sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

உயிரோடு உறவாடு... (15)

/

உயிரோடு உறவாடு... (15)

உயிரோடு உறவாடு... (15)

உயிரோடு உறவாடு... (15)


PUBLISHED ON : ஜூன் 20, 2021

Google News

PUBLISHED ON : ஜூன் 20, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை சுருக்கம்: விபத்தில் சிறுகாயம் தான், என்பதால், அலுவலத்திற்கு வந்து கொண்டிருப்பதாக, ஜனாவிடம் கூறும்படி, பத்மஜாவிடம் தெரிவித்தாள், தமிழ்ச்செல்வி. நடிகர் சுஜித்திற்கும் தகவல் தெரிவித்து, வீட்டிற்கு சென்று உடை மாற்றி, ரிஷி மற்றும் தமிழ்ச்செல்வி இருவரும், சேனல் அலுவலகம் வந்து, 'ரிகர்சல்' பார்த்தனர். அச்சமயம் போன் செய்த சுகுமார், சேனல் அலுவலகம் வர வழி கூறுமாறு கேட்டான்-

பிரமை பிடித்தது போல் நின்று விட்டவள் காதில், ''ஏ புள்ள... என்ன பேச்சையே காணோம்?'' என்று நிமிண்டினான், சுகுமார்.

''அது... நீங்க இப்படி திடுதிப்ன்னு வருவீங்கன்னு, நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல... அன்னிக்கு கூட சும்மா சொல்றததான் நினைச்சேன்... அதான்,'' என்று சமாளிக்க முனைந்தாள், தமிழ்.

''நான் கொஞ்சம் அதிரடியான ஆளுதான்... உனக்கு, 'ஷாக்'கா இருக்கட்டும்ன்னு தான், சொல்லிக்காம வந்தேன். இருந்தாலும், உன் பேர்ல

எனக்கு கொள்ளை கோபம்... ஊருக்கு போன பிறகு, நீ ஒரு வார்த்தை பேசியிருப்பியா?''

''இங்க வேலை அப்படி... போகட்டும், கார் டிரைவர்கிட்ட போனை கொடுங்க முகவரி சொல்றேன். அப்புறம், 'சேனல்' வாசல்ல இறங்கி, 'செக்யூரிட்டி'கிட்ட என் பேரை சொன்னா, உங்கள கூட்டிகிட்டு வந்து, 'ரிசப்ஷன்ல' உக்கார வைப்பாங்க. நான் உங்கள அங்க வந்து பார்க்கிறேன்,'' என்றவள், டிரைவரிடம், முகவரியை கூறினாள்.

''சேனல் ஆபீஸ்தானேங்க... எனக்கு நல்லா தெரியும். நான் வந்துடறேன்,'' என்று, சில வார்த்தைகளில் முடித்துக் கொண்டான், டிரைவர்.

போனை, 'கட்' செய்தவள் முகத்தில், ஒரு இனம் புரியாத பதட்டம். அது துல்லியமாக புரிந்தது, ரிஷிக்கு.

''தமிழ் என்னாச்சு?''

''ஹும்... நேரமே சரியில்ல ரிஷி.''

''தப்பா சொல்றே... அது நல்லா இருக்கவும் தான் இப்ப நாம, 'ஆக்டிவா' இருக்கோம். இல்லேன்னா, நாம செத்தே கூட போயிருப்போம். எதுக்கு இப்ப உனக்கு இந்த எதிர்மறை எண்ணம், என்ன நடந்துச்சு?'' அவன் மிக உணர்வுப்பூர்வமாக கேட்க, அவனோடு தனியே ஒதுங்கி, சுகுமார் வந்து கொண்டிருப்பதை கூறினாள்.

''பார்றா... உன் ஆள் சரியான அதிரடி ஆசாமியா இருப்பாரோ... சுஜித் சார் ரசிகன்னு வேற சொல்ற... அவர் ரசிகர்கள்னாலே ஒரு தனி, 'ரேஞ்சா'தான் இருப்பாங்க போல?''

