தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஏப் 04, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பா-கே

தமிழகத்தில், ஏப்., 6ல் நடக்க இருக்கும் தேர்தலுக்காக, கூட்டணி முடிவாகி, வேட்புமனு தாக்கலும் முடிந்து, ஆங்காங்கு கட்சி கூட்டங்கள், களைகட்டி இருந்த ஒருநாள் மாலை-

வேகமாக உள்ளே வந்தார், லென்ஸ் மாமா.

'கிளம்பு மணி... கட்சிகளின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களை பார்த்துட்டு வரலாம்...' என்றார்.

'நான் வரல மாமா... ஒலிபெருக்கியின் அலறல் சத்தம் கேட்டாலே எனக்கு அலர்ஜி. அதுமட்டுமில்லாம, பேச்சாளர்கள் மேடையில், 'அளந்து' விடுவதை எல்லாம், காது கொடுத்து கேட்க முடியாது...' என்றேன்.

'சிறிது நேரம் ஜாலியா வேடிக்கை பார்த்துட்டு திரும்பிடலாம்...' என்று கூறி, வலுக்கட்டாயமாக, தன், 'டூ - வீலரில்' அழைத்து சென்றார், மாமா.

சென்னை நகரின் நடுநாயகமான பகுதி, அது. ஒரு பக்கம், கூவம் நதி மணக்க, மற்றொரு பக்கம், நான்கு தெரு கூடும் இடத்தில், பெரிய மேடை அமைத்திருந்தது, பிரதான அரசியல் கட்சி ஒன்று. நட்சத்திர பேச்சாளர்கள் எவரும் மேடையில் காணவில்லை.

'மைக்' பிடித்து பேசிக் கொண்டிருந்தார், அக்கட்சியின் இரண்டாம் கட்ட பேச்சாளர், ஒருவர். தேர்தல் வாக்குறுதி பற்றியோ, ஜெயித்து வந்தால் என்னென்ன செய்வர் என்றோ, அவர் பேசவில்லை. போட்டி கட்சியினரின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றியும், அக்கட்சியினரின் ஊழல்களையும் கழுவி கழுவி ஊற்றிக் கொண்டிருந்தார்.

'இது வேலைக்காகாது...' என்று நினைத்து, அங்கிருந்து கிளம்பி, வேறொரு பகுதியில் நடைபெற்ற, மற்றொரு கட்சியின் பிரசார கூட்டத்திற்கு சென்றோம்.

இத்தொகுதி வேட்பாளர், ஒரு பெண்மணி. அவர், மேடையில் நடுநாயகமாக அமர்ந்திருந்தார். அவர் அருகில் அமர்ந்திருந்த கட்சிக்காரர்களின் முகத்தில், '1,000 வால்ட் பல்ப்' எரிந்து கொண்டிருந்தது.

திடீரென, சமீபத்தில் வெளியான டப்பாங்குத்து சினிமா பாடல் ஒன்று ஒலிபெருக்கியில் அலற, மேடையின் மீது குதித்தேறிய கரகாட்ட கலைஞர்கள் சிலர், குத்தாட்டம் போட ஆரம்பித்தனர்.

அங்கிருந்த இளைஞர்களிடமிருந்து எழுந்த விசில் சத்தம், காதை பிளந்தது. அடுத்தடுத்து இளைஞர்கள், தங்கள் நேயர் விருப்ப பாடல்களை துண்டு சீட்டில் எழுதி அனுப்ப, குத்தாட்டம் தொடர்ந்தது.

தேர்தல் கமிஷன் அறிவித்த நேரத்திற்குள் கூட்டத்தை முடிக்க வேண்டுமே என்று, 'டென்ஷன்' ஆனார், பெண் வேட்பாளர்.

தன் எரிச்சலை அருகில் இருந்தவர்களிடம் காட்ட, ஒருவழியாக குத்தாட்டத்திற்கு முடிவு கட்டப்பட்டு, ஆட்டக்காரர்களை மேடையிலிருந்து அப்புறப்படுத்தினர்.

பெண் வேட்பாளரை அறிமுகப்படுத்தி பேச அழைத்தனர். அவரோ, தமிழை கடித்து குதறி, கொஞ்சி கொஞ்சி மிழற்ற ஆரம்பித்தார். இவரும், போட்டிக் கட்சியினருக்கு சவால் மேல் சவால் விட்டு பேச ஆரம்பித்தாரே தவிர, ஆக்கப்பூர்வமாக எதுவும் பேசவில்லை.

