
பா - கே
'பீச்' திறக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பை கேட்டதிலிருந்து, கொண்டாட்டமாகி விட்டார், லென்ஸ் மாமா.
ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பாக, 'பீச்'சுக்கு சென்றே ஆகணும் என்று, நண்பர்களை, 'மூளை சலவை' செய்து, என்னையும் சேர்த்து, 'பீச் மீட்டிங்'குக்கு ஏற்பாடு செய்த பின்னரே, நிதானத்துக்கு வந்தார்.
நீண்ட இடைவெளிக்கு பின், 'பீச்'சுக்கு வந்த பொதுமக்கள், காதல் ஜோடிகள், சிறு வியாபாரிகள், நடைபயிற்சிக்கு வந்தவர்கள் என, அனைவர் முகத்திலும், பரவசம் காணப்பட்டது.
இருள் கவிய துவங்கியதுமே லென்ஸ் மாமா, ராமசாமி அண்ணாச்சி வகையறாக்கள், தங்கள், 'கச்சேரி'யை ஆரம்பித்தனர்.
'இனி, இவர்கள் உலகில் நாம் தலையிட முடியாது...' என்று, வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். அப்போது, நடுத்தர வயது பெண்மணியும், அவரது கணவரும் எங்களை நோக்கி வருவது தெரிந்தது.
லென்ஸ் மாமாவை அழைத்து, அப்பெண்மணியை சுட்டிக் காட்டினேன்.
'அட... இவங்க, காலேஜ் புரபொசர் ஆச்சே... நாம ஒருமுறை, 'அட்மிஷனு'க்காக இவங்களை சந்திச்சோமே... ஞாபகமில்லையா... இங்க தான் வர்றாங்க போலிருக்கு. இங்கு வந்தால், 'கச்சேரி' பாழாகிவிடும். நீ போய் பேசிட்டு வந்துடு...' என்று அனுப்பி வைத்தார், மாமா.
அவர்களை அப்படியே திருப்பி, மணலில் நடக்க ஆரம்பித்தேன்.
'மணி எப்படி இருக்க...' என்று, நலம் விசாரித்து, தன் கணவரை அறிமுகப்படுத்தினார், அப்பேராசிரியை.
'பா.கே.ப., பகுதியில், உங்களோட, 'பீச் மீட்டிங்' பற்றி படித்துள்ளேன். இங்கு வரும்போதெல்லாம் உங்களை சந்திக்க முடியுமான்னு பார்ப்பேன். இன்று தான் அது நிறைவேறியது...' என்றார்.
'பீச்' மணலில், ஆங்காங்கே நெருக்கமாக அமர்ந்து, மெய்மறந்து பேசிக் கொண்டிருந்த, காதல் ஜோடிகள் கண்ணில் பட்டனர்.
நான் பார்ப்பதை, அப்பேராசிரியையும் பார்த்தார்...
'என்னமோ மணி... எப்படா, 'பீச்'சை திறப்பாங்கன்னு, காத்திருந்தவங்க மாதிரி, காதல் ஜோடிகள் வந்து குவிஞ்சிட்டாங்க... இவங்க காதல், கல்யாணத்தில் முடியும்ன்னா நம்புற... எனக்கென்னமோ அப்படி தோணல...
'இப்படித்தான், என் வகுப்பில் நன்றாக படிக்கக் கூடிய ஒருத்தியின் மதிப்பெண் குறையத் துவங்கியது. ஒற்றைப் படையில் மதிப்பெண் பெறவும், அவளை அழைத்து விசாரித்தேன்.
'அதற்கு, 'மேடம்... நான் தினமும், காலேஜுக்கு, 'டூ வீலரில்' வரும்போது, சில பசங்க என்னை பின்தொடர்ந்து, தொந்தரவு கொடுக்கிறாங்க... பொறுக்க முடியாமல் அப்பாவிடம் கூறினேன். அவரும், அவர்களை கண்டிக்கப் போக, கைகலப்பில் முடிந்தது. சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த எங்களால் போலீசுக்கு போக முடியவில்லை. இதனால் தான், படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை...' என்று கூறி அழுதாள். அவளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தேன்.