''ரிஷி, இது பாராட்டுற நேரமா? அவர் வந்தா எப்படி நம் கூட வெச்சுக்க முடியும்... நான் இப்ப அவரை, இங்க அறிமுகப்படுத்துறதும் எனக்கு சரியா படலை. அடுத்து, அவரை வெச்சுக்கிட்டு என்னால இயல்பா செயல்பட முடியாது,'' என்றாள்.

''புரியுது... சரி, நீ அவர் கவலையை விடு; அவரை நான் பார்த்துக்கறேன். நிகழ்ச்சி முடியற வரை, அவர் உன் பக்கம் வராதபடி, என் கூடவே வெச்சுக்கறேன். இங்க யாராவது கேட்டா, 'சுஜித் சாரோட நண்பர்'ன்னு சொல்லி சமாளிக்கிறேன், ஓ.கே.,?''

''உன்னால முடியுமா... அவர்

கொஞ்சம் முரடான ஆள். நம்ப, அலுவலக விதிமுறைகள் பத்தி எல்லாம் பெருசா எதுவும் தெரியாது.''

''தமிழ்... அவர் எப்படி வேணா இருந்துட்டு போகட்டும். நீ, அவரை நினைச்சுக்கிட்டே நிகழ்ச்சியை சொதப்பிடாதே... நிகழ்ச்சி முடியட்டும், அவரோட வந்து நிப்பேன்; அப்ப வேணும்ன்னா நாம சுஜித் சாருக்கு அறிமுகம் செய்து வெச்சுடலாம்,'' என்றான், ரிஷி.

''அப்படியே செய்வோம். நான், உன்னை நம்பி தான் நிகழ்ச்சிக்கு போறேன். 'டேக் கேர்' ஒரு 10 நிமிஷத்துல, வரவேற்பறைக்கு வந்துடுவார்... வந்த உடனே கேன்டீனுக்கு கூட்டிகிட்டு போய், எதாவது வாங்கிக் கொடுத்து சமாளி,'' என்றாள்.

''அதெல்லாம் என் பாடுன்னு சொல்லிட்டேன்ல... நீ போய் வேலையை பார்,'' என்றான்.

தமிழ்ச்செல்வியை அனுப்பிவிட்டு, தான் வைத்திருந்த, 'பைல்'களை பத்மஜாவிடம் தந்து, தன் சார்பில் செய்ய வேண்டியதை சொன்னவன், அடுத்து நேராக, வரவேற்பறையில் போய் நின்றான்.

வரவேற்பறை ஹாலில், பத்து, 'டிவி'கள் ஓடிக்கொண்டிருந்தன. அவ்வளவிலும் சேனலின் அப்போதைய நிகழ்வு ஓடியபடி இருக்க, முன்னால் நவீனமான சோபாக்கள். உட்கார்ந்தால் எழுந்திருக்கவே பிடிக்காது. அப்படியே அமர்ந்திருக்க தான் பிடிக்கும். அவ்வளவு நவீனமான குஷன் சோபாக்கள்.

சோபாக்களின் முன் மோடோக்கள்... அதன் மேல் அன்றைய தினசரி நாளிதழ்கள் கிடந்தன. சிலர் அமர்ந்து, 'டிவி' பார்த்தபடி இருக்க, சிலர், நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருக்க, சுகுமாரை, கச்சிதமாக உள்ளே அழைத்து வந்து விட்டான், காவலாளி.

ஜீன்ஸ் பேன்ட், டி - ஷர்ட், கழுத்தில் புலி நகச்செயின், பட்டை பிரேம் கூலிங்கிளாஸ் என்று, கிராமத்து மைனரின் அமர்க்களம் அவனிடம் கூத்தாடிக் கொண்டிருந்தது. சட்டை காலருக்கு பின்னால் பெரிதாக கர்ச்சீப்பை விரித்து, காலர் அழுக்காகாதபடி தடுத்திருந்தான். இதெல்லாமே மதுரை ஸ்டைல்!

உள்ளே வந்தவனிடம், முன்னே சென்று அறிமுகப்படுத்திக் கொள்ளத் துவங்கினான், ரிஷி.

