
ஆ. கணேஷ், திசையன்விளை: மே.வங்க முதல்வர் மம்தா பேனர்ஜியிடம் இருப்பது, வைராக்கியமா, தலைகனமா?
இரண்டாவதே சரி... தான் போட்டியிட்ட தொகுதியில் தோற்ற போதும் இன்னும் தலைகனம் குறையவில்லை. பிரதமர் சந்திப்புக்குக் கூட, அவரை, அரை மணி நேரம் காத்திருக்க வைத்தாரே, அது என்ன... தலைகனம் தானே!
ஆர். கணேசன், பாபநாசம்: ரகசியங்களை நெருங்கிய நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளலாமா?
பகிரவே பகிராதீர்கள். ரகசியங்களை ரகசியமாகவே கொள்ளுங்கள். பகிர்ந்து கொண்டால், அவர்கள் உங்களுக்கு முக்கிய எதிரியாக மாறி விடுவர்.
* எம். கருணாகரன், சென்னை: அ.தி.மு.க.,விடமும், மக்கள் மீதும் அதிக அக்கறை தனக்கு உள்ளதாக, இப்போது காட்டிக் கொள்ளும் சசிகலா, 'கொரோனா' நிவாரண நிதியாக எதுவும் கொடுக்கவில்லையே?
கோடிக்கணக்கான சொத்து உள்ளது... ஆனால், பாவம் எல்லாம், 'பினாமி' பெயர்களில் உள்ளதே! இப்போது எடுத்து நீட்டினால், மீண்டும் மாட்டிக் கொள்வாரே... அதனால் தான்!
பி.வி. ரவிக்குமார், சென்னை: ஒரு வாசகருக்கு ஒருமுறை பதிலளித்து விட்டால், மீண்டும், அந்துமணியாரிடமிருந்து பதில் வரவழைக்க முடியாது என்கிறாரே, என் நண்பர்...
கேள்வியைப் படிக்கும் முன், அதைக் கேட்ட வாசகரின் பெயரையும் இனி தவறாமல் படித்து மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள்... அப்போது புரியும் உங்கள் நண்பரின் கூற்று தவறு என்பது
எம். கதிரேசன், தென்காசி: என் போன்ற ஏழைகள் பணக்காரர்களாக முடிவதில்லையே... பணக்காரர்கள் மட்டும் மேலும், மேலும் பணக்காரர்களாகின்றனரே...
ஏழைகள் என்றும் ஏழைகள் தான் என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள். திறமை, நம்பிக்கை, முயற்சி மற்றும் வாய்ப்பு சேரும்போது ஏழையும், பணக்காரன் ஆகலாம்!
த. சிவாஜி மூக்கையா, சென்னை:ஆட்சியாளர்கள் எதை புறம் தள்ள வேண்டும்?
லஞ்சம், ஊழல், அடாவடித்தனங்களை புறம் தள்ள வேண்டும். மத்தியில் ஆள்பவர்கள் தம் கூட்டணி கட்சி இல்லை என்றாலும், அவர்களுடன் அனுசரித்து செல்ல வேண்டும்!
* வி. கோபால், பாளையங்கோட்டை: என்னை என் நண்பன் சிக்கனக்காரன் என்கிறானே...
வெரி குட்! நீங்கள் நியாயமான செலவுகளை மட்டும் செய்கிறீர்கள் என்று அர்த்தம். செலவு செய்வதே நியாயமில்லாதது என நினைப்பவன் தான் கஞ்சன்!