PUBLISHED ON : ஆக 15, 2021

* த. சிவாஜி மூக்கையா, சென்னை: கட்சி துவக்கி, 33 ஆண்டுகள் கடந்தும், ஆட்சியை பிடிக்க முடியவில்லையே என்று, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் புலம்புகிறாரே...
கட்சியை ஆரம்பிக்கும்போதே, நெடுஞ்சாலைகளில் இருக்கும் மரங்களை வெட்டிப் போட்டு, மக்களுக்கு இடைஞ்சல் செய்தாரே... அதை மக்கள் மறந்து விடுவரா? இவர் கட்சிக்கு ஓட்டுப் போடுவரா?
எஸ்.ஏ.தீக்கனல் சவரியார், திண்டுக்கல்: தங்களது, பார்த்தது, கேட்டது, படித்தது மற்றும் கேள்வி - பதில் தொகுப்பை பலமுறை படித்து, ரசித்தாயிற்று... அடுத்த படைப்பு எப்போது?
தயாராகி வருகிறது. 'தாமரை பிரதர்ஸ் மீடியா' நிறுவனமும் இதையே தான் கேட்டு வருகிறது; விரைவில் தொகுப்பை முடித்து விடுகிறேன்!
அ. சம்பத், சின்னசேலம்: தமிழகத்தில் தனி கொங்கு நாடு பிரிவினைவாதம் ஆகாதா?
அதிகாரப் பரவலாக்கல் மற்றும் வளர்ச்சி பரவலாக்கல் மூலம் மக்களுக்கு நன்மையே!
* கே. அருணாசலம், தென்காசி: போலீசாருக்கு வார விடுமுறை கொடுத்து இருப்பது பற்றி...
அவர்களும் மனிதர்கள் தானே; ஓய்வு வேண்டாமா? முதல்வர் வீட்டிலிருந்து அவரது அலுவலகம் வரை, காலை முதல் அவர் வீடு திரும்பும் வரை, சாலையின் இருபுறமும் போலீசார் கால் கடுக்க நின்று கொண்டுதானே இருக்கின்றனர்... இது தேவையா?
கி.பாலமுருகன், பெருநாழி: கொங்கு நாடு விவகாரம், நம் பத்திரிகையில் மட்டுமே வருகிறதே... மற்ற இதழ்களில் காணோமே...
மத்திய அமைச்சர் ஒருவர் நம்மை மட்டுமே அழைத்துச் சொன்னதால் இருக்குமோ...
* ர.ச.சந்திரசேகர், சென்னை: 'பீகாரிகள் அறிவீலிகள்' என, அமைச்சர் கே.என்.நேரு கூறுகிறாரே...
இந்தத் தேர்தலில் இவர்கள் வெற்றி பெற, அறிவுரை கூறிய பிரசாந்த் கிஷோர் யார்? பீகாரி தானே... அவருக்கு, 360 கோடி ரூபாய் கொடுத்தனரே... யார் அறிவாளி?
டி.பி. விஜயராகவன், சென்னை: ஆந்திர மாநிலத்தை, தெலுங்கானா, ஆந்திரா என்று பிரித்ததைப் போல், கொங்கு நாடு, தமிழகம் என்று பிரித்தால் நன்மையா, தீமையா?
யூனியன் பிரதேசமாக, கொங்கு மண்டலம் பிரிக்கப்பட்டால், அப்பகுதி மக்களுக்கே லாபம்! மற்ற மாவட்ட அரசியல்வாதிகளுக்கு நஷ்டம்!