''ஹலோ சார்... நீங்கதானே மிஸ்டர் சுகுமார்?''

''ஆமா.''

''ஐ ஆம் ரிஷி... நீங்க வரப்போற விஷயத்தை சொல்லி, உங்களை பார்த்துக்கச் சொன்னாள், தமிழ்.''

ரிஷியின் அந்த பதில், சுகுமார் புருவத்தில் வரிகள் விழச் செய்தது.

''ஆமா, தமிழ் இப்ப எங்க?''

''அவங்க இப்ப, 'ரிகர்சல்' பார்த்துக்கிட்டு இருக்காங்க... நீங்க வாங்க, நாம முதல்ல கேன்டீனுக்கு போய் காபி சாப்பிடுவோம்,'' என்று, சுகுமாரின் பதிலை எதிர்பார்க்காமல், அருகில், 'ரிசப்ஷன் கவுன்டரு'க்கு அவனை அழைத்துச் சென்றான்.

''லில்லி... ஒரு, 'விசிட்டர் பாஸ் டேக்' கொடு,'' என்று கேட்டான்.

நிமிர்ந்து பார்த்தவள், ''எதுக்கு வந்திருக்காங்க?'' என்றாள், லில்லி.

''சுஜித் சார், நண்பர் இவர். சார் தான் அனுப்பியிருக்கார்,'' என்று, ரிஷி கூறவும், சுகுமாரை ஒரு மாதிரியாக பார்த்தாள், லில்லி. ஆனால், அந்த பொய், சுகுமாருக்கு பிடித்து விட்டது. அதேவேளை, சுகுமாரின் தோற்றமும், பார்வையும், இவனா அவ்வளவு பெரிய நடிகரின் நண்பன் என்பது போல் அவளை சற்று யோசிக்க வைத்து, ''பேர் என்ன?'' என்றாள்.

உடனே ரிஷி, சுகுமாரை பார்த்திட, அவனும், ''சுகுமார்,'' என்றான். சற்று இடைவெளிக்கு பிறகு, ''பி.ஏ.,'' என்றான்.

லில்லிக்கு மட்டுமல்ல, ரிஷிக்குமே சுருக்கென்று இருந்தது. அதற்குள் அவள் பெயரை எழுதி, பாஸ் போல்டரில் போட்டு, அந்த போல்டர் கொண்ட மாலையை தர, அதை சுகுமாரை அணிந்துகொள்ளச் சொன்னான், ரிஷி.

''இதை கட்டாயம் போட்டுக்கணுமா?''

''ஆமா... நீங்க யாருங்கிறதை உங்ககிட்ட கேட்காமலே தெரிஞ்சுக்க முடியும். அப்புறம் இங்க எல்லா இடத்துலயும், சி.சி.டி.வி., கேமரா இருக்குறதால, 'செக்' பண்ணிக்கிட்டே இருப்பாங்க. எம்.டி.,யே கூட கழுத்துல இந்த அட்டையோட தான் உள்ள நடமாடுவாரு... இது, இங்க விதி,'' என்றபடியே, கேன்டீன் நோக்கி நடந்தான், ரிஷி.

சில்லென்ற, 'ஏசி' குளிர், கண்ணாடிகளும், மார்பிள் கற்களுமான சுற்றுச்சூழல், பளிச்சென்ற எல்.இ.டி., விளக்குகளின் வெளிச்சம் என்று, அந்த இடமே, ஒரு புது உலகமாக காட்சியளித்தது, சுகுமாருக்கு.

''ஆமா, தமிழோட, 'ரிகர்சல்' எப்ப முடியும்?''

''எப்படியும் அரை மணி நேரமாகும். அப்படியே சுஜித் சார் புரோகிராம், 'லைவ்ல ஸ்டார்ட்' ஆயிடும். சார் இப்ப வந்துகிட்டிருக்கார்.''

''சார் கூட நான் கொஞ்சம் மனம் விட்டு பேசணும்... எங்க கல்யாணத்துக்கும் கூப்பிடலாம்ன்னு இருக்கேன். வருவாருல்ல?''

