PUBLISHED ON : ஜூன் 13, 2021

* ஆர். நிர்மலா, சென்னை: ஒரு பத்திரிகையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பது வாசகர்களா, விளம்பரதாரர்களா, கட்சிகளின் ஆதரவா?
வாசகர்களே... அவர்களின் ஆதரவு இருந்தால் தான், விற்பனை கூடும், விளம்பரதாரர்கள் தேடி வருவர். கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டால், அக்கட்சி உறுப்பினர் மட்டுமே பத்திரிகையை வாங்குவர்; விற்பனை குறைந்தே இருக்கும்!
கீதா முருகானந்தம், கும்பகோணம்: 'டாஸ்மாக்' கடைகளை மூட, தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்குமா?
தமிழர்கள் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பதே, எல்லா ஆட்சியாளர்களின் விருப்பம். தி.மு.க., மட்டும் அதை மறுக்குமா?
மாலிசரஸா, நெசப்பாக்கம்: தினசரி நாளிதழின் ஒவ்வொரு பக்க முடிவிலும், கலர் கலராக, நான்கு, 'டாட்' போட்டுக் கொள்வதன் அர்த்தம் என்ன?
நான்கு வண்ணங்கள் தான், 'மல்டி கலர்' ஆகுது; பக்கத்தில் வெளிவரும் வண்ணப் படங்களின், 'ரிஜிஸ்ட்ரேஷன்' - பதிப்பு சரியாக உள்ளதா என்பதை, அச்சகர்கள் கவனிக்கத்தான் இந்த நான்கு புள்ளிகள்!
ப. நம்பி ஸ்ரீனிவாஸ், பணகுடி, நெல்லை: தமிழக மக்களின் நலனுக்காக, மத்திய அரசுடன், தி.மு.க., அரசின் உறவுப்பாலம் எப்படி இருக்கும்?
முதல்வர் ஸ்டானின் நடவடிக்கைகளைப் பார்த்தால், இணைந்தே இருக்கும்போல் தெரிகிறது. சில அமைச்சர்கள், இது தெரியாமல், பேட்டிகளும், அறிக்கைகளும் கொடுக்கின்றனர். அவர்களுக்கு முதல்வரின், 'அட்வைஸ்' தேவை!
ச. ஜான் பிரிட்டோ, திண்டுக்கல்: தொடர்ந்து இரண்டு ஆண்டுகள், 'குற்றாலம் போலாம் வாரீகளா?' டூர் மூலமாக, வாசகர்களை சந்திக்காத உங்கள் மனநிலை எப்படி உள்ளது?
வருத்தமாகத்தான் உள்ளது. வாசகர்களை மகிழ்விக்க முடியாமல் போய் விட்டதே என்ற ஏக்கமும் உள்ளது. அத்துடன், 'இவர் தான் அந்துமணியா... அவர் தான் அந்துமணியா?' என்ற வாசகர்களின் தேடலை காணாத ஏமாற்றமும் உள்ளது!
கே. அருணாசலம், தென்காசி: பொறியியல் படிப்பை தமிழில் படித்தால், 'சாப்ட்வேர்' நிறுவனங்களில் வேலை கிடைக்குமா?
கிடைக்காது! அத்துடன் வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கூட வேலை கிடைக்காது!
எ. சசிதரன், வேலுார்: மேற்கு வங்க முதல்வர் மம்தா நடவடிக்கைகள் பற்றி...
தலைகனம் அதிகம். சட்டசபைத் தேர்தலிலும், அவர் தொகுதியில் தோற்று விட்டார். இப்போது, பிரதமர் மோடியுடன் நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளார். பார்ப்போம், அவரது ஆட்சி நீடிக்கிறதா என்று!
* என். செல்வன், திருச்செந்துார்: நான் நினைக்கும் காரியம் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்?
ஊக்கத்தை உறுதுணையாகக் கொண்டு, சிந்தனையுடன் கூடிய செயல் திறமையுடன் காரியத்தில் இறங்க வேண்டும். அச்சமோ, அவநம்பிக்கையோ இருக்கக் கூடாது!
