sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

உயிரோடு உறவாடு... (3)

/

உயிரோடு உறவாடு... (3)

உயிரோடு உறவாடு... (3)

உயிரோடு உறவாடு... (3)


PUBLISHED ON : மார் 28, 2021

Google News

PUBLISHED ON : மார் 28, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை சுருக்கம்: 'சினி போட்டோகிராபர்' ஆக, ரிஷிக்கு உதவுவதாகவும், பேட்டி தருவதாகவும் தமிழ்செல்வியிடம் கூற, காரில் கிளம்பினார், நடிகர் சுஜித்குமார். நன்றி கூறிய ரிஷியிடம், காதலிப்பதாக கூறிவிடுவாயே என பயந்ததாக தமிழ்ச்செல்வி சொல்லவும், கன்னத்தில் அறைந்தது போல் ஆனான் -

தமிழ்ச்செல்வி தன் கன்னத்தில் அறைந்ததைப் போல உணர்ந்த, ரிஷி, மிக வேகமாய் முகம் மாறினான். அதுவரை அங்கு நிலவிய பிரமிப்பான சந்தோஷமெல்லாம் நொடியில், ஊதுபத்தி புகை போல் மறைந்து, அவன் மனதிலும் ஒரு இறுக்கத்தை ஏற்படுத்தியது.

அது, தமிழ்ச்செல்விக்கும் புரிந்து விட்டது.

''என்னடா... தப்பா எடுத்துக்கிட்டியா... சாரிடா, நான் ரொம்ப, 'கேஷுவலா' தான் சொன்னேன்.''

''ஆமா, எதை வெச்சு அப்படி சொன்னே... நான் எப்பவாவது உன்கிட்ட வழிஞ்சிருக்கேனா?'' மிக சூடாகவே கேட்டான், ரிஷி.

''சாரி... நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன்.''

''என்ன சாரி... ஒரு நண்பியா இப்ப தான் விசுவரூபம் எடுத்தே... அப்படியே கீழே விழுந்துட்டியே.''

''வெரி சாரி... ஆபீஸ்ல, எடிட்டிங் பிரிவுல, நான் மானிட்டர் பார்த்துட்டு இருந்தப்ப, அங்க இருந்த முருகன், 'ஐ லவ் யூ தமிழ்'னு சொல்லி, அதிர்ச்சி கொடுத்தான்.

''அவனிடம், 'சாரி, என்னால உன்னையெல்லாம் காதலிக்க முடியாது. எங்கப்பா அம்மா பார்க்கற பையனைத்தான் கட்டிப்பேன்னு, 'பிராமிஸ்' பண்ணவும் தான், சென்னை வரவே விட்டாங்க'ன்னு எடுத்துச் சொன்னேன். அவனும், புரிஞ்சு, 'சாரி'ன்னுட்டான்.

''கொஞ்ச நேரத்துல செய்தி வாசிப்பாளர் மணிமாறனும், 'ஐ லவ் யூ தமிழ்'னு வழிஞ்சாரு. எனக்கு துாக்கி வாரிப் போட்டுருச்சு... பேசாம, 'யாரும் ஐ லவ் யூ சொல்லிடாதீங்க'ன்னு கழுத்துல ஒரு, 'போர்டு' எழுதி மாட்டிக்கலாமான்னு தோணிச்சு.

''அதான் உன் வரையில, நான் அப்படி சொல்ல காரணமா இருந்துச்சு, புரிஞ்சுக்கோ,'' ரயில் பெட்டி போல், நீண்ட விளக்கமளித்தாள்.

அது, அவன் கோபத்தையும் கொஞ்சம் குறைத்தது.

''அது சரி... உன் அப்பா - அம்மா பார்க்கற பையனை தான் கல்யாணம் பண்ணிக்குவியா... அது நிஜமா, இல்லை, அவனை சமாளிக்க அப்படி சொன்னியா?''

''அப்பட்டமான நிஜம்.''

''சத்யமெல்லாம் பண்ணுனியா?''

