தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : ஏப் 04, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 04, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தம்பதியே என்றாலும்....

சமீபத்தில், கணவர் மற்றும் பிள்ளைகளுடன், திரையரங்கு ஒன்றிற்கு சென்றிருந்தேன். எங்கள் முன் இருக்கையில், நடுத்தர வயது தம்பதி அமர்ந்து, மற்றவர்களை பற்றி கவலைப்படாமல், கட்டியணைப்பது, முத்தமிடுவது என, தொடர்ச்சியாக, 'சில்மிஷ'த்தில் ஈடுபட்டு, அனைவரையும் நெளிய வைத்துக் கொண்டிருந்தனர்.

இதனால், குழந்தைகளோடு வந்த பலரும், முகம் சுளித்தபடி, அவர்களின் முன் இருக்கைக்கு இடம் மாறி அமர்ந்து கொண்டனர்.

திரையரங்க நிர்வாகியிடம் சென்று, 'சில்மிஷ' தம்பதியைப் பற்றி, புகார் கூறினார், என் கணவர்.

'தம்பதியே என்றாலும், பொது இடங்களில் அத்து மீறாதீர்கள். ஏனென்றால், திரையரங்கு உட்பட நீங்கள் புழங்கும் பல பொது இடங்களில், இப்போது கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறீர்கள்.

'தவறான நபர்கள் வசம், உங்களின், காட்சி பதிவுகள் கிடைத்தால், அதன்பின், உங்கள் மானமும், வாழ்க்கையும் பறிபோகும் வாய்ப்பிருப்பதை மறந்து விடாதீர்கள்...' என்று எச்சரித்தார், தியேட்டர் நிர்வாகி.

அதன் பிறகு தான், அந்த தம்பதி அடங்கினர். வந்தவர்களும், நிம்மதியாக திரைப்படத்தை காண முடிந்தது.

பொது இடங்களிலும் அநாகரிகமாக நடந்துகொள்ள, நாமென்ன விலங்குகளா... இதுபோன்றோர் இனியாவது திருந்தட்டும்!

- வி. நர்மதா, உளுந்துார்பேட்டை.

வியாபார நுணுக்கம்!

வெளியூரிலிருந்து வந்த ஒரு குடும்பத்தினர், எங்கள் பகுதியில், வாடகைக்கு வீடு எடுத்து குடியேறினர்.

பால் காய்ச்சிய தினத்தன்று, அனைவரையும் அழைத்து, அவர்களே சமைத்து, விருந்து வைத்தனர்.

சாப்பிட்டு முடித்து விடைபெறும்போது, தட்டை, முறுக்கு, சீடை, லட்டு மற்றும் மைசூர் பாக்கு என, அவர்கள் தயாரித்த, இனிப்பு, கார வகைகளை, ஒரு கவரில் வைத்து, அன்பளிப்பாக தந்து, வழியனுப்பினர்.

இரண்டொரு நாளில், அவர்கள் வீட்டிலேயே சிறிய அளவிலான, 'மெஸ்' மற்றும் ஸ்நாக்ஸ் கடையை துவக்கினர்.

பால் காய்ச்சும் நிகழ்ச்சியில் கொடுத்த அன்பளிப்பில், அவர்களுடைய கைப்பக்குவத்தின் ருசியை அனைவரும் அறிந்திருந்ததால், ஆரம்ப நாள் முதலே விற்பனை சூடு பிடித்தது.

சில மாதங்களிலேயே, எங்கள் பகுதியில் உள்ள சிலருக்கு, வேலை கொடுத்து, கடையை பெரிதாக்கினர்.

அவர்களின் வியாபார யுக்தியை, பாராட்டி வந்தேன்.

- ஆர். ஜெயசங்கரன், வானுார்.

எப்போதுதான் திருந்துவரோ?

என் வீட்டருகில் உள்ள, மளிகைப் பொருட்கள் வாங்கும் கடைக்காரரிடம், சமீபத்தில், தேர்தல் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.

'என்ன சார்... எல்லாரும் அயோக்கிய பசங்க... இவங்களுக்கு ஓட்டு போட்டு எந்த பிரயோஜனமும் இல்லை...' என்று, அலுத்துக் கொண்டார்.

'அப்ப, நீங்க ஓட்டு போட மாட்டீங்களா... ஓட்டு போடுவது நம் கடமை, உரிமையாச்சே... இருக்கறதுல நல்லவங்களா பார்த்து ஓட்டு போடலாமே...' என்றேன்.

'என் ஓட்டு, வெளியூர்ல இருக்கு. இதுக்காகவா ஒருநாள் செலவழிக்க முடியும். நான் ஓட்டு போட மாட்டேன்...' என்றார், அலட்சியமாக.

'ஏன், நீங்க, ஓட்டை மாத்திக்கலியா...' என்றேன்.

'அது ஒண்ணும் ரொம்ப முக்கியமில்லீங்க...' என்றார்.

அரசியல்வாதிகள், தங்கள் கடமையை செய்யவில்லை என்று வருத்தப்படும், கோபப்படும் நாம், ஓட்டு போட ஏன் முன் வருவதில்லை என்பது, ஆச்சரியமாக இருந்தது.

இவரைப் போன்றோர், ஊருக்கு பத்து பேராவது இருப்பர் என்றால், தமிழகத்தில் கணக்கெடுத்து பாருங்கள். இவர்கள், எப்போது தான் திருந்துவரோ?

கீதா சீனிவாசன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us