''தாராளமா... சுஜித் சாருக்கு ரசிகர்கள் மேல எப்பவுமே ஒரு தனி பாசம் உண்டு. அதுலயும், தமிழ்னா கட்டாயம் வருவார்.''

''ஆமா... அப்படி இந்த புள்ள, என்னத்த சாதிச்சா? இங்க வேலைக்கு சேர்ந்தே ஆறு மாசம் தான் இருக்கும்ன்னு நினைக்கிறேன். சரிதானே?''

சரேலென்று அவன் தமிழ் பற்றி அப்படி ஒரு கேள்வி கேட்பான் என்று, கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, ரிஷி.

''தமிழ், வேலைக்கு சேர்ந்து கொஞ்ச நாள் தான் ஆகியிருக்கலாம். ஆனா, ரொம்ப புத்திசாலி... புது புது ஐடியாக்கள் கொண்டவ,'' என்று சொல்லி சமாளித்தான், ரிஷி.

''அது சரி... இவ போயி எப்படி சுஜித் சாரை பிடிச்சா... உங்க சேனல்ல அனுப்பிச்சாங்களா?'' சுகுமாரின் கேள்விகள், தமிழ்ச்செல்வி ஒன்றும் பெரிய புத்திசாலியெல்லாம் இல்லை என்பது போலவே இருந்தன.

தமிழ்ச்செல்வி மேல் ஒரு இனம்புரியாத பொறாமைக்குள், அவன் இருப்பது, ரிஷிக்கும் புரிந்தது.

''ஆமா, இத பத்தியெல்லாம், தமிழ் உங்ககிட்ட எதுவும் சொல்லலியா?'' என, ரிஷி கேட்டபோது, கேன்டீன் வந்து விட்டது.

கேன்டீன் டேபிள் முன் அமர்ந்தபடி, ''சுஜித் சாரை வெச்சு ஒரு நிகழ்ச்சின்னு மட்டும் தான் சொல்லிச்சு. நானும் ரொம்ப நோண்டலை. கழுத எங்க போயிடப் போறா... எல்லாம் இன்னும் ஆறு மாசமோ, இல்ல ஒரு வருஷமோ?'' சற்று அலட்சியமாக கூறினான், சுகுமார்.

''அப்புறம்?''

''வேலைய விட்டுடுன்னு கண்டிஷனா சொல்லிட்டோம்ல... பொட்டக்கோழி கூவியா பொழுது விடியப் போகுது... இவ வேலை பார்த்து சம்பாதிச்சு, அதுல சாப்பிட நானும் ஒண்ணும் வெறும் பய இல்ல... என்ன நான் சொல்றது?'' என்றான், சுகுமார்.

''வெறும் பய இல்லைன்னா...

எனக்கு புரியல?''

''அது, எங்க ஊர் பாஷை. அதாவது, நான் நிறைய சம்பாதிக்கிறவன்னு அர்த்தம். ஆமா, நீங்க என்ன ரிஷின்னு பேர் வெச்சுட்டிருக்கீங்க, அது, சாமியாருங்க பேராச்சே?''

''கூப்பிட சின்னதா இருக்கணும்ன்னு அப்பா - அம்மா வெச்ச பேர். ரிஷின்னா சாமியார் மட்டும் அர்த்தமில்லை. பெரிய ஞானி... அதாவது, மேதாவின்னும் அர்த்தம்,'' என்றான்.

''அப்ப, நீங்க மேதாவின்னு சொல்லுங்க,'' என்றான், சுகுமார்.

சகஜமாய் கேட்டானா, இல்லை குதர்க்கமாய் கேட்டானா என்பது தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் புரிந்தது. தமிழ் சொன்னது போல், சற்று முரடான ஆள் தான்.

அவன் கேள்விக்கு பதில் கூறாமல், போண்டாவுக்கும், காபிக்கும், 'ஆர்டர்' செய்தவன், அவனருகே அமர்ந்திருக்கப் பிடிக்காமல், எழுந்து போய் கேட்டரிங் டேபிள் அருகே காத்திருந்து, சுடச்சுட எடுத்து வந்து டேபிள் மேல் வைத்தான், ரிஷி.