''பூஜை அறையில, எல்லா சாமி படங்கள் முன் நிறுத்தி, சத்தியம் வாங்கிட்டாங்க. இல்லேன்னா, நான் மேலுாரை தாண்டி, மதுரையில கூட வேலைக்கு போயிருக்க முடியாது.''

அந்த பதில், ரிஷியை நிறையவே யோசிக்க வைத்தது. முகம் சுருங்கி கண்கள் இரண்டும் இடுங்கியது.

''என்னடா... நம்ப முடியலியா, இல்லை, 'ரீல்' விடறதா நினைக்கறியா?''

''ரெண்டும் இல்லை... எதை வெச்சு இந்த ரெண்டு பேரும் உன்கிட்ட, 'ப்ரபோஸ்' பண்ணாங்க... நீ ரொம்பவே சுமாரான, 'பிகர்!' உன்கிட்டயே இப்படி வழிஞ்சிருக்காங்கன்னா, நிஜமான அழகிகளை இவங்க பார்த்தா என்ன செய்வாங்கன்னு யோசிச்சேன். அவங்க காலை பிடிச்சுக்கிட்டு கதறுற மாதிரி ஒரு கற்பனையும் ஓடிச்சு... அதான்.''

ரிஷியின் பதில் அவளை, அவன் தோளில் செல்லமாய் அடிக்க வைத்தது.

''ஏண்டா, நான் சுமாரான பிகரா... நேத்து வழிஞ்சவங்களதாண்டா சொன்னேன். தினமும் எவ்வளவு பேர் தெரியுமா?''

''ஓ... அப்ப ஆண் வர்க்கமே உன் பின்னால திரியறதுங்கறியா?''

''டேய், வேண்டாம்... நாம இப்ப ஒரு பெரிய விஷயத்தை, 'அச்சீவ்' பண்ணியிருக்கோம். அந்த நல்ல மூடை கெடுக்காதே.''

''சும்மா தான் சொன்னேன், தமிழ். நிஜமா, இன்னிக்கு நமக்கு ஒரு, நல்ல நாள். சுஜித் சார், கிரேட்... என்ன ஒரு, 'டைமிங்' என்ன ஒரு, அப்ரோச்.''

''ஆமாண்டா. இது, அருமையான ஒரு வாய்ப்பு. முதல்ல என் தலைமை பொறுப்பாளரிடம் தகவல் தெரிவிக்கணும். அப்படியே எகிறி குதிப்பாரு.''

''அவசரப்படாதே... பேராண்மை படத்துல வர்ற பொன்வண்ணன் மாதிரி, அவரே கஷ்டப்பட்டு, சுஜித்தை, 'கன்வின்ஸ்' பண்ணதா, எம்.டி.,கிட்ட ஓட்ட ஆரம்பிச்சிடுவாரு..''

''அப்ப நேரா எம்.டி.,கிட்ட பேசுங்கிறியா?''

''என்ன தப்பு?''

நடந்தபடியே இருவரும், ரிஷியின் பைக் அருகே வந்து, பேச்சை தொடர்ந்தனர்.

''ரிஷி... எம்.டி.,கிட்ட நேரடியா பேசறது, 'ஓவர் லுக்' ஆயிடாது?''

''ஆகட்டும்... விஷயமும் பெருசுல்ல. இதுக்கெல்லாம் நீ பயப்படாதே, தமிழ்.''

''நோ நோ... 'ஓவர் லுக்' பண்றது, 'இன்டிசிப்ளின்!' சில விதிகளை, நாமளே உடைக்கக் கூடாது.''

''அப்ப சரி... நீயே பட்டு தெரிஞ்சுக்க.''

''உடனே, இப்படி சொன்னா எப்படி... இப்படி பண்ணலாமா?''

''எப்படி?''

''ஒரே சமயத்துல தலைமை பொறுப்பாளருக்கும், எம்.டி.,க்கும், 'மெயில்' பண்ணிட்டா?''

