
திருச்சி, சோமரசம்பேட்டை பகுதியில் லேசான சலசலப்பு. ஆங்காங்கே சிறு கூட்டம். 'லாக் டவுண்' அமலில் இருப்பதால், போலீஸ் ரோந்து வரக்கூடும் என, தள்ளி தள்ளி நின்றிருந்தனர்.
நன்மதிப்பும், மரியாதையும் பெற்றிருந்த இளங்கோ சார் வீட்டு முன், சிலர் சோகமாக கூடியிருந்தனர். 10ம் வகுப்பு ஆசிரியர் இளங்கோ என்றால், அந்த வட்டாரத்தில் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
சுமார், 60 வயது கடந்த, இளங்கோ சாரின் மரணம், அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. அதிகம் கூட்டம் சேர்ந்து விடக் கூடாதென, 'போஸ்டர்' கூட அடிக்கவில்லை. மொபைல் போன் மூலம் செய்திகள் மெல்ல பரவின.
சில நாட்களுக்கு முன், தன் ஒரே மகனான சந்திரனை அழைத்தார், இளங்கோ.
'சொல்லுங்கப்பா...'
'ஒண்ணுமில்ல, சந்திரா... எனக்கு உடம்புக்கு ரொம்ப முடியல, எப்ப வேணாலும் எதுவும் நடக்கலாம்...'
'அப்பா...'
'நான் இந்த உலகத்தை விட்டு போறதுக்கு முன், எனக்கு சில வேலைகளும், சின்ன சின்ன ஆசைகளும் இருக்குப்பா. அது நிறைவேற, உன்னோட உதவி எனக்கு வேணும். நீ கொஞ்சம், 'ப்ரீ'யா இருக்கியாப்பா. எதுவும் முக்கியமான வேலை இருக்குதா...'
'உங்களை விட, எனக்கு எதுப்பா முக்கியமான வேலை...' என்று, அப்பா அருகே கண்ணீருடன் அமர்ந்தான், சந்திரன்.
மூக்குக் கண்ணாடியை அணிந்து, மெதுவாக எழுந்து, சந்திரன் கையை பிடித்தவாறு, பீரோ அருகில் சென்றார். ஒரு நோட்டை எடுத்து, அதில் ஒவ்வொரு பக்கமாக திருப்பி, ஏதோ எண்ணியவாறே உதடுக்குள் முணுமுணுத்தார். பின்பு, நோட்டை மூடி, சந்திரன் கைத்தாங்கலுடன் கட்டிலில் அமர்ந்தார்.
அரிய பொக்கிஷ நுால்கள் கொண்ட மினி நுாலகமும், சாக்பீஸ் துண்டுகளுமாய் அப்பாவின் அறை முழுவதும் ஆசிரிய நறுமணம் கமழ்ந்தது.
'கொஞ்சம் தண்ணி கொடுப்பா...'
கண்ணாடியை கழற்றி, சந்திரன் கொடுத்த தண்ணீரை குடித்து அமைதியாக இருந்தார். பதற்றமாகாத, கோபப்படாத நிதானம் தான், அப்பாவின் தனித்துவம். மெலிந்த தேகம் கொண்ட அப்பாவின் இரண்டு தோள் பட்டைகளும் இறங்கியிருந்தன. நெஞ்சு ஏறி இறங்கி, மூச்சு வாங்க சிரமப்பட்டுக் கொண்டிருந்தது.
மனைவி மரகதம் இறந்த ஒரே ஆண்டில், இளங்கோ சாரின் உறுதி, குலைந்து விட்டது. நரைத்த முடிகள், அவர் அனுபவத்தை உணர்த்தியது. அம்மா இல்லாமல் அப்பா சிரமப்படுவார் என, மனைவி சுமதியை, தலைப் பிரசவத்திற்காக அவள் அம்மா வீட்டில் விட்டு விட்டு, அப்பாவுக்கு உதவியாக இருந்தான், சந்திரன்.
கையை ஆறுதலாக பற்றியவாறே, 'சொல்லுங்கப்பா...' என்றான்.
'வீடியோ எடுக்கிறவரை கூப்பிட்டு வந்து, நான் பேசுறத, 'ரெகார்ட்' செய்யணும்ப்பா... நம் மொபைல் போன்ல எடுத்தா, ஒலி துல்லியமா இருக்காதோன்னு தோணுது. ரொம்ப முக்கியமான செய்தி என்பதால், கொஞ்சம் செலவானாலும் பரவாயில்லப்பா...' என்றார்.
'சரிப்பா, பண்ணிடலாம்... சரியான காரணம் இல்லாம நீங்க எதையும் பண்ண மாட்டீங்கன்னு, எனக்கு தெரியும்ப்பா, வேற...'
