
உழைத்து வாழணும்!
எங்கள் ஊர் கடைத் தெருவில், அனாதரவான ஒரு இளம்பெண், துணியை விரித்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தாள். ஆனால், வாயை திறந்து பிச்சை கேட்க மாட்டாள்.
வருவோரும், போவோரும் தம்மால் முடிந்த தர்மம் செய்தனர்.
ஒருநாள், நடுத்தர வயதுடைய வாலிபர் ஒருவர், எடை போடும் இயந்திரத்தை அவள் முன் வைத்துச் சென்றார். அதையே தன் மூலதனமாக கொண்டாள், அப்பெண்.தன்னுடைய எடையை பரிசோதித்து செல்வோர், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் தருவர். அதை வைத்து, அவள் ஜீவனம் செய்ய துவங்கினாள்.
பிச்சை எடுப்பது அநாகரிகம். உழைத்து வாழ வேண்டும் என்பதை, அந்த இளைஞர் வழி காட்ட, அதை, அவள் தன் வாழ்வாதாரமாக பிடித்துக் கொண்டாள்.
இப்படிப்பட்ட நல்லவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
வேத. புருஷோத்தமன், ஆதிச்சபுரம், திருவாரூர் மாவட்டம்.
தேவை கட்டுப்பாடு!
'செகண்ட் ஹேண்ட் பைக்' ஒன்று வாங்கி பயன்படுத்திக் கொண்டிருக்கும், நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன், நான். வெளியூரிலிருந்து சென்னைக்கு பிழைக்க வந்துள்ளேன்.
புதிதாக பைக் ஓட்டுவதால், எப்போதும் சற்று மெதுவாகவே செல்வது உண்டு. அதிலும், நெருக்கடியான சாலையில், மிக மெதுவாய், ஓரமாய் வாகனத்தை செலுத்துவது வழக்கம்.
சில நாட்களுக்கு முன், இடது ஓரமாக, குறைந்த வேகத்தில் வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த கார், தொடர்ந்து, 'ஹாரன்' அடித்தபடி வந்து கொண்டிருந்தது. ஒதுங்கி வழி விட தெரியாததால், சற்று துாரம் பயணித்து, அந்த காருக்கு வழி விட்டேன்.
என் வாகனத்திற்கு முன், தன் காரை நிறுத்தி, அதிலிருந்து இறங்கிய நபர், 'கொடி கட்டிய காருக்கு, ஒதுங்கி, வழி விடாமல் போவாயா, என்ன திமிர் உனக்கு... கட்சிக்காரன் என்றால் ஒரு மரியாதை கிடையாதா...' என்றபடி, என்னை நோக்கி கையை ஓங்கினார்.
சுற்றியிருந்தவர்கள், இதை வேடிக்கை பார்த்தனரே தவிர, எவரும் தட்டிக்கேட்க வரவில்லை.
'சாரி சார்... கவனிக்கவில்லை...' என்று கெஞ்சி, ஒருவழியாய் அவரிடமிருந்து தப்பினேன்.
கொடி கட்டிய காரில் வரும் கட்சிக்காரர் என்றால், அவருக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது?
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், அமைச்சர்கள் உள்ளிட்டோர், காரில் சுழல் விளக்கு பொருத்திக் கொள்ள தடை விதித்துள்ளது, அரசு. அதேபோல், காரில் கட்சிக் கொடி கட்டுவதற்கும், கட்டுப்பாடு கொண்டு வரலாமே... வெட்டி பந்தா செய்யும் அரசியல்வாதிகளின் அலம்பல், ஓரளவு குறையும் அல்லவா!
வி.ஆர். குஞ்சிதபாதம், சென்னை.
சுபாஷுக்கு, பெரிய சபாஷ்!
அண்மையில், தஞ்சையில் உள்ள என் சொந்த கிராமத்திற்கு சென்றிருந்தபோது, இளம் பிராயத்து நண்பன், சுபாஷை சந்தித்தேன். 35 ஆண்டுகளுக்கு பிறகு சென்றிருந்த எனக்கு, பெரும் வியப்பு கலந்த அதிர்ச்சி.
பண்ணையார் குடும்பத்து வாரிசு, அவன். நான்காம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாமல், படிப்பை நிறுத்தியிருந்தவன், 'ஸ்டைல்' ஆக, தவறின்றி ஆங்கிலம் பேசுவதை கேட்டு, நான் மலைத்து விட்டேன்.
'இது, எப்படி சாத்தியம்...' என்று கேட்டேன், நண்பனிடம்.
'பள்ளி படிப்பே ஏறாத எனக்குள் இருந்த தாழ்வு மனப்பான்மையை விரட்டி, என் பிள்ளைகளை நன்கு படிக்க வைத்தேன். இன்று, டாக்டர், பொறியாளர்களாக உள்ளனர். மேலும், படிக்க வசதியில்லாத கல்லுாரி மாணவர்கள் சிலருடைய முழு படிப்பு செலவையும் ஏற்றேன்; நானும் படிக்க ஆரம்பித்தேன். அவர்களிடமிருந்து ஆங்கிலமும் கற்றுக் கொண்டேன்.
'சிறு வயதில் ஏறாத படிப்பு, என் வைராக்கியத்தாலும், அதீத கவனத்தாலும் மனதில் பதிந்தது. இந்த ஆண்டு, 'பிரைவேட்' ஆக, பட்டத் தேர்வும் எழுதப் போறேன். 'பாஸ்' ஆயிடுவோமுல்ல...' என்று, தன்னம்பிக்கையுடன் மீசையை முறுக்கினான்.
'கல்வியில் சாதிக்க, வயது ஒரு தடையல்ல...' என்பது உண்மைதானே!
வெ. ராதாகிருஷ்ணன், சென்னை.