/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நூற்றாண்டு நாயகன் - ஜெமினி கணேசன் (9)
/
நூற்றாண்டு நாயகன் - ஜெமினி கணேசன் (9)
PUBLISHED ON : ஏப் 26, 2020

'தோன்றிப் புகழுடன் தோன்றுக அஃதிலார் தோன்றிற் தோன்றாமை நன்று, என்பது குறள்.
'புகழுடன் தோன்றுவது இயலாதது. அப்பனோ, ஆத்தாளோ புகழோடிருக்கும் போது, பிள்ளை பிறப்பது பிள்ளைக்கு புகழல்ல, அதிர்ஷ்டம். அவ்வளவே... புகழும், பணமும், தானே சம்பாதிக்க வேண்டியவை.
'கூடியவரை பெரிய மனிதனாக, தன் மனச்சாட்சியையொட்டி வாழ்க்கைப் பாதையில் வெற்றி பெற்றவர்கள், ஆண்டவனால் ஆசீர்வாதிக்கப்பட்டவர்கள்...'
கடந்த, 1970ல், பத்மஸ்ரீ விருது பெற்ற தருணத்தில், ஜெமினி கணேசன் எழுதிய கட்டுரையின் முதல் வரிகள் இவை.
ஆம்... ராமசாமி கணேசன் எனப்படும் ஜெமினி, ஆசீர்வாதிக்கப்பட்டவர் தான்.
யார் பையன் படப்பிடிப்பில், முதலில், ஜெமினியை பார்த்து ஒதுங்கிய, கலைவாணர் என்.எஸ்.கே., மூன்றாவது நாளில் வந்து, 'தம்பீ... நீ படிச்ச பிள்ளை... எப்படி பழகுவியோன்னு நினைச்சேன், ரொம்ப சகஜமா பழகுற... நல்லா நடிக்கிற, முன்னுக்கு வரணும்...' என்று, பாராட்டி வாழ்த்தினார். அன்று முதல், அவருடன் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் அளவுக்கு நட்பு வலு பெற்றது.
ஒருநாள், கலைவாணருடன் சிரித்து பேசிக்கொண்டிருக்கும் போது, ஒருவர் வேகமாக வந்து, அவருடைய காதில் ஏதோ சொன்னார். அதைக் கேட்டதும், 'போச்சு, போச்சு எல்லாம் போச்சு...' என்று சொல்லி, அழ ஆரம்பித்து விட்டார், என்.எஸ்.கே.,
சிரிக்க வைத்தே பார்த்த அவரை, அன்று தான், அழும் கோலத்தில் பார்த்தனர், பலர்.
'நம் ராஜரத்தினம் போயிட்டானே, நாதஸ்வரம் அனாதையாயிடுச்சே...'
என்று அவர் கதறியபோது தான், நாதஸ்வர மேதையான, ராஜரத்தினம் காலமானது, தெரிந்தது.
உடனே, படப்பிடிப்பை ரத்து செய்து, தன் காரிலேயே அவரையும், மதுரம்மாவையும் அடையாறில் உள்ள, ராஜரத்தினம் வீட்டுக்கு அழைத்து போனார், ஜெமினி. அங்கே, குலுங்கி, குலுங்கி அழுதார், கலைவாணர்.
'நீ இல்லாமே நான் எப்படி இங்கே தனியாக இருப்பேன்...' என்று புலம்பினார்.
அன்று புலம்பியது போலவே, அடுத்த சில மாதங்களில், கலை உலகை விட்டு, மேலுலகம் சென்று விட்டார், கலைவாணர்.
'ஒரு மேதையின் அடையாளத்தை, என்னோடு பழகிய நட்பிலே அழுந்த பதித்து போய் விட்டார், கலைவாணர்...' என்று, அந்த நிகழ்ச்சியை குறிப்பிடுகிறார், ஜெமினி கணேசன்.
ஜெமினி கணேசன் நடித்த வெற்றிப் படங்களில், பெரும்பாலானவை, ஸ்டுடியோ அதிபர்களால் தயாரிக்கப்பட்டவையே. மிகச்சிறந்த இயக்குனர்களின் புகழ்பெற்ற படங்களிலெல்லாம், ஜெமினி கணேசன் தவறாமல் இடம்பெற்றார். அப்படியொரு படம், கைராசி. கதாநாயகி, சரோஜா தேவி.
சிவாஜி கணேசன் நடித்த, பெற்ற மனம் மற்றும் பாவை விளக்கு; எம்.ஜி.ஆர்., நடித்த, மன்னாதி மன்னன் ஆகியவை பெரும் எதிர்பார்ப்பில், 1960ல், தீபாவளியன்று வெளிவந்த படங்கள். ஆனால், அவற்றை தாண்டி, மகத்தான வெற்றி பெற்றது, கைராசி படம்.