'ரொம்ப சந்தோஷம். நான் பேசி, 'ரெக்கார்டிங்' ஆன வீடியோ, என் இறுதி காரியம் முடிஞ்ச பிறகு தான் வெளியிடணும்...'
'அப்பா... அதை ஏன் திரும்ப திரும்ப சொல்றீங்க. ஒண்ணும் ஆகாது. நீங்க நல்லாயிருப்பீங்க...'
சந்திரன் மனம் பிசைந்தது. அவனையும் அறியாமல் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது.
'அழாதேப்பா, எல்லாரும் ஒருநாள் போய் தான் ஆகணும். நான் இறந்த பின், என் இரண்டு கண்ணையும் தானம் செய்யணும். அதுக்கு, கண் வங்கியில் எழுதிக் கொடுத்துட்டேன்.
'தாமதப்படுத்தாம தகவலை அவங்களுக்கு நீ தெரியப்படுத்தினா போதும். கண் இல்லாத இரண்டு பேருக்கு, ஒவ்வொரு கண்ணை வெச்சுடுவாங்கன்னு அவங்க சொன்னாங்க... ஆபரேஷன் நேரத்துல நீ இருந்து, அதை உறுதி செஞ்சுக்க...'
'சரிப்பா...'
'நாளைக்கு வீடியோ எடுக்க ஏற்பாடு பண்ணுப்பா...'
தம் சக்திக்கு உட்பட்டு, பணிகள் ஓரளவு முழுமை பெற்ற மன நிறைவுடன் இளங்கோ சார், உயிர் பிரிந்தது. சிறிய மருத்துவ குழுவினர் வந்து, ஆபரேஷன் செய்து, கண்களை எடுத்துச் சென்றனர்.
பிரதிபலன் எதிர்பாரா சேவை செய்த ஆத்மாவுக்கு, பெருந்திரளாக திரண்டு பிரியாவிடை கொடுக்க வேண்டிய ஒரு ஜீவனுக்கு, 'கொரோனா' காரணமாக, விரல் விட்டு எண்ணக்கூடிய சிலருடன், பரிதாபமாக முடிந்தது, இறுதி ஊர்வலம்.
மேற்கொண்டு அப்பாவின் இறுதி காரியங்களை முழுமையாக முடித்து, 'எடிட்டிங்' தேவைப்படாத அந்த வீடியோவை, தன் முகநுாலில் பதிவேற்றினான், சந்திரன். 'லைட்டிங்' உதவியால், வீடியோ பளிச்சென்றும், 'காலர் மைக்' மூலம் துல்லியமான ஒலியுடன் மிக நேர்த்தியாக இருந்தது.
'பணம் வேண்டாம் சார்...' என்று, வீடியோ பதிவு செய்தவரும், சந்திரனும் கண்ணீர் மல்க, இளங்கோவின் கருத்துக்களை பதிவு செய்திருந்த, அந்த வீடியோ ஓட ஆரம்பித்தது...
'பரபரப்பான வாழ்க்கையில், ஒரு ஆசிரியருக்காக, சில நிமிடங்கள் ஒதுக்கி, பொறுமையா கேளுங்க. சில முக்கியமான செய்திகளை உங்களுக்கு நான் சொல்ல ஆசைப்படுகிறேன். என் பெயர், இளங்கோ. 23 ஆண்டுகளாக, திருச்சி, அரசு உயர்நிலை பள்ளியில், அறிவியல் ஆசிரியரா இருந்திருக்கேன்.
'ஒரு பள்ளி ஆசிரியராக ஆரம்பத்துல இயல்பா இருந்த நான், இந்த சமூகத்துல ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தணும்ன்னு, முடிவு செஞ்சேன். ஒவ்வொரு தனி மனிதனின் மாற்றமும், முன்னேற்றமும் தான், நாட்டின் வளர்ச்சின்னு நம்புறவன், நான். அதே நேரம், விளக்கு சுடர் விட்டு எரிய, ஒரு துாண்டுகோலும் முக்கியம்.
'அதனால், மாணவ பிள்ளைகளை, மனப்பாடம் செய்ய வைத்தோமா, மதிப்பெண் எடுக்க வைத்தோமா என்று மட்டும் இல்லாம, அவர்கள் மூலமா ஏதாவது நல்லது செய்யணும்ன்னு, முடிவு செஞ்சேன்...'
நெற்றியில் வழிந்த வியர்வையை துண்டால் துடைத்தவாறே, இளங்கோ சார் தொடர்ந்தார்...