''மெயில் ஒரு வகையில ஓ.கே., தான். ஆனாலும், யாரை கேட்டு, எம்.டி.,க்கு போட்டேன்னு கேட்டா என்ன சொல்வே?''

''அப்படி கேட்டா, அப்ப நான் எதையாவது சொல்லி சமாளிச்சுக்கறேன்.''

''சுஜித் சாரே, எம்.டி.,கிட்ட தான் முதல்ல சொல்லச் சொன்னார்ன்னு, அவரை இதுல இழுத்துடு. அப்புறம், உன் தலைமை பொறுப்பாளரால வாயை திறக்க முடியாது.''

''நோ நோ... சுஜித் சார் சொன்னார்ன்னு சொல்றதுக்கு, நான் உங்களை நம்ப தயாரா இல்லன்னு, உண்மையை சொல்லிடறது மேல்,'' என்ற தமிழ்ச்செல்வியை, அவளின் தெளிவிற்காகவே உற்றுப் பார்த்தான்.

''என்ன, அப்பப்ப இப்படி பார்க்கறே?''

''நீ தான் பார்க்க வைக்கிறே... எப்பவும் நீ, நீயாவே இருக்கே தமிழ். என்னால அப்படி இருக்க முடியல. சரி, ஹாஸ்டல்ல உன்னை, 'டிராப்' பண்ணிடட்டுமா?''

''சரி.''

''ஏறிக்கோ.''

அவள் பின்னால் தொற்றவும், அந்த இரும்பு குதிரை, செருமலுடன், 'பீச்' ரோட்டில் ஓடத் துவங்கியது.

காலை, 9:00 மணி-

பைக்கை சாய்த்து நிறுத்தி, 'ஹெல்மெட்'டை துாக்கிப் போட்டு பிடித்தபடியே மாடிப்படி ஏறப் பார்த்த ரிஷியை, சாரதா மாமியின் குரல் தடுத்தது.

''ரிஷி...''

''யெஸ் மாமி,'' என்றபடியே திரும்பி வந்தான்.

''என்னப்பா, எதுவுமே சொல்லாம போறே...

போன காரியம் என்னாச்சு?''

''கிரேட் சக்சஸ் மாமி.''

''அப்ப நான், வாழ்த்தினது வீண் போகலைன்னு சொல்லு?''

''நிச்சயமா.''

''சாப்பிட்டுட்டியா?''

''இல்ல மாமி, குளிச்சுட்டு ஆபீஸ் போகும்போது, வழக்கம்போல, அய்யர் கடையில நுழைஞ்சு, பொங்கல் வடையை முழுங்கிட்டு போக வேண்டியது தான்.''

''தினமும் பொங்கல், வடை தானா... போரடிக்கலியா உனக்கு?''

''அதான் மாமி, மதியம் வரை தாங்குது. உண்மையில, பொங்கல கண்டுபிடிச்ச நபருக்கு, பத்மஸ்ரீ; இல்லைன்னா, குறைஞ்சபட்சம், 'கலைமாமணி'யாவது கொடுக்கணும். இட்லி, பொங்கலெல்லாம் நம்ப நாட்டோட கிரேட்.''

''பொங்கலுக்கே தரலாம்னா, நான் இன்னிக்கு சின்ன வெங்காயம் போட்டு, இட்லி உப்புமா பண்ணியிருக்கேன். அதுக்கு என்ன தரலாம்?''

''நீங்க ஒரு சமையல் ராட்சசி மாமி... உங்களுக்கு, இந்த அவ்வை சண்முகம் சாலையையே எழுதி வைக்கலாமே.''

''சரி... குளிச்சுட்டு வந்து சாப்பிட்டுட்டு, எழுதி வெச்சுட்டு போ,'' என, அவன் பதிலை எதிர்பார்க்காமல், உள்ளே சென்றாள்.

''உங்களுக்கு எதுக்கு மாமி இந்த சிரமமெல்லாம்?'' என்று அவன் சொன்னது, மாமியின் காதில் விழவே இல்லை.