சித்ராலயா என்ற புதிய பேனரை, தன்னுடைய சகாக்களுடன் சேர்த்து ஆரம்பித்தார், ஸ்ரீதர். சித்ராலயா தயாரித்த முதல் படம், தேன் நிலவு. முழுக்க முழுக்க அவுட்டோரில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் படம் அது.
கைராசி வெற்றிக்கு பிறகு, ஜெமினி கணேசனை வைத்து, கே.சங்கர் இயக்கிய படம், பாத காணிக்கை. ஜெமினி கணேசனுக்கு, சாவித்திரி, விஜயகுமாரி என, இரண்டு ஜோடிகள், இந்த படத்தில். ஜெமினிக்கு நடிப்பதற்கு நிறையவே வாய்ப்பு இருந்தது. பாடல்கள் எல்லாம், 'சூப்பர் ஹிட்!' அப்படியிருந்தும், இலங்கையில் மட்டும், பாத காணிக்கை படம், 100 நாட்கள் ஓடியது.
முதல், 'இன்னிங்சில்' படுதோல்வி அடைந்து, 'செகண்ட் இன்னிங்சில்' வெற்றி பெற்ற படம், ஆடிப்பெருக்கு; இயக்குனர் கே.சங்கர்.
பாத காணிக்கை படம் வெளியான சில வாரங்களில், ஆடிப்பெருக்கு வெளியானது. ஜெமினிக்கு ஜோடி, சரோஜாதேவி.
'தனிமையிலே இனிமை காண முடியுமா...' போன்ற, 'சூப்பர் ஹிட்' பாடல்கள் இருந்தும், ஆடிப்பெருக்கு படம், முதல் முறை சரியாக ஓடவில்லை. பாடல்களின் வெற்றியால், பல ஆண்டுகளுக்கு பின், ஆடிப்பெருக்கு படம் மீண்டும் வெளியானபோது, புதிய படங்களின் வசூலை துாக்கி சாப்பிட்டது.
புதிய படங்களுக்கு, வானொலியில், 10 - 15 நிமிடங்கள் விளம்பரம் செய்வது போல், ஆடிப்பெருக்கு படத்துக்கும் விளம்பரம் தொடர்ந்து செய்யப்பட்டது.
ஜெமினிக்கு, மிகப்பெரிய இமேஜையும், நட்சத்திர அந்தஸ்த்தையும் சம்பாதித்து தந்த படம், கற்பகம். 1963, தீபாவளி அன்று வெளியாகி, வசூலில் சக்கை போடு போட்டது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் தயாரிப்பில், கே.ஆர்.விஜயா அறிமுகமானார்.
பெரும்பாலும், ஜெமினி படங்கள், பெண்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து தயாரிக்கப்பட்டன. அதனால், ஜெமினியுடன் நடிக்கும் கதாநாயகியரே அதிகம் புகழ்பெற்றனர்.
கற்பகம் படத்தில், முதல் பாதியில், கே.ஆர்.விஜயாவும், மறுபாதியில், சாவித்திரியும் கதாநாயகியராக நடித்திருந்தனர். இருப்பினும், படம் முழுக்க மாப்பிள்ளை சுந்தரமாக வந்து, கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டினார், ஜெமினி கணேசன்.
விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையில், முதல் முறையாக, ஒரு படத்தின் எல்லா பாடல்களையும் எழுதும் வாய்ப்பு, கவிஞர், வாலிக்கு கிடைத்தது. படத்தின் எல்லா பாடல்களையும், சுசீலா பாடினார். பாடல்களில், ஆண் குரலே ஒலிக்காத முதல் தமிழ் படம், கற்பகம்.
கற்பகம் படத்தின், 'பிரிவியூ'வை பார்த்தார், ரங்காராவ். ஓடிச்சென்று, ஜெமினி கணேசனை கட்டி அணைத்து, 'இந்த வருஷம், சிறந்த நடிகருக்கான விருது உனக்கு கிடைக்காவிட்டால், நடிப்பதையே நிறுத்தி விடவேண்டும். படத்தில், உன் நடிப்பு அத்தனை அருமை...' என, மனம் திறந்து பாராட்டினார்.
அந்த ஆண்டின், சிறந்த நடிகராக, ஜெமினி கணேசனை கவுரவித்தது, 'திரையுலக விசிறிகள் சங்கம்!' தமிழ் சினிமாவின், சமூக படங்களில், கற்பகம் ஒரு மைல் கல்லாக அமைந்தது. கற்பகம் பட வசூலில், கற்பகம் என்ற பெயரில், ஒரு புதிய சினிமா ஸ்டுடியோவை உருவாக்கினார், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்
— தொடரும்
சபீதா ஜோசப்