'அதாவது, நான் என்ன செஞ்சேன்னா, என் வகுப்புல இருக்குற, 40 மாணவர்களை பற்றி முழுசா தெரிஞ்சுக்குவேன். ஒரு ஆண்டு அவகாசம் இருப்பதால், இது சாத்தியமானது. பள்ளி முழு ஆண்டு தேர்வு முடியப் போற சமயத்துல, அஞ்சு அஞ்சு பேரா தேர்ந்தெடுத்து, அவர்களை மட்டும் தனியா இருக்கச் சொல்வேன்.
'அவர்களிடம், 'படிச்சு முடிச்சுட்டு என்ன ஆகப்போறேன்'னு, சம்பிரதாய கேள்விகளை தாண்டி, அவங்ககிட்ட ஆளுக்கு ஒரு பொறுப்பை ஒப்படைச்சேன். இதுல ஜாதி, மதம், ஏழை, பணக்காரன் என்கிற பாகுபாடெல்லாம் நான் பார்க்கல.
'உதாரணத்துக்கு, அருண் என்ற மாணவனிடம், 'தம்பி அருண், நீ ரொம்ப சின்ன மாணவன் இல்ல. 16 வயசாக போகுது. உன்கிட்ட எவ்வளவோ நல்ல பழக்கம் இருந்தாலும், நீ அதிகமா பொய் பேசுற. அது தப்புல்ல. எனக்கு ஒரே ஒரு வாக்குறுதி தரணும். இனிமே, நீ பொய் பேசக் கூடாது. பொய் பேசுறவங்ககிட்ட நீ சேரவும் கூடாது. உடனே உன்னால பொய் பேசுறத நிறுத்த முடியாது தான். ஆனா, படிப்படியா நிறுத்திடலாம். என் மேல, உனக்கு மரியாதை இருக்குறது உண்மைன்னா, உன்னை சுற்றியிருக்கிற எல்லாருக்கும், நீ நல்லது செய்யணும்ன்னு விரும்பினா, எவ்ளோ இக்கட்டான சூழ்நிலை வந்தாலும் பொய்யே பேசக்கூடாது. 'அருணா... அவன் பொய்யே பேச மாட்டானே'ன்னு பேரெடுக்கணும். அதுதான் இந்த இளங்கோ சாருக்கு நீ கொடுக்குற மரியாதை. செய்வியா...' என்றேன்.
'அருணும், 'கண்டிப்பா சார், இனி, நான் பொய் பேச மாட்டேன்...' என்றான். இதுமாதிரி ஒவ்வொரு பசங்ககிட்டயும் ஒவ்வொரு வாக்குறுதி வாங்கினேன். ஒரு பையன்ட்ட திருடக்கூடாதுன்னு, ஒரு பையன்ட்ட அடிதடி வன்முறை செய்யக்கூடாதுன்னு, இப்படி நிறைய.
'இதுபோக, இதையெல்லாம் செய்தே ஆகணும்ன்னு சில, 'லிஸ்ட்!' அதுல ஒரு நாளைக்கு குறைஞ்சது, ஒரு ரூபாயாவது தர்மம் செஞ்சே ஆகணும்ன்னு ஒருத்தன்ட்டயும், அடுத்தவங்களுக்கு சின்ன உதவிகளாவது செய்தே ஆகணும்ன்னும்...
'பிள்ளைகளோட குணாதிசயங்களும், அவர்களின் சூழ்நிலையையும் பார்த்து, எளிமையான, தினசரி செய்யக்கூடிய ஒரு சின்ன, 'ஹோம் ஒர்க்'கும், அவர்களை உற்சாகப்படுத்த, சின்ன சின்ன பரிசுகளும் கொடுத்து அனுப்புவேன்.
10 ஆண்டுகளாக, இந்த வேலையை செஞ்சேன். இதில், பெண் பிள்ளைகளும் அடங்கும்.
'அந்த பசங்கள அப்பப்போ கவனித்து, சந்தோஷமான, 'ரிசல்ட்'டையும் உறுதி செய்துக்கிட்டேன். மந்தமான சில பிள்ளைகளுக்கு, மேலும் கொஞ்சம் ஊக்கம் கொடுத்தேன். கண்டிப்பா அந்த பசங்க, இதை, 100 சதவீதம் பின்பற்றுவாங்கன்னு நம்புறேன். 'சிறு துரும்பும் பல் குத்த உதவும்'ன்னு சொல்வாங்க.
'ஒவ்வொரு பையனும் ஒரு சிறு மாற்றத்தையும், ஒரு உதவியையும் இந்த உலகுக்கு தருவாங்க, தந்திருப்பாங்க. இப்ப, இத நான் உங்களுக்கு சொல்றதுக்கு, ஒரு முக்கிய காரணம் இருக்கு. இது, ஆசிரியரோட வேலைன்னு மட்டும் புரிஞ்சுக்காம, நம் எல்லாரோட கடமையாகவும் இதை நினைக்கணும்.
'ஒரு முதலாளியோ, ஒரு தலைவரோ, ஒரு பொறுப்பாளரோ, அம்மாவோ, அப்பாவோ யாராக இருந்தாலும் இந்த அணுகுமுறையை கையாண்டு பாருங்கள். நம் மீது இருக்கும் மரியாதை மற்றும் பாசம் நிமித்தம், இதை அவர்களால் மறுக்காமல் செய்ய முடியும்.
'மாணவர்களிடம் இதை நான் சொன்னதற்கு காரணம், என் ஆசிரியப் பணி தான். பருவத்தில் போதிப்பது, பசுமரத்தாணி போல் பதியும் என்பதால், நான் எதிர்பார்த்த சமூக விளைவுகள் எளிமையாக எனக்கு கிடைச்சிருக்கலாம். ஆனால், நல்ல விளைவுகள் கால தாமதமானாலும், கண்டிப்பாக கிடைக்கும்.
'என்னோட சின்ன திட்டத்தை விரிவுபடுத்தி, அவுங்கவுங்க சக்திக்கேற்ப லஞ்சம், வரதட்சணைன்னு, பல சமூக கொடுமைகளை ஒழிக்க உதவுங்க. சொல்ற இடத்தில் இருந்தாலும் சரி, கேட்கிற இடத்தில் நாம் இருந்தாலும் சரி, கேவலப்படுத்தாம, கண்ணியமா நடந்துக்கணும்.
'ஏதோ வாழ்ந்தோம், செத்தோம்ன்னு இல்லாம, இந்த உலகத்துக்கு ஏதாவது செய்யணும்ன்னு தோணுச்சு. என்கிட்ட காசோ, பணமோ, பதவி, அதிகாரமோ இல்ல. இருந்திருந்தா, அதுக்கேத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தி இருப்பேன்.
'என்கிட்ட இருக்குறது, நான் கட்டி காத்த என்னோட ஒழுக்கமும், கல்வி அறிவும் தான். இதை வெச்சு தான், நான் ஏதாவது செய்தாகணும். மரம் வளர விதை விதைப்பது போல், ஒரு சின்ன செயல் செஞ்சிருக்கேன். பொன் வைக்கிற இடத்தில் பூ வெச்சிருக்கேன்.
'மக்கள் நலன் கருதி, எத்தனையோ பெரிய பெரிய தியாகம் செஞ்ச நல்ல உள்ளங்களுக்கும், தம்மை வருத்திக்கிட்டு புரட்சிகள் செஞ்ச மாவீரர்களுக்கும் முன்னால என்னோட செயல், ரொம்ப சாதாரணமானது தான். இதுல எனக்கு எந்த பெருமையும் இல்லை. நான் சொன்ன அனைத்தும், தனி மனித ஒழுக்கம் சார்ந்தது. அவ்ளோதான். எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க...' என்று, கண் கலங்கிய இளங்கோவன் சார், குரல் கம்மியது.
விழிகளை துடைத்தவாறே, 'பரபரப்பான இந்த உலகத்துல, எனக்காக, 25 நிமிஷம் ஒதுக்கின உங்களுக்கும், என் மேல் மரியாதை வச்சு, காது கொடுத்து கேட்டு நடைமுறைப்படுத்தின மாணவ செல்வங்களுக்கும், இனிமேலும் இதுபோல் முயற்சி செஞ்சு பார்க்கப் போற நல்ல உள்ளங்களுக்கும், என் மனமார்ந்த நன்றியை தெரிவிச்சு, முடிச்சுக்கிறேன்...'
அந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. பலரும் தம், 'கமென்டு'களை கண்ணீர் மல்க பதிந்தனர். ஒழுக்க சீலராய் வாழ்ந்து மறைந்த அப்பாவின் பெயருக்கு களங்கம் வராமலும், அவரின் நற்பணிகளை தானும் தொடர வேண்டுமெனவும் முடிவு செய்த, சந்திரன், புண்ணியவானாக மாற, மாணவர்களுக்கு இலவச, 'டியூஷன்' எடுக்க முடிவெடுத்தான்.
பா. தாஹிர் உசேன்
படிப்பு: பிளஸ் 2; 'கம்ப்யூட்டர் டிசைனிங்' மற்றும் 'பிரின்டிங்' தொழில் செய்து வருகிறேன். கதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் உண்டு.
டி.வி.ஆர்., நினைவு சிறுகதைப் போட்டியில், ஆறுதல் பரிசு பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து நிறைய எழுத வேண்டும் என்று ஆர்வத்தை இது துாண்டுகிறது.