்கோனா டிவிஷன் என்ற பெயரில் இருந்தது. அங்குள்ள குடோனில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளில், சிங்கோனா பட்டை துகள்களையும், கட்டி கட்டியாக சூடம் தயாரிக்க காரணமாக இருந்த துளசி செடியையும் பார்த்து பரவசம் அடைந்தேன். 'சிங்கோனா மரங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக உள்ளது. இதை வெட்டி விடாதீர்கள்...' என்று, அன்பு வேண்டுகோள் விடுத்தேன்.
என்னோடு பணிபுரிந்த சங்கரதேவனும், தீவிரமாக செயல்பட்டார். கடந்த, 2009ல் ஓய்வுபெற்ற நான், பழைய நினைவுகளால் நனைந்து கொண்டுள்ளேன்.
தொடர்புக்கு: 99433 50656
- இப்படி எழுதியுள்ளார்.