தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சகலகலாவல்லி பானுமதி! (16)

சகலகலாவல்லி பானுமதி! (16)

சகலகலாவல்லி பானுமதி! (16)


PUBLISHED ON : ஏப் 04, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சோவுக்கு கொடுத்த அதிர்ச்சி!

நாடகம் பார்ப்பதில் ஈடுபாடு கொண்டவர், பானுமதி.

நடிகர், கதை வசனகர்த்தா மற்றும் பத்திரிகையாளர் சோவின் அமெச்சூர் நாடகம் நகைச்சுவையாக, கருத்துள்ளவையாக இருக்கும் என்று கேள்விப்பட்டு, நாடகம் பார்க்க விரும்புவதாக, சோவுக்கு போன் செய்தார், பானுமதி.

தன் நாடகத்தை, பானுமதி பார்த்தது பற்றிய சோவின் பதிவு:

இவருக்கு (லட்சுமி) நேர் எதிரான ஒருவர், நடிகை பானுமதி.

அவரைப் பார்த்தாலே, ஒரு அந்தஸ்து தான் மனதில் வரும். அப்படியொரு தோரணையுடன் இருப்பார். அவருடன் சினிமாவில் நான் நடித்ததில்லை. ஆனால், அவருக்கு என்னை நன்றாகத் தெரியும். ஒருமுறை, என் நாடகத்தை பார்க்க விரும்பினார்; வரச்சொன்னேன்.

நேர்மை உறங்கும் நேரம் என்ற நாடகத்தை, முன் வரிசையில் அமர்ந்து, மிகவும் ரசித்து, உரக்கச் சிரித்து, கை தட்டி பார்த்தார். அவருடைய ரசனை, முகத்தில் தெரிந்ததை நாங்களும் கவனித்துக் கொண்டிருந்தோம்.

நாடகம் முடிந்தது. 'மேக் - அப்' அறைக்கு வந்தார்.

'நாடகம் ரொம்ப நல்லாயிருந்தது...' என்று பாராட்டி, என் கையில் ஒரு சின்ன பாக்கெட்டை கொடுத்து விட்டுப் போனார்.

நான் அதை திறந்து பார்த்தேன். உள்ளே, 5,000 ரூபாய் இருந்தது. அப்போது, அதற்கு மதிப்பு அதிகம். உடனே, 'மேக் - அப்'பை கலைக்காமல் வெளியே ஓடினேன். அவர், காரில் கிளம்புவதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.

'என்ன... இந்த மாதிரி பண்ணிட்டீங்க... இப்படி பணத்தை கொடுத்துட்டு போறீங்களே... இதெல்லாம் வேண்டாம்மா...' என்றேன். எங்களைச் சுற்றி கூட்டம் சேர்ந்து விட்டது.

'இல்லே... என்கிட்ட இப்போ இவ்வளவு தான் இருந்தது. அதனால, இதைக் கொடுத்திருக்கேன்; இல்லேன்னா இதை விட கூடுதலாக கொடுத்திருப்பேன். நான் பார்த்தது நாடகமில்லே, சாணக்கிய நீதி. அதுக்காக நான் கொடுக்கிற சமர்ப்பணம் இது. நீங்க மறுக்கக் கூடாது...' என்று சொல்லி, கிளம்பி விட்டார்.

பானுமதியம்மா கொடுத்த அந்த பணத்தை, இன்னமும் அப்படியே வைத்திருக்கிறேன். சினிமாவில் பல துறைகளில் சாதனை படைத்த பெண்மணி அவர்.

ஏராளமான கதைகளை தமிழிலும், தெலுங்கிலும் எழுதியிருக்கிறார். படங்களை இயக்கியிருக்கிறார். பல மொழிகளில் நடித்து, பாடி, இசையமைத்து இருக்கிறார். பல படங்களை தயாரித்திருக்கிறார். சொந்த ஸ்டுடியோ வைத்திருக்கிறார்.

தென் மாநில திரைப்பட உலகின், அபூர்வமான சாதனையாளர்களில் பானுமதியும் ஒருவர்.

- இவ்வாறு பதிவிட்டிருந்தார், சோ.

அன்றைய உச்ச நட்சத்திரங்களான, எம்.கே.டி.பாகவதர், பி.யு.சின்னப்பா, ஹொன்னப்ப பாகவதர், ஏ.நாகேஸ்வர ராவுடன், மூன்று படங்கள்; எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜியுடன் ஜோடியாக, தலா எட்டு படங்கள்; ஜெமினிகணேசனுடன், இரண்டு படம்...

என்.டி.ராமாராவுடன் ஜோடியாக, இரண்டு படங்கள்; கே.ஆர்.ராமசாமி, கலைவாணர், கே.டி.மகாலிங்கம், தங்கவேலு, எம்.கே.ராதா மற்றும் எஸ்.பாலசந்தர் ஆகியோருடன், தலா ஒரு படத்தில் நடித்திருக்கிறார், பானுமதி.

ஜோதிடர் சொன்னது போல், தன் மகள், திரையுலகில் உயர் அந்தஸ்து பெற்றதைப் பார்த்து, அகம் மகிழ்ந்தார், அப்பா, வெங்கட சுப்பையா. அந்த நேரத்தில், ஜோதிடத்தில் டாக்டரேட் பட்டம் வாங்கும் அளவுக்கு பெரும் ஞானம் பெற்றிருந்தார், பானுமதி.

அவர், சில வி.ஐ.பி.,க்களுக்கு சொன்னது பலித்தது.

மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ளார், பானுமதி. 1966ல், மத்திய அரசின், பத்மஸ்ரீ விருது. 1975ல், ஆந்திரா பல்கலை கழகம் வழங்கிய, கவுரவ டாக்டர் பட்டம். 1983ல், தமிழக அரசின் கலைமாமணி. 1984ல், வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகம் வழங்கிய, கவுரவ டாக்டர் பட்டம். 2001ல், மத்திய அரசின், பத்ம பூஷண் விருது மற்றும் 2013ல் பானுமதியின் சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது.

தொடரும்

சபீதா ஜோசப்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us