
தங்க.குஞ்சிதபாதம், சிதம்பரம்: வாரிசு அரசியல் இருக்கிறது; வாரிசு சினிமாவும் உண்டு! எழுத்துலகில் வாரிசு எழுத்தாளர் எவரும் உண்டா?
ஏன் இல்லாமல்... 'கல்கண்டு' வார இதழின் ஆசிரியராய் இருந்த தமிழ்வாணனின் மூத்த மகன், லேனா தமிழ்வாணன், இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறாரே!
எழுத்துலகில் வருமானம் அதிகம் கிடையாது என்பதால், அரசியல், சினிமா போல, இதில் வாரிசுகள் அதிகம் தோன்றவில்லை!
* ஜி. விஜயகுமார், நீலாம்பூர், கோவை: 'ராஜிவ் கொலை வழக்கில் தொடர்புடைய ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும்...' என, தி.மு.க., சொல்கிறதே!
இதே போன்ற ஒரு சம்பவம் அவர்கள் குடும்பத்தில் நடந்திருந்தால், இப்படி சொல்வரா என, முதலில் யோசித்துப் பாருங்கள்!
* என். குணசீலன், செஞ்சி: நான் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவன். நாங்கள் ஏன் அதிக கஷ்டத்தை சந்திக்கிறோம்?
நடுத்தர குடும்பத்தினரால் பிச்சை எடுக்க முடியாது; பார்த்தவர்களை எல்லாம், பணக்காரர்களைப் போல் சுரண்ட முடியாது! எனவே தான் கஷ்டம்!
மனோகர், கோவை: அமெரிக்காவின் புதிய அதிபர், ஜோசப் பைடன், இந்தியாவுக்கு இணக்கமாக இருப்பாரா?
அவரது பேச்சுகள், இந்தியாவுடன் இணக்கமாக இருப்பார் என்பதையே காட்டுகிறது. இதுபோக, துணை அதிபர், இந்தியா வம்சாவளியினர் தானே! நல்லதே நடக்கும் என எதிர்பார்ப்போம்!
ஆர். பாலாஜி, திருச்சி: 'நட்சத்திரம்' என்கின்றனரே சினிமா நடிகைகளை... இது ஏன்?
வானத்து நட்சத்திரங்களை கிட்டத்தில் இருந்து பார்க்க முடியாதது போல், சினிமா நடிகையரையும் நாம் அருகில் நெருங்கி பார்க்க முடியாது அல்லவா... அதனால் தான் அப்படிச் சொல்கின்றனர்!
* ந. வளர்மதி, மதுரை: கையெழுத்திற்கும், தலையெழுத்திற்கும் சம்பந்தம் உள்ளதா?
அழகிய முத்து முத்தான கையெழுத்தில், 'அக்கவுன்ட் புக்' எழுதுபவர், 'கிளார்க்' ஆகவே இருக்கிறார். ஒரே நேரத்தில், 10 - 15, 'செக்'குகளில், மாற்றி மாற்றி கிறுக்கி கையெழுத்து போடுபவர்கள், முதலாளிகளாக உள்ளனர். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!
ஆ. காமாட்சி, சிதம்பரம்: யாரையாவது வெறுக்கும் குணம் உண்டா உங்களிடம்?
நேரம் ஏது? அப்படி நேரம் கிடைத்தால், இரண்டு வாரத்திற்கு, பா.கே.ப., - கேள்வி பதில் எழுதி முடித்து விடுவேனே!