
ஆர். ஜெய்ஸ்ரீ, கோவை: இப்போது தேர்தலில் நிற்கும் அரசியல்வாதிகளின் நோக்கம் என்ன?
தலைமைச் செயலகம்! அந்த கோட்டையை, 10 ஆண்டுகளாக கை விட்டவர்கள், அதைப் பிடிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அந்த கோட்டையில் இருப்பவர்கள், அதைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே கவனமாக இருக்கின்றனர்.
என்.நாராயணன், நாகர்கோவில்: நான் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறேன்... அதற்கு என்ன செய்ய வேண்டும்?
கடன் கொடுக்காதீர்கள்; அதை வாங்காதீர்கள்! இதைச் செய்பவர்கள் என்றுமே மகிழ்ச்சியாக இருந்ததில்லை!
* முருகேசன், தஞ்சாவூர்: தான் நிற்கும் விருத்தாசலம் தொகுதியில் மட்டும் தான் பிரசாரம் செய்வேன் என்று, விஜயகாந்த் மனைவி பிரேமலதா கூறி விட்டாரே...
போட்டியிடும், 60 தொகுதிகளிலும், நாலாம், ஐந்தாம் இடம் தான் கிடைக்கப் போகிறது என்பது, அவருக்கு நன்றாகவே தெரியும்; அதனால், விருத்தாசலத்திலாவது வெற்றி பெற்று விடலாமே என்பதால் தான், இந்த, 'ஸ்டேட்மென்ட்!' அங்கும், அவர் வெற்றி பெற மாட்டார் என்பதே உண்மை!
ஆர். ஜெயலட்சுமி, மதுரை: இதோ, ஏப்., 6ம் தேதி வந்து விட்டது... இந்தத் தேர்தல் மூலம் அரசுக்கு வருமானம் அதிகமா? செலவு அதிகமா?
தேர்தலில் நின்று ஜெயிப்பவர்களுக்கே வருமானம் அதிகம்!
* பொன்.ராஜபாண்டி, மதுரை: 'நான் ஆட்சிக்கு வந்தால், படித்தவர், படிக்காதவர் அனைவருக்கும், சொந்த ஊரிலேயே அரசு வேலை தருவேன்...' என, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறுகிறாரே...
கடந்த, 10 ஆண்டுகளாக, சினிமாவில், வாய்ப்பே கிடைக்காமல் தவித்து வருகிறார், வடிவேலு; அந்த இடத்தை, சீமான் பிடித்து விடுவார் போல் தோன்றுகிறது!
பி.என். நரசிம்ம மூர்த்தி, சென்னை: அஞ்சல் அட்டையில் உங்கள் படம் போட்டாலே, அலுவலகத்தை வந்து அடைந்து விடுகிறதே... என்ன மாயம்?
அஞ்சல் அலுவலர் அனைவரும், என் வாசகர் என்பது, இதன் மூலம் புரிகிறது!
வி. விசந்தா, நெல்லை: பகுதி நேர வேலை எது... முழு நேர வேலை எது?
சினிமாக்காரர்களுடையது பகுதி நேர வேலை; அரசியல்வாதிகளாகி, நடிப்பது அவர்களது முழு நேர வேலை!
க. ரவி, சென்னை:'தமிழகத்தின் காவல் தெய்வம்; தியாகத் தலைவி, ராஜ மாதா' என்றெல்லாம், சசிகலாவை புகழ்வது குறித்து...
எல்லாம், காந்தி படம் போட்ட நோட்டின் மீது உள்ள ஆசையில் தான்!

