
ரசிகர்களின், 'ரோல் மாடல்' அஜீத்!
சினிமாவைத் தாண்டி, 'பைக் ரேஸ், சைக்கிளிங்' செல்லும், அஜீத், துப்பாக்கி சுடும் போட்டியில், சமீபத்தில், ஆறு பதக்கங்களை வென்றார். இதையடுத்து, 'சோஷியல் மீடியா'வில், கெத்து காட்டினர், அஜீத்தின் ரசிகர்கள். அதோடு, தன்னை சந்தித்த சில ரசிகர்களிடம், 'எனக்கு, நீங்கள் பேனர், 'கட் - அவுட்' வைப்பதை விரும்பவில்லை. வாழ்க்கையில், ஏதாவது சாதனை செய்யுங்கள். அப்போது தான், நீங்கள் என் ரசிகர்கள் என்பதை, நான் பெருமையாக சொல்லிக் கொள்வேன். உங்களை அப்படி பார்க்கத்தான் நான் ஆசைப்படுகிறேன்...' என்று சொல்லியிருக்கிறார்.
இந்த செய்தி, காட்டுத்தீயாய் பரவியதை அடுத்து, இப்போது, அஜீத்தை, 'ரோல் மாடலாக' கொண்டு, அவரது ரசிகர்களும், தங்களுக்கு பிடித்த துறைகளில், சாதனை செய்யப்போவதாக வரிந்து கட்டியுள்ளனர்.
— சினிமா பொன்னையா
காட்டுத்தீயை ஊதி அணைத்த, கீர்த்தி சுரேஷ்!
ஏற்கனவே ஒருமுறை, பா.ஜ., பிரமுகரின் மகனை திருமணம் செய்து கொள்ளப் போவதாக, செய்தி வெளியானபோது, பதறி, அதற்கு மறுப்பு தெரிவித்தார், கீர்த்தி சுரேஷ். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக, இசையமைப்பாளர் அனிருத்தின் காதல் வலையில், கீர்த்தி சுரேஷ் விழுந்திருப்பதாக இன்னொரு செய்தி, காட்டுத்தீயாக பரவியது. ஒருவேளை இது உண்மையாக இருக்குமோ என்று அனைவரும் நினைத்த நேரத்தில், 'காதலும் இல்லை; கத்தரிக்காயும் இல்லை. எனக்கு, சினிமாவில் நடிக்கவே நேரமில்லை. இதில், காதலிக்க ஏது நேரம்...' என்று, ஒரே போடாக போட்டு, பரபரப்பு செய்திக்கு, மூடுவிழா நடத்தி விட்டார். அம்பலத்தில் ஏறும் பேச்சை அடக்கம் பண்ணப் பார்த்த கதை!
எலீசா
'சீரியஸ்' காட்டும், சிவகார்த்திகேயன்!
முன்பெல்லாம் படப்பிடிப்பு தளத்தில், சிறிய இடைவெளி கிடைத்தாலும், கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகளை ஆரம்பித்து விடும், சிவகார்த்திகேயன், சமீபகாலமாக, 'சீரியஸ்' நாயகனாகி விட்டார். அதாவது, 'ஸ்பாட்'டிற்குள் காலடி வைத்ததில் இருந்து, வெளியேறுவது வரை, தான் நடிக்கும் அந்த கதாபாத்திரமாகவே காணப்படுகிறார். அதோடு, மதிய இடைவேளை நேரங்களில் கூட, அந்த கதாபாத்திரம் என்ன செய்யுமோ, அதுபோலவே, தன் செயல்பாடுகளை மாற்றிக்கொள்கிறார். இதுபற்றி கேட்பவர்களிடத்தில், 'ரஜினி, கமல் போன்ற மெகா நடிகர்களெல்லாம், இப்படி நடித்ததால் தான் இத்தனை பெரிய நடிகர்களாகி இருக்கின்றனர். நானும், பெரிய நடிகர் ஆகணுமில்ல, அதான் இப்படி...' -என்கிறார்.
சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
அம்மணியரை, 'கரெக்ட்' பண்ணுவதில், 'பிக் - அப்' நடிகர் கெட்டிக்காரர் என்பதை அறிந்த அவரது காதல் மனைவி, அவரின் நடவடிக்கைகளை ரொம்பவே கண்காணிக்கிறார். முக்கியமாக, அவர் போனில் யாருடனாவது நீண்டநேரம், 'கடலை' போட்டால், அதன்பிறகு, அவர் யாரிடத்தில் பேசினார் என்பதை, 'செக்' பண்ணுகிறார். மனைவிக்கு, தன் மீது சந்தேகம் ஏற்பட்டு விட்டதால், தன் மொபைலில் வைத்திருந்த அத்தனை, 'கேர்ள் பிரண்டு'களின் எண்களையும், 'டெலிட்' செய்து, அவரின் கெடுபிடியில் இருந்து, தன்னை காத்து வருகிறார், நடிகர்.
'டேய் ஆர்யா... வந்ததுலேர்ந்து பார்க்கிறேன். ஏன், 'டல்'லா இருக்கே... முன்ன போல கலகலப்பே உன்னிடம் இல்லையே... என்னாச்சு உடம்புக்கு?'
'அதையேன் கேக்கற நண்பா... என் பொண்டாட்டி, சாயிஷா ரொம்பவே என்னை சந்தேகப்படறா. கல்யாணம் ஆனதிலேர்ந்து, என் சுதந்திரமே பறி போயிடுச்சு. பக்கத்து வீட்டு பொம்பள எதையோ சொல்லிக் கொடுத்துடுச்சு போலிருக்கு... தனியா எங்காவது போயிட்டு வந்தா, ஆயிரம் கேள்வி கேட்டு, குடையறா... என் மொபைல் போனை பிடுங்கி, சோதனை செய்யிறாடா... அவகிட்ட மாட்டிக்கிட்டு விழிக்கிறேண்டா, மச்சி...' என்றான்.
சினி துளிகள்!
* சென்னையில், ஆர்யா படப்பிடிப்பில் இருந்தால், சில நாட்களில், அவரது மனைவி சாயிஷா மதிய உணவு எடுத்து வந்து கொடுக்கிறார்.
* 'ஹீரோ'களுடன் நடிக்கும் படங்களுக்கு கூடுதல் சம்பளம் கேட்கும், ஐஸ்வர்யா ராஜேஷ், 'என்னை கதையின் நாயகியாக வைத்து, யாராவது படமெடுக்க முன்வந்தால், அவர்கள் கொடுக்கிற சம்பளத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன்...' என்கிறார்.
அவ்ளோதான்!