அதன்பின், குளித்து, உடை மாற்றி, 'ஹெல்மெட்'டுடன் வந்தவனை, மாமி மட்டுமல்ல, மாமா நீலகண்டனும் சேர்ந்தே வரவேற்றனர்.

'வாப்பா...'

''சார், நீங்களா... ஆபீஸ் போகலியா?''

''இல்லப்பா... இன்னிக்கு லீவ்.''

''ஏன் சார்... உடம்புக்கு முடியலியா?'' கேட்டபடியே சோபாவில் அமர்ந்தான்.

''அப்படியும் சொல்லலாம். உடம்பை விட மனசு எனக்கு ரொம்ப பெருசு. அது, இன்னிக்கு பெரிய துக்கத்துல இருக்கு.''

சுவற்றில் தொங்கிய, 20 வயது வாலிபன் படத்தை பார்த்தபடியே அவர் சொல்ல, அவனும் அந்த படத்தை பார்த்தான்.

அவரது ஒரே மகன், மோகன். இப்போது, அமரன். ஒரு விபத்து அவனை, அவர்களிடமிருந்து பிரித்து விட்டது. அந்த படத்துக்கு, புதிய மல்லிகை சரம் போடப்பட்டிருந்தது.

''சார்... இன்னிக்கு மோகனுக்கு?''

''பர்த்டே ரிஷி... நானும், சாரதாவும், இவனுக்கு பிறந்த நாள் கொண்டாடப் போறோம்.''

''சார்...''

''உன் வயசு தான் அவனுக்கு. சாரி,

இதை நான் பலமுறை சொல்லிட்டேன்ல?''

''பரவாயில்ல சார்... நானும் அதே பலமுறை, என்னை, உங்க மோகனா நினைச்சுக்கங்கன்னு...''

''அதனால தான், இப்ப உன்னை டிபன் சாப்பிட கூப்பிட்டா சாரதா... சாப்பிடுவோமா?''

''ஷ்யூர் சார்.''

எழுந்தான். அப்போது, அவன் போனில் ஒரு அழைப்பு. விலகிச்சென்று காதை கொடுத்தான்.

இயக்குனர், கே.வி.ஏ., ''திஸ் ஈஸ் மிஸ்டர் ரிஷி?''

''யெஸ் சார்.''

''ஐயாம் டைரக்டர் கே.வி.ஏ.,''

''சார், நீங்களா... ரொம்ப சந்தோஷம்.''

''இப்ப தான் சுஜித் போன் பண்ணி வெச்சாரு. பை த பை... இப்ப நான் எடுத்துகிட்டு இருக்கிற படத்துக்கு போதுமான உதவியாளர்கள் இருக்காங்க. அடுத்த படத்துக்கு தான் உங்களை பயன்படுத்திக்க முடியும்.''

''ஓ.கே., சார்... எப்பன்னாலும் நான் தயார்.''

''சரி, உங்களுக்கு, அது தொடர்பா ஒரு, 'அசைன்மென்ட்' தரலாமா?''

''அய்யோ... பாக்யம் சார்.''

''அது, ஒரு, 'லிவ்விங் டுகெதர் லவ்வர்ஸ்' பத்தின கதை. மூணு மாசம் ஒரே வீட்டுல வாழ்ந்த காதலர்கள், கருத்து வேற்றுமை ஏற்பட்டு பிரிய முடிவு செய்யறாங்க. ஆனா, விதி...

அவங்க, 'லவ்' பண்ணதே தெரியாம, பெற்றோர் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிடறாங்க.

''இதான் முதல், 'ட்விஸ்ட்!' இப்படி பல, 'ட்விட்ஸ்' இருக்கு... நீங்க, உங்க நண்பர்கள் வட்டாரத்தில் இப்படி, 'லிவ்விங் டுகெதர் லைப்ல' யாராவது இருந்தா கூர்ந்து பார்க்கணும்; முடியுமா?''

அந்த இயக்குனரின் கேள்வி, ரிஷியை பெரும் பரவசத்துக்கு ஆளாக்கியது.

தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்







      Dinamalar
      Follow us