
எம். கணேசன், நாகர்கோவில்: அரசியல்வாதிகள், இன்று எப்படி இருக்கின்றனர்?
ஓட்டுப் போட்ட மனிதர்களை இளித்தவாயர்கள் என்று நினைக்கின்றனர். கட்சிகளுக்குள்ளே சவால் விட்டுக் கொள்கின்றனர்; அவர்களை பழி வாங்கிட திட்டமிடுகின்றனர். அவர்களிடையே உள்ள சண்டைகளை, அவர்களை அறியாமலேயே சந்தைக்கு கொண்டு வந்து விடுகின்றனர்!
* எம். பாண்டுரங்கன், விக்கிரவாண்டி: தே.மு.தி.க.,வின் எதிர்காலம் எப்படி இருக்கும்?
அமாவாசையாகவே இருக்கும்! விஜயகாந்த் போட்டியிடவே இல்லை; அவரது மனைவி தேர்தலில் நின்று, 'டெபாசிட்'டையே இழந்து விட்டார். இனி, அக்கட்சிக்கு எதிர்காலம் இல்லை!
அ. பட்டாணிதுரை, பூப்பாண்டியபுரம், ராமநாதபுரம்: 'ஏழு பேர் விடுதலையில், அரசியல் அழுத்தம் கூடாது...' என்று, தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாரே...
சரியானது தான்! வேண்டுதல் விடுப்போரின் குடும்பத்தில் இதுபோல் நடந்திருந்தால், வாய் திறப்பரா?
* எம். மகாலிங்கம், அனுப்பார்பாளையம், திருப்பூர்: தமிழ்நாடு, தமிழகம் எது சரி?
தமிழகம் என்பதே சரியானது. ஒரு திராவிடக் கட்சியும், அதன் கூட்டணி கட்சிகளும், இந்தியாவிலிருந்து தமிழகத்தைப் பிரித்து, தனி நாடாக்க வேண்டும் என்று ஆசை கொண்டுள்ளன. அவர்களே தமிழகத்தை, தமிழ்நாடு என்று அழைக்கின்றனர், பேசுகின்றனர், எழுதுகின்றனர். அவர்களது கனவு ஒருநாளும் பலிக்கப் போவதில்லை!
ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம், தென்காசி:'வாட்ஸ் - ஆப்'பில் தினமும், 'குட்மார்னிங்' வருமா, எத்தனை?
ஓ! தினமும் காலையிலேயே வந்து விடும்... அதில் முதலில் காலை, 5:00 மணிக்கே, 'குட்மார்னிங் ஜி' என அனுப்புபவர், நடிகர் காளிதாஸ். மேலும், 10 வாசகி, 10 வாசகர்களிடமிருந்தும், 'குட்மார்னிங்' வந்து விடும். அனைவருக்கும் பதில் அனுப்பி விடுவேன்!
என். ராகவன், திசையன்விளை:நம்முடைய முதல் எதிரி யார்?
இதில் என்ன சந்தேகம்... நம் முதல் எதிரி, சோம்பல் தான்! ஆனால், நாம் யார் யாரையோ எதிரி என, நினைத்துக் கொண்டிருக்கிறோம்!
* பொ. பாலாஜி கணேஷ், சிதம்பரம்:மத்திய அரசுடன் இணக்கமான போக்கை, தி.மு.க., கடைப்பிடிக்கவில்லை என்றால், காரியங்கள் நடக்குமா?
மத்திய அரசுடன் இணக்கமாகப் போகவில்லை என்றால், 100 சதவீத காரியங்களும் நடக்குமா என்பது சந்தேகம் தான்! ஆனால், முதல்வர் ஸ்டாலின் இணக்கமாகவே இருக்கிறார் என்று தோன்றுகிறது; சில, 'களை'கள் மட்டும் அனாவசியமாக வாய் நீட்டுகின்றனர். அவர்களை அடக்கி வைக்க வேண்டியது, முதல்வரின் கடமை!