நான், அந்த இடத்தை காலி செய்து, தொலைவில் நின்றிருந்த, பெரியவர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

'யாருக்கு ஓட்டு போடுவீங்க?' என்று கேட்க, அவரோ, 'அதை விடுங்க தம்பி... யார் யாரெல்லாமோ வர்றாங்க. பணத்தை அள்ளித் தர்றாங்க. எப்படியும் சில பல ஆயிரங்களை சேர்த்துடுவேன். பழசாகிப் போன, என் வீட்டுக் கூரையை சரி பண்ணிடுவேன். 10 நாளைக்கு கறி, மீனுன்னு வாங்கி, வாய்க்கு ருசியா, வயிறு நிறைய நானும், என் குடும்பமும் சாப்பிடப் போறோம்.

'அப்புறம், இவனுங்க யாருக்கும் ஓட்டுப் போட போறதில்லை. என் குப்பத்துல இருக்கிறவங்ககிட்ட பேசி, அலசி ஆராய்ந்து, நல்லாட்சி தருவது யாருன்னு பார்த்து, ஓட்டுப் போடுவேன்...' என்றார்.

'இனி, இலவசம் அது இது என்றும், பணம் கொடுத்தும், ஜாதி, மதம், கவர்ச்சி எதையும் காட்டி, இவர்களை ஏமாற்ற முடியாது. விழிப்புணர்வு வந்துவிட்டது...' என்று நினைத்து, வீடு திரும்பினோம்.

டெயில்பீஸ்: நாங்கள் சென்ற இரு கூட்டங்களிலுமே இரண்டொருவர் தவிர, மற்றவர்கள், 'மாஸ்க்' அணிந்திருக்கவில்லை; சமூக இடைவெளியும் கடைப்பிடிக்கவில்லை.



வங்கிக்கு, புதிய மேலாளர் ஒருவர் வந்தார். மனிதாபிமானம் கொண்ட அவர், விடுமுறை நாட்களில் ஏழைகளுக்கு உதவுவதை, பழக்கமாக கொண்டிருந்தார்.

வங்கியில் புதிதாக பதவியேற்றதும், அங்கிருந்த அறிவிப்பு பலகையில், 'உங்கள் வீட்டில் இருக்கும் பயன்படுத்தப்படாமல், காலாவதியாகாத மருந்து, மாத்திரைகளை எடுத்து வந்து தாருங்கள். ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்ய அவைகள் பயன்படுத்தப்படும்...' என்று, எழுதப்பட்டிருந்தது.

அந்த வங்கியில், நுாற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்தனர். செய்தியை கண்டதும், மறுநாள் அந்த அறிவிப்பு பலகைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த பெட்டி நிரம்பி விட்டது.

மருந்துகளை தரம் பிரித்து, மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்று, அருகிலிருந்த ஏழை மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று வழங்கினார், வங்கி மேலாளர்.

வீணாகப் போகும் மருந்துகளை, மற்றவர்கள் பயன்படுத்தியதன் மூலம் உயிர்கள் காக்கப்பட்டதோடு, அதை கொடுத்தவர்களின் உள்ளமும் மகிழ்ந்தது.

அடுத்த மாதம், இதே மேலாளர் மற்றொரு அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, 'இந்த வளாகத்திற்குள் வரிசையாக நிறுத்தப்படும் கார்கள், சுத்தம் செய்து வைக்கப்படும்...' என்று எழுதியிருந்தது.

செய்தியை படித்தவர்கள், அதுவரை, தங்கள் கார்களை தாறுமாறாக நிறுத்தியிருந்தவர்கள், வரிசையாக நிறுத்தினர். வேலை தேடிய ஒரு இளைஞனுக்கு, கார்களை சுத்தப்படுத்தும் வேலையும் கிடைத்தது. கார்கள் சுத்தம் செய்வதால், அதன் உரிமையாளர்கள் விரும்பி கொடுப்பதே, அவன் குடும்பத்துக்கு போதுமானதாக அமைந்தது. வளாகமும் முறையாக பராமரிக்கப்பட்டது.

இப்படி அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து, வங்கி நல்ல முறையில் செயல்பட வைத்த, அந்த மேலாளரை பற்றி, பல ஆண்டுகள் நினைவு கூர்ந்தனர், ஊழியர்கள். அதுபோல், ஓர் அரசாங்கம், தன் ஆட்சிக் காலத்தில், சில அடையாளங்களை உருவாக்குகிறது. அந்த அடையாளங்களின் தடங்களை பார்த்து தான், மக்கள் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகளை தருகின்றனர்.

- இப்படி எழுதியுள்ளார், 'வாழ்வதற்கு வானமே எல்லை' என்ற, தன் நுாலில், ஆளுமை மற்றும் மனிதவள மேம்பாட்டு பயிற்சியாளரான டாக்டர் மெ.ஞானசேகர்.

இவரது கூற்றில் இருந்த உண்மையை சிந்தித்தபடி, புத்தகத்தை மூடி வைத்தேன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us