'அடுத்த நாள், அவளது தோழி, என்னை சந்தித்து, 'மேடம், அவள் சொல்றத நம்பாதீங்க. நம் கல்லுாரியில் படிக்கும் சீனியர் மாணவன் ஒருவனை, அவள் காதலிக்கிறாள். இது சம்பந்தமாகத்
தான், அவள் காதலனுக்கும், வெளி பசங்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. அவளது மோசமான மதிப்பெண்களுக்கு இதுவே காரணம்...' என்று கூறினாள்.
'எனக்கு, யார் சொல்வதை நம்புவது என்று தெரியவில்லை.
'பள்ளி - கல்லுாரி மாணவியரை பின்தொடர்ந்து கேலியும், வம்பும் செய்வதில் தான் ஆரம்பிக்கிறது, பழக்கம். நாளடைவில், அந்தக் கும்பலில் இருக்கும் ஒருவனை, காதலிக்க துவங்கி விடுகின்றனர், மாணவியர்.
'இது, தன் அழகுக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் கருதுகின்றனர். முடிவில் தன் தலையில் தானே மண் அள்ளி போட்டுக் கொள்கின்றனர்.
'ஒருமுறை, இப்படித்தான் ஒரு மாணவி, அடிக்கடி விடுப்பு எடுக்கவே, அவள் வீட்டுக்கு தகவல் அனுப்பினோம். அவளது அம்மா வந்தார். நாங்கள் குறிப்பிட்ட தேதிகளில் அப்பெண், கல்லுாரிக்கு வந்ததாக சாதித்தார், அம்மா. அப்பெண்ணை கூப்பிட்டு மிரட்டி கேட்டதும், தன் ஆண் நண்பனுடன் பல இடங்களுக்கு சென்றதாக கூறினாள்.
'அதைக் கேட்டு அந்த அம்மாவின் முகத்தில் தெரிந்த அதிர்ச்சி, இன்னும் என் கண்ணில் நிழலாடுகிறது. அழுது கொண்டே தன் மகளை அழைத்து சென்றார்.
'பெற்றோர் தான், பெண்ணின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்க வேண்டும். படிப்பில் நாட்டம் குறைந்தால், கூடுதலாக அலங்காரம் செய்து கொண்டால், அடிக்கடி தன்னை தனிமைப்படுத்தி, மொபைல் போனில் நீண்ட நேரம் பேசினால், உடனடியாக கண்காணிக்க வேண்டும்.
'இவைகள் தான், அவள் பாதை தவறுவதற்காக அறிகுறிகள். ஆசிரியர்கள் ஓரளவுக்கு தான் கண்டிப்புடன் நடந்து கொள்ள முடியும். நாங்கள் ஏதாவது சொல்லப் போக, அவர்கள் விபரீதமாக முடிவு எடுத்து விட்டால், எங்கள் தலை தான் உருளும்.
'கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டி விட்டால், மண்ணில் குமரருக்கு மாமலையும்
ஓர் கடுகாம் என்று, காதலை உயர்வாக பாடிய, பாரதிதாசன் மற்றும் பாரதியாரின் கவிதைகளை கற்றுக் கொடுத்த எங்களுக்கு, இக்கால இளைஞர்களும், இளைஞிகளும் புரிந்து கொண்ட காதல் வேறு, 'லெவலில்' போய் கொண்டிருப்பதை நினைத்து, வருத்தமாக உள்ளது.
'என்னமோ உன்னை சந்தித்து என் ஆதங்கத்தை கொட்டி விட்டேன். மனம் சற்று லேசாகி விட்டது. மிகவும் நன்றி மணி...' என்று கூறி விடைப்பெற்றார், அப்பேராசிரியை.
என்னால் பெருமூச்சு விடத்தான் முடிந்தது.
நண்பர்கள் இடத்திற்கு திரும்பி வருவதற்கும், அவர்களின், 'கச்சேரி' முடிவதற்கும் சரியாக இருந்தது. அவரவர் வீட்டிற்கு கிளம்பினோம்.
ப
கடைக்குப் போய் ஒருவர், காலண்டரை விலைக்கு கேட்டார்.
'எந்தக் காலண்டர் வேண்டும்?' என்றார், கடைக்காரர்.
அதற்கு இவர், 'எந்தக் காலண்டரில் அதிக விடுமுறை நாள் போட்டிருக்கின்றனரோ, அதைக் கொடுங்கள்...' என்றார்.
- எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது!