
* வி. பிரதீப், நெய்வேலி: யாருடை பேச்சை காது கொடுத்து கேட்கக் கூடாது?
முதலாவது, அரசியல்வாதிகள்; இரண்டாவது, 'டிவி'யில் வரும் விவாத மேடைகள், அதேபோல், 'டிவி' தொடர்களில் வரும் பேச்சு, விவாதங்களை தவிர்ப்பது நலம்!
அ. நபிஷா, மதுரை: 'வரும் சட்டசபைத் தேர்தலில் என்னுடைய பங்கும் இருக்கும்...' என்று, மு.க.அழகிரி சொல்லி இருக்கிறாரே... இதன் பின்னணி என்ன?
தென் தமிழகத்தில், தி.மு.க.,வினர் அதிக அளவில் ஆதரிக்கின்றனர், அழகிரியை... அவர், தி.மு.க.,வில் இருந்து துரத்தப்பட்டும் கூட!
பெரிய கட்சி ஏதும் கூட, அவருடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது; அவர், தனிக் கட்சி ஆரம்பித்தால்!
* பெ.ம.அபிராமி, திருப்பூர்: உதயநிதி ஸ்டாலின் செயல்பாடுகள், தி.மு.க.,விற்கு சாதகமா, பாதகமா?
இரண்டாவது தான்!
'இன்னும் ஐந்து மாதங்கள் தான் இருக்கிறது... உங்கள் பெயரை மறப்பேனா?' என, உயர் போலீஸ் அதிகாரி ஒருவரை மிரட்டி இருக்கிறாரே... இதெல்லாம் அரசியல் அனுபவம் இல்லாத ஒருவரின் பேச்சாகவே எடுத்துக் கொள்ள முடிகிறது! தி.மு.க.,விற்கு சாதகமில்லை!
ஜி. செல்லத்துரை, மதுரை: தமிழகத்தில், திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, தேசிய கட்சிகள் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதா?
இல்லவே இல்லை! காங்கிரசை விடுத்து, மற்ற தேசிய கட்சிக்கு கூட்டணியில் வாய்ப்பு உள்ளதாகவே கருதுகிறேன்!
* எம். கண்ணன், புதுச்சேரி: தேர்தல் நெருங்கும் வேளையில், வன்னியர் இட ஒதுக்கீடு வேண்டும் என்று, போராட்டம் நடத்தி, 'இது, தேர்தலுக்கான நாடகம் அல்ல...' என்கிறாரே, அன்புமணி ராமதாஸ்...
ஐந்து ஆண்டுகள், இந்த ஆட்சியில் சும்மா இருந்து விட்டு, தேர்தலுக்கு ஐந்து மாதங்களே உள்ள நிலையில், இதுபோன்ற போராட்டங்களை நாடகம் என்று தானே எடுத்துக் கொள்ள வேண்டும்!
என். வடிவேல், துாத்துக்குடி: ரயில்வே வேலையை தனியார் மயமாக்கப் பார்க்கிறதே மத்திய அரசு... மற்ற நாடுகளில் எப்படி?
அமெரிக்கா பற்றி தான் உங்களுக்குத் தெரியுமே... அதே போல, பல நாடுகளிலும், தனியாரிடம் தான் ரயில்வே உள்ளது. இந்நாடுகளில் ரயில் எப்போதுமே தாமதமாக வருவது கிடையாது!