திரும்பி போய் ஒரு கப் சட்னியை எடுத்து வருவதற்குள், போண்டாவை விழுங்கி ஒரு மாதிரியாக சிரித்தான், சுகுமார்.

''சட்னி இல்லாமலே சாப்பிட்டீங்களா... அவ்வளவு பசியா?'' என்று கேட்ட ரிஷியிடம், ''பொறவு... விமானத்தை விட்டு இறங்கி, நேரா இங்கல்ல வரேன். விமானத்தில் திங்க குடுப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, நான் வந்த விமானத்துல தண்ணிய கூட கேட்டு தான் கொடுத்தாங்க,'' என்று குற்றப்பத்திரிகை வாசித்தான்.

''அப்ப, தோசை, 'ஆர்டர்' பண்ணட்டுமா... சாப்பிடறீங்களா?''

''தாராளமா... ஆமா, ஆம்லெட்டு, முட்ட பரோட்டால்லாம் கிடையாதா?''

''ஐயோ, இது, 'சப்சிடி'ல நடக்கற கேன்டீன். அதெல்லாம் கிடையாது. ஒருநாள் தோசை, ஒருநாள் பூரி இப்படி மாறி மாறி போடுவாங்க,'' என்றான், ரிஷி.

''எனக்கு எப்பவும் சாப்பாட்டுல வஞ்சனையே கிடையாது. அதே மாதிரி, மட்டன் இல்லாட்டியும் சோறு எறங்காது,'' என, அவன் சொல்லச் சொல்ல, தமிழ் அவனோடு என்ன பாடுபடப் போகிறோளோ என்று தான், ரிஷியின் மனதுக்குள் ஓடியது.

இடையிட்டது அவன் கைபேசி. காதில் நுழைந்தாள், தமிழ்.

''ரிஷி, வந்துட்டாரா... இப்ப எங்கே இருக்கே?''

''கேன்டீன்ல தமிழ்,'' சொல்லிக் கொண்டே விலகிச் சென்று பேசினான்.

''பிரச்னையில்லையே?''

''சமாளிச்சுகிட்டிருக்கேன்... கால்ல அடிபட்ட இடத்துல வலி வேற அதிகமா இருக்கு. நான் என் கேபினுக்கு கூட்டிக்கிட்டு போய், மானிடர் முன் உட்கார வெச்சுடறேன். நீ முடிக்கவும் கூட்டிகிட்டு வரேன்.''

''நேர்ல பார்க்கணும்ன்னு சொன்னா?''

''யாருக்கும் அனுமதியில்லே... எனக்கே கிடையாதுன்னு சொல்லிடறேன். இதையெல்லாம் நினைச்சு நீ நிகழ்ச்சியை விட்றாதே,'' என்றான், ரிஷி.

''என்னால பார்... நீயும் ஒதுங்கி இருக்க வேண்டிய நிலை.''

''போகட்டும்... ஜனா சார் எதுவும் சொதப்பலையே?''

''ஸ்டேஜ் பக்கமே வரலை. ஆனா, அந்தாளை சும்மா விடவே கூடாது.''

''நிகழ்ச்சி முடியட்டும் பேசிக்கலாம். இப்ப நீ நிகழ்ச்சியை மட்டும் யோசி,'' என பேசி திரும்பிய ரிஷியை, உற்று பார்த்தபடி இருந்தான், சுகுமார்.

''கொஞ்ச நேரத்துல தோசை வந்துடும்,'' என்றபடி எதிரில் அமர்ந்தான், ரிஷி.

''ஆமா... தமிழ் ஏன் இன்னும் வரலை... இப்ப, அவதானே உங்க கூட பேசினது?'' என, சுகுமார் கேட்க, ரிஷியிடம் சின்ன தடுமாற்றம். அப்போது, சுகுமாரை பார்த்தபடியே கேன்டீனுக்குள் நுழைந்து கொண்டிருந்தார், ஜனா.

தொடரும்

இந்திரா சவுந்தர்ராஜன்







      Dinamalar
      Follow us