
* கி. ரவிக்குமார், நெய்வேலி: கமல்ஹாசன் நிற்பது, தி.மு.க., - பா.ஜ., இருவரில் யாருக்கு பாதகம்?
தி.மு.க.,வை விரும்பாத, ஏராளமான நடுநிலை வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்; அதனால், அந்த கட்சிக்குத் தான் பாதகம் அதிகமாக இருக்கும்!
எஸ். சையத் சல்மான், கடலுார்: 'என் அப்பாவை சிம்மாசனத்தில் அமர வைப்பதே எனது கடமை...' என்று, தே.தி.மு.க., தலைவர் விஜயகாந்த் மகன், விஜயபிரபாகரன் சபதம் செய்திருக்கிறாரே...
அமெரிக்க அதிபர் சிம்மாசனமா இவரது கடமை? அரசியல் அனுபவம் இல்லை என்பதையே, இவரது சிறு பிள்ளைத்தனமான பேச்சு காட்டுகிறது!
* எஸ். கலைவாணி, காஞ்சி: துன்பங்களை துாசுகளாக்குவது எப்படி?
மனம் வேண்டும். துன்பங்கள் வந்தால், அதைத் தாங்கிக் கொள்ள வேண்டும்! சமாளிக்க முடியும் என்றால், துணிவை பெற மனம் வேண்டும்!
பி. ஜெயராஜ், சென்னை: வரும் தேர்தலில், 'டாஸ்மாக்' கடைகளை மூடுவது பற்றி, தேர்தல் அறிக்கையில், தி.மு.க., - அ.தி.மு.க., எதுவும் சொல்லவில்லையே... ஏன்?
தமிழகத்தின் முதல்வராக இருந்த, கருணாநிதியால் உற்சாக பானம் இங்கு அறிமுகமானது. இன்று, அதற்கு பலரும் அடிமையாகி விட்டனர். 'உ.பா.,வை அகற்றுவோம்' என, தேர்தல் அறிக்கையில் கூறினால், அவர்கள் ஓட்டு கிடைக்காமல் போய் விடுமே என்ற, பயம் தான்!
அ. ரவீந்திரன், கன்னியாகுமரி: இலவசங்கள் ஆச்சரியப்பட வைக்கிறதா, அதிர்ச்சியடைய வைக்கிறதா?
இரண்டுமே இல்லை; கவலை அளிக்க வைக்கிறது! தமிழகத்தின் கடன் தொகை, 5.6 லட்சம் கோடியிலிருந்து, 10 லட்சம் கோடியாகி விடுமே! ஒவ்வொரு தமிழன் தலையிலும், இன்னும் எத்தனை ஆயிரம் கடன் சுமை ஏறப்போகிறதோ!
கு. கணேசன், மறைமலைநகர்:அ.தி.மு.க., கூட்டணியிலிருந்து, தே.மு.தி.க., விலகியதால் பாதிப்பு யாருக்கு?
அ.தி.மு.க., கொடுத்த தொகுதிகளை வாங்கிக் கொண்டிருந்தால், பாதியிலாவது ஜெயித்திருக்க முடியும்! இப்போதைய கூட்டணியில், 60 தொகுதிகளை பெற்று இருக்கிறது. தேர்தல் முடிவு தமாஷாகத் தான் இருக்கும்; இக்கட்சிக்கு!
* ஆர். அஸ்வின்குமார், கோவை: 'கொரோனா'வால் பாதிக்கப்பட்டது, சினிமா துறையா... பத்திரிகைத் துறையா?
சினிமா துறை தான்! தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன; அவைகளை இடித்து, அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டி விடலாம் என்ற முடிவில் இருக்கின்றனர், தியேட்டர் அதிபர்கள்.
இதனால், 'ரியல் எஸ்டேட்' துறை பாதிக்கப்படும்; சினிமாவில், இனி, 'சூப்பர் ஹீரோ' என்பதெல்லாம் இருக்காது; அதனால், புதுப்புது அரசியல் கட்சிகளும் தோன்றாது!

